

பல கோடி வருடங்களுக்கு முன்பு, மிகப் பழைமையான கண்டங்களும், அதன் பின்னர் தொடக்க கால மலைத் தொடர்களும் உருவாகியது. நாம் இப்போது பார்க்கும் கண்டங்கள் உருவாகும் முன்னர், பூமியின் மேற்பரப்பு அமைதியாக இல்லாமல் இருந்தது. பூமியின் டெக்டோனிக் தட்டுக்கள் அடிக்கடி நகர்ந்த வண்ணம் இருந்தன. கடந்துபோன பல கோடி ஆண்டுகளில், இந்த மிகப் பழைய நிலப்பரப்புகளில் பலவும் உருமாறி அழிந்து போயின. இதற்கு உதாரணமாக டெதீஸ் கடலைப் பற்றி கூறலாம். இந்த கடல் தொடர்ச்சியாக பக்கவாட்டு அழுத்தத்தால் உயர்ந்து, உலகின் மிகப் பெரிய உயரமான இமயமலைத் தொடராக மாறியது. அதே நேரம் உயரமான மலைத் தொடர்கள் தாழ்ந்து போய் பெருங்கடல்கள் உருவாகின.
நிலப்பரப்புகள், பூமி தோன்றிய காலத்தில் இருந்து பல உருவங்களாக மாறினாலும், 360 கோடி ஆண்டுகள் கடந்து, தங்கள் உருவம் மாறாமல் அப்படியே மலையாக இருப்பது உலகின் இரு மலைகள்தான். அவை தென்னாப்பிரிக்காவில் உள்ள பார்பர்டன் கிரீன்ஸ்டோன் பெல்ட் மற்றும் இந்தியாவில் ஆரவல்லி மலைத்தொடர் ஆகும்.
பார்பர்டன் கிரீன்ஸ்டோன் பெல்ட்: ஆரம்ப கால பூமியின் ஜன்னலாக இருககும் பார்பர்டன் கிரீன்ஸ்டோன் பெல்ட் மலைத்தொடர்தான், உலகிலேயே மிகப் பழைமையான கண்டத்தின் மையப் பகுதிகளான காப்வால் க்ராட்டனை சேர்ந்தது. இதன் புவியியல் முக்கியத்துவத்தை உணர்ந்த யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக இதை அறிவித்துள்ளது. நிலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் புவியியலாளர்கள், ஆரம்ப கால பூமி எப்படி இருந்தது என்பதைப் பார்க்கும் ஒரு ஜன்னலாக இந்த பார்பர்டன் பகுதியை குறிப்பிடுவது வழக்கம்.
இந்த மலையின் பாறைகளுக்கிடையில் பல நுண்ணுயிரிகளின் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பூமியின் முதலில் தோன்றிய உயிராக இருக்கும் என்று கருதுகோள்கள் உள்ளன. மேலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வளி மண்டலம் மற்றும் கடல்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவுகின்றன.
ஆரவல்லி மலைத்தொடர்: இந்தியாவில் அமைந்துள்ள ஆரவல்லி மலைத்தொடர் பூமியில் தோன்றிய இன்னொரு மிகப் பழைமையான மலைத் தொடராக உள்ளது. ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரவியுள்ள இந்த ஆரவல்லி மலைத்தொடர், சுமார் 320 கோடி ஆண்டுகள் பழைமையானது. ஒரு காலத்தில் இந்த ஆரவல்லி மலைகள் இமயமலையை விட மிகவும் உயரமாக இருந்துள்ளது. ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளில் ஆரவல்லி மலைத்தொடர், புயல், மழை, காற்று, மண்ணரிப்பு போன்றவற்றால் பெருமளவில் அதன் உயரம் குறைந்து விட்டது. இமயமலை தொடர்ச்சியாக மேலே உயர்ந்து விட்டது.
புவியியல் ரீதியாக இந்த மலைத்தொடர் இந்தியக் கேடயம் என்ற பகுதிக்குச் சொந்தமானது. இந்தியக் கேடயம் என்பது பல கோடி ஆண்டுகளாக, இந்திய துணைக் கண்டத்தின் நிலையான மையப் பகுதியை குறிக்கும். பல கோடி ஆண்டுகளாக நடந்த டெக்டோனிக் தட்டுக்களின் நகர்வு, அழுத்தம் ஆகியவற்றைக் கடந்து, பல புவியியல் செயல்பாடுகளையும் தாங்கி இந்த இரண்டு மலைகளும் பூமியில் நிலைப்பெற்றுள்ளன. பூமி தோன்றிய ஆரம்பம் முதல் இன்று வரையிலும் இந்த இரு மலைகள் புவியியல் அதிசயங்களை விளக்கும் சான்றுகளாக உள்ளன.