
நாம் அடிக்கடி சோர்வாக உணரும்போதும், உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த ஜூஸ், காபி, தேநீர் போன்றவற்றை விரும்பிக் குடிப்போம். இது பெரும்பாலான இந்தியர்களின் பிரதான பழக்கமாகவே உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். எப்படி டீ என்றாலே பல ரகங்கள் இருக்கிறதோ, அதேபோல காபியிலும் பல்வேறு வகைகள் உள்ளன. இந்தப் பதிவில் உலகிலேயே விலை உயர்ந்த காபி பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காபியாகக் கருதப்படுவது இந்தோனேஷியாவின், ‘லுவாக் காபி’தான். ஒருவேளை நீங்கள் காபி ரசிகராக இருந்தால், இந்த காபி பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த காபியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?
இந்த காபியில் பயன்படுத்தப்படுவது முற்றிலும் வித்தியாசமான காபி கொட்டை அல்ல, சாதாரண காபி பீன்தான். ஆனால், இது மற்ற காபி கொட்டைகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக பிராசஸ் செய்யப்படுகிறது. இதன் விலை கிலோவிற்கு 1300 அமெரிக்க டாலர்கள் என விற்கப்படுகிறது. இது இவ்வளவு விலை விற்பதற்கு அந்த காபியில் என்ன மாற்றம் செய்யப்படுகிறது என்றால், அது ஒரு பூனையால் சாப்பிடப்பட்டு அதன் மலத்திலிருந்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது.
இந்தோனேஷியாவில் சிறிய பூனை போலவே இருக்கும் Civet என்ற பாலூட்டிகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த பூனை இனங்கள்தான் உலகிலேயே விலை உயர்ந்த காபி கொட்டைகளை பிராசஸ் செய்கிறது. முதலில் காபி பீன்கள் இந்த பூனைகளால் உண்ணப்படும். பின்னர் அவை அவற்றின் வயிற்றின் உள்ளே சென்று செரிமான அமைப்பு மூலம் பிராசஸ் செய்யப்பட்டு, மலமாக வெளியேறுகிறது.
Civetகளின் செரிமான அமைப்பு காபி கொட்டையின் சுவையை முற்றிலுமாக மாற்றி அதற்கான தனி சுவையை கொடுக்கிறது. இப்படி பிராசஸ் செய்யப்பட்ட கொட்டைகளை அரைத்து உருவாக்கப்படுவதுதான் லுவாக் காபியாம். இந்த காபி சராசரி காபியை விட குறைந்த கசப்புடனும், பருகுவதற்கு சுவை மிகுந்ததாகவும் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்த வித்தியாசமான காபி தயாரிக்கும் முறை தற்செயலாக தொடங்கியிருந்தாலும், தற்போது அந்த பூனைகளை கூட்டில் அடைத்துவைத்து, இந்த வகை காபி பீன்களை உருவாக்குவதற்காகவே வளர்க்கிறார்கள். இதுவரை சுதந்திரமாக தங்கள் விருப்பம்போல அனைத்தையும் உண்டு வாழ்ந்த இந்த பூனைகளின் வாழ்க்கையை சிறைப்படுத்தி இத்தகைய செயலை செய்கின்றனர். ஆனால், பொருளாதார ரீதியாக இதற்கு அதிக பலன் கிடைப்பதால் இதை யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.