
இறைவனின் படைப்பில் உருவான ஏராளமான உயிரினங்கள் ஒவ்வொன்றும் அதன் வாழும் காலம், விசித்திரமான வாழ்க்கை முறையில் வித்தியாசப்படும் வகையில் அமைந்துள்ளன. அவற்றுள் சில சுமார் முன்னூறு ஆண்டுகள் வரையும், வேறு சில நாள் கணக்கிலும் வாழ்ந்து மடிகின்றன. அற்ப ஆயுள் கொண்ட விலங்குகளும், பிறந்து வேகமாக வளர்ந்து வாலிபத்தை எட்டி, இனப்பெருக்கம் செய்து, சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அர்த்தமுள்ள இனிய வாழ்க்கை வாழ்ந்து, அதன் பின்பே மரணிக்கின்றன. அவ்வாறான 10 வகை உயிரினங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. மே ஃபிளை (Mayfly): குறைந்த காலமே வாழக்கூடிய பூச்சி இனம் மே ஃபிளை. இது பிறந்து, பின் வாலிப நிலையை எட்டிய பின் 24 மணி நேரமே வாழக் கூடியது. அந்தக் குறுகிய நேரத்தில் அது உணவு கூட உண்ணாமல் தனது பார்ட்னரைக் கண்டுபிடித்து, புணர்ந்து, தெளிந்த நீர் நிலையில் முட்டைகளை இட்டுவிட்டு இறந்து விடும். முட்டையிலிருந்து வெளிவரும் வாட்டர் நிம்ப் (aquatic nymph) எனப்படும் லார்வாக்கள் நீருக்குள்ளேயே (சில வாரங்கள் முதல் இரண்டு வருடம் வரை கூட) இருந்து உண்டு வளர்ந்து இறக்கை முளைத்ததும் முழுமையுற்ற பூச்சியாக வெளியே வரும்.
2. ஆன்ட்லயன்ஸ் (Antlions): லார்வல் ஆன்ட்லயன்ஸ் மணல் பரப்பில் குழி தோண்டி அமர்ந்துகொண்டு அதற்குள் பொறி அமைத்து பூச்சிகளைப் பிடித்து உட்கொண்டு வாழும். இப்படியே 1 முதல் 3 வருடம் வரையிருந்து, பின் இறக்கை முளைத்து பூச்சியானதும் வெளி வந்து விடும். அதன் பின் அதன் வாழ்வு நாட்கணக்கில் மட்டுமே நீடிக்கும். அதற்குள் அது துணையைத் தேடி இனப்பெருக்கம் செய்துவிட்டு இறந்து விடும்.
3. காஸ்ட்ரோட்ரிச் (Gastrotrich): இது ஒரு தெளிந்த நீரில் வாழும் உயிரினம். இதன் வாழ்வு 2 முதல் 3 நாட்கள் மட்டுமே நீடிக்கக் கூடியது. மிகச்சிறிய உடலமைப்பு கொண்ட இது, சுறுசுறுப்புடன் உண்டு, உறங்கி, வளர்ந்து தனது லைஃப் சைக்கிள் முடியும் தருவாயில் இனப்பெருக்கத்தை முடித்து இறந்தும்போய் விடும்.
4. லூனா மோத்: வியக்க வைக்கும் உடலமைப்பு கொண்ட இப்பூச்சியை இந்தியாவிலும் வட அமெரிக்காவிலும் காணலாம். இதன் கூட்டில் (Cocoon) இருந்து வெளி வந்த பின் அதன் வாலிபம் 5 முதல் 7 நாட்கள் மட்டுமே நீடிக்கும். அப்போது அதற்கு வாய் இருக்காது. அதனால் உண்ண முடியாது. கூட்டுப் புழுவாக இருந்த நேரத்தில் சேமித்து வைத்த சக்தியை உபயோகித்து, துணையைத் தேடி இல்லறத்தில் ஈடுபட்டு முட்டையிட்டுவிட்டு இறந்துவிடும்.
5. சில்க் மோத் (Silk Moth): இந்தியாவில் பட்டு உற்பத்தி தொழிற்சாலைகளில் வளர்க்கப்படுவது. இதன் வாலிபம் 4 முதல் 6 நாட்கள் மட்டுமே நீடிக்கும். லூனா மோத் போலவே குக்கூனிலிருந்து வெளிவந்த பின் உணவு உட் கொள்ளாமல் இனப் பெருக்கத்திற்கு மட்டும் உதவி புரிந்துவிட்டு இறந்துவிடும்.
6. மிட்ஜ் (Medge): வளர்ந்த பூச்சியான பின், நீர் நிலைகளுக்கருகில் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும் மிட்ஜ் எனப்படும் இதன் வாழ்நாள் 3 முதல் 5 நாட்கள் மட்டுமே. இந்தக் குறுகிய காலத்தில் இது தனது இனப்பெருக்கத்திற்கான வேலைகளை திறம்படச் செய்து முடிப்பதுடன், பறவை, மீன் போன்ற மற்ற உயிரினங்களுக்கு உணவாகவும் பயன்படுகிறது.
7. ட்ரோன் ஆன்ட்ஸ் (Drone Ants): ட்ரோன் ஆன்ட்ஸ் எனப்படும் இந்த ஆண் எறும்பு கூட்டத்தில் உள்ள எறும்புகளுக்கு ராணி எறும்புடன் சேர்ந்து இனப்பெருக்கத்திற்கு உதவுவது மட்டுமே வேலை. அதன் பின் சில தினங்களில் அதன் வாழ்வு முடிந்து விடும். உணவு சேகரிப்பதோ, கூடு கட்ட உதவுவதோ அவற்றின் வேலை அல்ல.
8. எபிமெரல் மேஃபிளை (Ephemeral Mayflie): மேஃபிளை இனத்தில் ஒரு வகையான இது, அடல்ட் நிலையடைந்து, நீரை விட்டு வெளிவந்தபின், துணையைத் தேடி, இனப்பெருக்கத்திற்கு முட்டைகளை இடும் வரை மட்டுமே இதன் வாழ்வு நிலைக்கிறது. லார்வா நிலையில் நீருக்குள் இருக்கும்போது சுமார் ஒரு வருடம் கூட இது வளர்ந்து கொண்டிருக்கும்.
9. கோஸ்ட் மிட்ஜ் (Ghost Midge): இதனுடைய அடல்ட் நிலையும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே நீடிக்கக் கூடியது. அதற்குள் இனப்பெருக்கத்திற்கு உதவி புரிந்துவிட்டு இறந்து போய் விடுகிறது.
10. கால் மிட்ஜ் (Gall Midge): மிகச் சிறிய உருவம் கொண்ட இந்த ஈ, இரண்டு மூன்று தினங்கள் மட்டுமே வாழும். அதற்குள், தான் முட்டை இடுவதற்கு ஏற்ற தாவரங்களை தேடிக் கண்டுபிடித்து, அத்தாவர திசுக்களின் மீது தனது முட்டைகளை இட்டு, அத்திசுக்களில் சிறு வளர்ச்சி உண்டாகும்படியும் அமைத்துவிடும். உயிரியல் செயல்பாடுகளுக்கு தனது பங்கை அளித்து, சுற்றுச்சூழல் மண்டலம் சமநிலை பெற்று இயங்க உதவி புரிந்துவிட்ட திருப்தியுடன் இறந்துபோகும்.