

நம் நாட்டில் பழங்காலத்தில் இருந்தே பசுவை வளர்த்து அதிலிருந்து பால் கறந்து தன்னுடைய குடும்பத்திற்கு பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கும் அந்த பாலை வியாபாரம் செய்யும் பழக்கம் தமிழர்களிடம் இருந்தது. உலகம் முழுக்கவே பல நாகரீகங்களிலும் இது இருந்ததாகவே சொல்லப்படுகிறது. அதனால் தான் பசுவை தெய்வமாக வழிப்படுகிறார்கள்.
பண்டைய கிரேக்கம், ரோம் ஆகிய இடங்களில் பசுவை செல்வத்தினுடைய அடையாளமாக பார்த்தனர். தற்போதும் பசுமாட்டில் பால் கறந்து விற்பனை செய்யக்கூடியது பெரிய தொழிலாகவே கருதப்படுகிறது. அது எந்த வகையான மாடு, அதற்கு வைக்கும் தீவணம், தண்ணீர், சுற்றுச்சூழல், பராமரிப்பு, பசுவின் வயது ஆகியவற்றை பொருத்தும் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் பால் கறக்கிறது என்பது இருக்கிறது.
இதில் அது எந்த வகையான பசு என்பது மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு ஒருநாளைக்கு பசு 2 முதல் 3 லிட்டர் தான் பால் கறக்கும். இந்தியாவிலேயே ஒரு நாளைக்கு அதிகமாக பால் கறக்கக்கூடிய பசு குஜரத்தில் இருக்கும் கிர் வகை பசு மாடுகளாகும். இது ஒரு நாளைக்கு 12 முதல் 20 லிட்டர் வரை பால் கறக்கிறது.
உலகத்திலேயே ஒருநாளைக்கு அதிகமாக பால் கறக்கக்கூடிய பசு இனம் நெதர்லாந்தை சேர்ந்த Holstein Friesian என்ற பசு வகையாகும். இது ஒரு நாளைக்கு 20 முதல் 30 லிட்டர் வரை பால் கறக்கும் என்று சொல்கிறார்கள். கிர் என்னும் குஜராத் பசுவிற்கும் Holstein Friesian என்ற நெதர்லாந்த் பசுவிற்கும் Crossbreed செய்து அந்த பசுவிற்கு சரியான ஆகாரம் கொடுத்து பராமரித்து அதிலிருந்து ஒருநாளைக்கு 123.61 லிட்டர் பால் கறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
உலகத்திலேயே ஒரு நாளைக்கு அதிகம் பால் கறக்கக்கூடிய உயிரினம் எது தெரியுமா? நிறைய பேர் திமிங்கலத்தை ஒரு மீன் இனம் என்று நினைக்கிறார்கள். திமிங்கலங்கள் குட்டிப்போட்டு பால் கொடுக்கக்கூடிய பாலூட்டி இனம். திமிங்கலங்களுக்கு நிலத்தில் வாழும் பாலூட்டி இனங்களுக்கு உள்ளது போல மார்ப்பு காம்புகள் இருக்காது. அதற்கு பதிலாக அதனுடைய அடிவயிற்றில் மார்பக பிளவுகள் என்ற இடத்தில் பள்ளங்கள் இருக்கும். அதில் மார்பக காம்புகள் மறைந்திருக்குமாம்.
குட்டிக்கு பசிக்கும் போது அது தாயின் அடிவயிற்று பள்ளங்களுக்கு போய் முட்டும். உடனே தாய் திமிங்கலம் தன்னுடைய தசைகளை சுருக்கி பாலை குட்டியின் வாயில் பீச்சியடிக்கும். இதுப்போல செய்தால் நிறைய பால் தண்ணீரில் வீணாகாதா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சாதாரணமாக மாட்டு பாலில் கொழுப்பு 3 முதல் 4 சதவீதம் இருக்கும்.இதுவே, திமிங்கலத்தின்(whale) பாலில் கிட்டத்தட்ட 35 முதல் 50 சதவீதம் கொழுப்பு இருக்கும். இதனால் பால் அடர்த்தியாக டூத்பேஸ்ட் போல இருக்கும். இப்படி அடர்த்தியாக இருப்பதால் தான் பால் தண்ணீரில் கரைந்து போகாமல் குட்டியின் வாயில் போகிறது. இப்படி இருக்கும் திமிங்கலம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 லிட்டர் பாலை கறக்கும்.