

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் பலருக்கும் இன்று மர வளர்ப்பில் ஆர்வமிருந்தாலும், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் சிறு மனக் குறைபாடுகளுடன்தான் இருந்து வருகின்றனர். இவர்களின் மனக்குறையைப் போக்கி, மரம் வளர்க்கும் விருப்பத்தினைச் செயல்படுத்திட போன்சாய் எனும் மரம் வளர்ப்பு முறை உதவுகிறது.
போன்சாய் மரம் வளர்ப்பதனால் மன அழுத்தம் குறைகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் காற்றை சுத்திகரிப்பது, மற்றும் வீட்டின் அழகை மேம்படுத்துவது போன்றவையும் இதில் அடங்கும். சிறிய இடத்தில் வசிப்பவர்களுக்கும் கூட இது ஒரு சிறந்த பொழுதுபோக்காகும். ஏனெனில், பெரிய மரங்களை வளர்க்க முடியாதவர்கள் கூட இந்த முறையில் வீட்டிலேயே மரங்களை வளர்த்து மன நிறைவு பெற முடியும்.
வீடுகளுக்கு அழகு சேர்க்கும் இந்த போன்சாய் வளர்ப்பு முறை பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றியது. போன்சாய் என்னும் குட்டைச் செடிகளின் வளர்ப்புக் கலை இன்று உலகமெங்கும் பரவலாகி விட்டது. ஜப்பானிய மொழியில் ‘போன்’ என்றால் ‘ஆழமற்ற தட்டுகள்’ என்றும், ‘சாய்’ என்றால் ‘செடிகள்’ என்றும் தமிழில் பொருள் கொள்ளலாம். தமிழில் இக்கலையைத் ‘தட்டத் தோட்டம்’ (Bonsai) என்கின்றனர்.
மேலை நாடுகளில் அழகுக்காக வளர்க்கப்பட்டு வந்த போன்சாய் மரங்கள், நம் நாட்டிலும் சில அலுவலகங்களில் அழகுக்காக வாங்கி வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது வீடுகளிலும் போன்சாய் மரம் வளர்ப்பும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
வீட்டு வரவேற்பு அறையில் அழகிய பூக்கும் மரங்கள், பூசை அறையில் ஆல், அரசு, வேம்பு போன்ற மரங்கள் போன்சாய் மரங்களாக வளர்க்கப்பட்டு வருகின்றன. போன்சாய் மர வளர்ப்பில் ஆர்வமுடைய சிலர் தங்கள் வீட்டு மாடிகளில் பல்வேறு வகையான போன்சாய் மரங்களை வளர்த்து வருகின்றனர். போன்சாய் மரங்களை வளர்த்து அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்வதைத் தொழிலாக செய்பவர்களும் இருக்கின்றனர்.
இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களை திறமையான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளர விடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் இந்த முறையிலான போன்சாய் மரங்கள் வளர்ப்பு ஒரு கலையாக வளரத் தொடங்கியிருக்கிறது.