இந்த உலகில் சுமார் 285 வகையான அணில்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவை பொதுவான வகைகளாக மூன்று விதமான அணில்கள் உள்ளன. அவை மர அணில்கள், பறக்கும் அணில்கள் மற்றும் தரை அணில்கள் ஆகும்.
மர அணில்கள்: மர அணில்கள் மரங்களில் வாழ்வதற்கு ஏற்றவை. புதர் போன்ற நீண்ட வால் கொண்ட இவை, வலுவான மரமேறும் திறன் பெற்றவை. தோராயமாக 19லிருந்து 29 இன்ச் வரை நீளம் கொண்ட இவை மரங்களில் வாழும். கிளைக்குக் கிளை தாவிக் குதித்து ஏறும்.
உலகம் முழுவதும் பல்வேறு வகையான மர அணில்கள் உள்ளன. சிவப்பு அணில்கள், நரி அணில் போன்றவை இவற்றில் முக்கியமானவை. சிவப்பு அணில்கள், சிவப்பும் பழுப்பு நிறமும் கலந்த கோட் போன்ற அமைப்பையும், மற்றும் சிறிய வட்டமான தலையும் கொண்டது. நரி அணில் சிவப்பு, பழுப்பு மற்றும் சாம்பல் நிற கோட் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.
தரை அணில்கள்: இந்த வகையான அணில்கள் முதன்மையாக நிலப்பரப்பில் காணப்படும். இவை நிலத்தில் நன்றாக துளையிடும் பழக்கம் கொண்டவை. பெரும்பாலும் வீட்டுத் தோட்டங்களில் காணப்படும் இவை மரங்களில் உள்ள பழங்கள், கொட்டைகளை கொறித்து உண்ணும். முதன்மையாக தரைக்கு மேலேதான் தீவனம் தேடுகின்றன. இவற்றின் உடல் 14 முதல் 20 அங்குல நீளம் வரை இருக்கும்.
இந்த வகை ஆண் அணில்கள் பெண் அணில்களை விட பெரியதாக இருக்கும். இவை தரையில் உள்ள துளைகளில் வாழ்கின்றன. அங்கேயே ஓய்வெடுத்து குஞ்சுகளை வளர்க்கின்றன. உணவை சேமித்து வைக்கின்றன. இவற்றின் துளைகள் சுமார் 4 அங்குல விட்டம் கொண்டவை. அவற்றின் நீளம் பொதுவாக 5 அடி வரை இருக்கும். தாவர வகைகள், மூலிகை செடிகளை உண்கின்றன. மேலும், தானியங்கள், விதைகள், கொட்டைகள் ஆகியவற்றையும் உண்கின்றன.
பறக்கும் அணில்கள்: பறக்கும் அணில்கள் தனித்துவமான உடல் பண்புகளைக் கொண்டுள்ளன. பார்ப்பதற்கு கண் கவரும் வண்ணம் கொண்டவை. இவை உண்மையில் பறவைகளைப் போல பறப்பதில்லை. ஆனால், வெகு வேகமாக சறுக்கும் இயல்பு உள்ளவை. இவற்றின் மூட்டு எலும்புகள் நீளமாகவும், கை மற்றும் கால் எலும்புகள் குறுகியதாகவும் இருக்கும். மரத்திலிருந்து சறுக்கும்போது நீண்ட வால் சுக்கான் போல செயல்படுகிறது.
இவை பெரும்பான்மையாக இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. பழங்கள், கொட்டைகள், பூஞ்சைகள் போன்றவற்றை இவை உண்ணுகின்றன. பெரும்பாலும் வட அமெரிக்கா, வடக்கு மெக்சிகோ மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் உள்ள மரங்களில் வாழ்கின்றன. இவற்றின் குஞ்சுகள் பிறக்கும்போது கண் தெரியாமல் பிறக்கின்றன. ஆனால், தாய் வளர்ப்பில் அவை தேறி வருகின்றன.
பறக்கும் அணில்கள் 21 அங்குல நீளம் மற்றும் 450 முதல் 875 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். இவற்றின் கண்களை சுற்றி வெளிர் நிற வளையம் போன்ற அமைப்பு உள்ளது. வால் பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இவை பாறைகள், பள்ளத்தாக்கு சுவர்கள் மற்றும் பாறாங்கல் குவியல்கள் போன்றவற்றில் வளை அமைத்து வாழ்கின்றன.
இந்த அணில்கள் அதிகாலை மற்றும் பிற்பகல் நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இலைகள், தண்டுகள், விதைகள், பழக்கொட்டைகள், பூர்வீக தாவரங்களின் பழங்கள், புற்கள், நீலக் கற்றாழை போன்றவற்றை விரும்பி உண்ணும். மேலும் வெட்டுக்கிளிகள், வண்டுகள், சிறிய இளம் காட்டு வான்கோழிகள் போன்றவை உண்கின்றன.