‘பூக்களில் உள்ள பல்வேறு வகையான கரையும் தன்மையுடைய கூட்டுப் பொருட்கள்தான் பூக்களின் நறுமணத்திற்கு காரணம்’ என்கிறார்கள் பர்டியு பல்கலைக்கழக தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள். தேனீக்கள் மற்றும் புழுக்கள் பூக்களில் வந்து சென்ற பின்னர் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. அதன் பிறகு பூக்களின் வாசம் குறைகிறது என்கிறார்கள். மலர்களில் நறுமணத்தை உருவாக்க அதிகமாகக் காணப்படும் கரையும் கூட்டுப்பொருள் ‘மெதில்பென்ஸோயேட்.’ இந்த கூட்டுப்பொருள் மெதிலேஷன் முறையில் உருவாகிறது.
இது நல்ல வாசனை, சிறந்த வலி நிவாரணியாகப் பெண்களிடம் அதிக அளவில் செயலாற்றுகிறது என்பது கனடா நாட்டின் கியூபெக் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. வலி அதிகம் இருக்கும்போது ரோஜா போன்ற நல்ல வாசனைகளை நுகர்ந்தால் வலி அதிகம் தெரிவதில்லை என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
தூங்கும்போது உங்களுக்குக் கெட்ட கெட்ட கனவுகளாகவே வருகிறதா? கவலையை விடுங்கள். தினமும் நல்ல வாசனை தரும் பூக்களை படுக்கை அறையில் வையுங்கள். பிறகு பாருங்கள், நல்ல நல்ல கனவுகளாகவே வரும் என்கிறார்கள் ஜெர்மனியின் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக, ரோஜாக்கள் வாசனையை நுகர்ந்தவர்களுக்கு இரவில் இனிமையான கனவுகள் வந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பூஜை பயன்பாட்டிற்கும், அன்பின் அடையாளமாக இருக்கும் ரோஜா மலரின் வாசனை திரவியமான ‘சென்ட்’டை பயன்படுத்துவதன் மூலம் ஒருவரின் நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்கிறார்கள் அமெரிக்காவின் லென்பெக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஒரு பணியை மேற்கொள்ளும்போது ரோஜா சென்ட்டை தடவிக்கொண்டு தொடங்கி அந்த பணிகள் முடிவடைந்து இரவு அந்த நறுமணத்துடன் தூங்கச் சென்றால் அது பணியின்போது மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் மனதில் நிலைத்திருக்கச செய்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
படுக்கையில் படுத்தவுடன் தூங்க முடியாமல் திணறும் அளவுக்கு மன அழுத்தம் இருக்கும். நீங்களும் இதேபோன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் தலையணைக்கு அடியில் பூண்டு விழுதை வைத்து தூங்க வேண்டும். உண்மையில், பூண்டின் கடுமையான மற்றும் வலுவான வாசனை மனதை மன அழுத்தமில்லாமல் மாற்றும். மேலும், மனதை அமைதியாக ஆக்குகிறது. பூண்டில் உள்ள சல்பர் மற்றும் அதன் வாசனை தூக்கத்தைப் பெற பெரிதும் உதவுகிறது.
நல்ல வாசனையை முகர்பவர்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும், ஞாபக சக்தி குறைபாடுகள் சம்பந்தமான நோய்கள் குறையும், இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும் என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நல்ல வாசனை இருக்கும்படி பார்த்துக் கொண்டால் நமது மூளையின் செயல்பாடுகள் .அதிகரிக்கும் என்கிறார்கள் இவர்கள்.
மிக அரிதாகக் கிடைக்கக்கூடிய தாழம்பூ பாய் உடலின் பித்தத்தைக் குறைக்கும். இதில் இருந்து வீசும் நறுமணம், உடலையும் மனதையும் ரம்மியமான உறக்கத்தில் ஆழ்த்தும். அரோமாதெரபி என்பது இயற்கை நறுமண எண்ணெய்களை பயன்படுத்தி ஒரு முழுமையான குணப்படுத்தும் சிகிச்சையைக் குறிக்கிறது. நன்கு அறியப்படும் இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இனிமையான தாவர எண்ணெய்களின் வாசனை மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, லாவண்டர் பூ எண்ணெய் மன அழுத்தம் தொடர்பான கவலைக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது.
உங்களுக்கு அடிக்கடி கவனக் கோளாறுகள் ஏற்படுகிறதா? அந்த வேளையில் இனிமையான நறுமணத்தை நுகர்வது நமது மூளையைத் தூண்டி நமக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி கவனக் குறைவை தவிர்க்க உதவுகிறது என்கிறார்கள். குறிப்பாக, துளசி, ஆரஞ்சு, கிராம்பு, சுகந்திப் பூ போன்றவற்றிலிருந்து வரும் நறுமணம் நமக்கு புத்துணர்ச்சி தரும் என்கிறார்கள்.