
கதண்டுகள் என்பது தேனீக்களை விட உருவத்திலும், அளவிலும் பெரியதாகக் காணப்படும். இந்த கதண்டுகள் ஆங்கிலத்தில் ‘Yellow-tapped wasp’ என்று அழைக்கப்படுகின்றன. கதண்டுகளின் கடியானது மிக வலி தரக்கூடியதாகவும், ஒவ்வாமை காரணமாக ஒருசில நேரங்களில் உயிரே பறிபோகக் கூடியதாகவும் அமைகிறது. அப்படிப்பட்ட இந்த கதண்டுகளை பற்றிய விழிப்புணர்வும், பாதுகாப்பு வழிகாட்டுதலும் மிகவும் முக்கியம். அது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேனீக்களை விட சற்று பெரியதாக இவை காணப்படும். உடம்பில் கருப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் வரி வரியாக இருக்கும். இரண்டு கண்களுக்கு இடையே இரண்டு உணர்திறன் கொம்புகள் போல் காணப்படுகின்றன. அதேபோல் இறக்கைகள் சற்று நீண்டு நிமிர்ந்து காணப்படும்.
பொதுவாக, இவ்வகை குளவிகள் காட்டிலேயே காணப்படுகின்றன. இப்போதுள்ள காடுகள் அழிப்பு போன்ற பாதிப்புகளால், மனித குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்துவிட தொடங்கியுள்ளன. உயரமான இடத்திலேயே தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. கைவிடப்பட்ட கட்டடங்கள், பனை மரத்தின் ஓலைகள், தென்ன மரத்தின் மட்டைகள், மரக்கிளைகள் போன்ற இடங்களில் தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. இதன் கூடுகள் சாம்பல் நிறம் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. ஒருசில கூடுகள் பார்ப்பதற்கு கரையான் புற்று போல் தோற்றமளிக்கும்.
கதண்டுகளின் கடியானது, சாதாரண தேனீக்களின் கடியை விட அதிக வலியையும், எரிச்சலையும், வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. தேனீக்கள் கொட்டும்பொழுது கொடுக்குகள் உடைந்து கொட்டிய இடத்தில் காணப்படும். ஆனால், கதண்டுகள் கொட்டும்பொழுது கொடுக்கானது உடைவதில்லை. எனவே, இதனால் பலமுறை மனிதனைக் கொட்ட முடிகிறது. கதண்டுகளின் கொடுக்குகளில் மேஸ்ட்ரோபிரான், இஃபேஸ்போலிஃபேஸ் A1 என்ற ரசாயனங்கள் உள்ளன.
இதன் கொடுக்குகள் நீளமாகவும் மிகவும் கூர்மையானதாகவும் காணப்படும். கடி ஏற்பட்டால் எல்லோரும் இறப்பதில்லை. ஆனால், ஒருசில சமயங்களில் ஒவ்வாமை காரணமாக கொடுக்குகளில் உள்ள ரசாயனமானது நமது மூச்சுக்குழலை பாதிக்கிறது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிரே போகும் அளவிற்கு அமைகிறது.
இதுபோன்ற கதண்டுகளின் கூடுகள் இருக்கும் இடத்தை கண்டால் நாம் ஒதுங்கியே இருக்க வேண்டும். வீடுகளில் கதண்டுகளின் கூடுகள் இருந்தால், நாமே குச்சிகளைக் கொண்டு அகற்றுவது சரியாக அமையாது. எனவே, கைதேர்ந்த அல்லது தீயணைப்புத் துறையினரின் உதவியோடு அந்தக் கூடுகளை அகற்ற வேண்டும். நாமே அகற்ற முயற்சிக்க முற்படும்போது எதிர்பாராத விதமாக கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
புகையை போட்டோ, தீயை எரித்தோ அதை அகற்றி விடலாம் என்று நினைத்து செய்யாதீர்கள். இதனால் குளவிக்கு மேலும் கோபம் ஏற்படும். குழந்தைகளை கூடுகள் இருக்கும் இடத்திற்கு அருகில் விளையாட அனுமதிக்காதீர்கள். வீட்டுக்கு அருகில் உள்ள தென்னை மரங்கள், பனை மரங்களில் கதண்டின் கூடை கண்டால் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவியுங்கள்.
இனி, இந்த கதண்டுகளை யாரும் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். கதண்டுகளும் தேனீக்களும் ஒன்றல்ல என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!