மனிதர்களைப் போலவே கற்பனை செய்யும் குரங்குகள்... சயின்டிஸ்ட்களை அதிர வைத்த புதிய ரிசர்ச்!

Thinking Apes
Thinking Apes
Published on

ந்த உலகத்திலேயே மனிதர்கள்தான் மிகவும் புத்திசாலிகள் என்ற ஒரு பெரிய கர்வம் நம் எல்லோருக்கும் எப்போதுமே இருக்கிறது. அதற்குக் காரணமாக நாம் சொல்வது, நமக்கு மட்டுமே இருக்கும் கற்பனைத்திறன் மற்றும் கதைகளை உருவாக்கும் ஆற்றலைத் தான். மற்ற விலங்குகள் எல்லாமே தங்களுக்கு முன்னால் இருக்கும் உணவையோ, ஆபத்தையோ பார்த்து மட்டுமே செயல்படும் என்று பல காலமாக நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். 

ஆனால், அந்த பழைய நம்பிக்கையை இப்போது சுக்குநூறாக உடைத்துள்ளது ஒரு புதிய அறிவியல் ஆய்வு. ஆம், மனிதர்களுக்கு மிக நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்குகளுக்கும் கற்பனை செய்யும் திறனும், இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துப் பாசாங்கு செய்யும் திறனும் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தி, 'சயின்ஸ்' என்ற புகழ்பெற்ற இதழில் வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 'கான்ஸி' என்ற மிகவும் பிரபலமான ஒரு போனோபோ வகை குரங்கைப் பயன்படுத்தினார்கள். ஒரு மேஜையில் சில கப்களை வைத்து, அதில் கண்ணுக்குத் தெரியாத கற்பனையான தண்ணீரை ஊற்றுவதுபோல ஆராய்ச்சியாளர்கள் நடித்தார்கள்.

அதன் பிறகு அந்த கப்களை மாற்றி மாற்றி வைத்தனர். ஆச்சரியப்படும் விதமாக, கான்ஸி அந்த கற்பனைத் தண்ணீர் எந்த கப்பில் இருக்கிறது என்பதை மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் காட்டியது. இது ஏதோ தற்செயலாக நடந்தது கிடையாது. பலமுறை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் திரும்பத் திரும்பச் செய்தபோதும் கான்ஸி அசால்ட்டாக இதைச் செய்து காட்டியது.

நிஜமும் கற்பனையும்!

இதை வைத்து கான்ஸிக்கு நிஜம் எது, பொய் எது என்று தெரியாமல் குழம்பிவிட்டது என்று நாம் நினைத்துவிடக் கூடாது. ஏனெனில், அதற்கும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு செக் வைத்தனர். கான்ஸியிடம் ஒரு உண்மையான பரிசையும், ஒரு கற்பனையான பரிசையும் காட்டி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்கள். அப்போது கான்ஸி சற்றும் தயங்காமல் உண்மையான பரிசை மட்டுமே தேர்ந்தெடுத்தது.

இதையும் படியுங்கள்:
அளவில் மிகச்சிறிய 7 வகை குரங்குகள்!
Thinking Apes

இதிலிருந்து, குரங்குகளுக்கு நிஜத்திற்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசம் மிகத் தெளிவாகத் தெரிகிறது என்பது உறுதியானது. குழந்தைகள் எப்படி இல்லாத ஒன்றை வைத்து விளையாடுகிறார்களோ, அதேபோன்ற ஒரு மனநிலையை இந்தக் குரங்குகளும் கொண்டுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அந்தப் பெரிய இடைவெளியைக் கணிசமாகக் குறைத்துள்ளது. ஆயுதங்களைப் பயன்படுத்துவது, மற்றவர்கள் மீது பரிதாபப்படுவது போன்ற குணங்கள் ஏற்கனவே விலங்குகளிடம் இருப்பது நமக்குத் தெரியும். இப்போது அந்தப் பட்டியலில் கற்பனைத் திறனும் இணைந்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
குரங்குகள் திருடி சென்ற நகைகள்… நடந்தது எங்கே?
Thinking Apes

இதற்காகக் குரங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் நாவல் எழுதும் என்றோ அல்லது எதிர்காலத்தைத் திட்டமிடும் என்றோ அர்த்தம் கிடையாது. ஆனால், அதற்கான ஒரு அடிப்படை அடித்தளம் மனிதர்கள் தோன்றுவதற்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டது என்பதுதான் இதிலிருக்கும் மிகப்பெரிய அறிவியல் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com