செடிகளில் பூ உதிர்வைத் தடுக்க உதவும் கரைசல் இதுதான்!

Flower Drop
Plants
Published on

தோட்டக்கலைத் துறைச் செடிகளான பூ மற்றும் காய்கறி செடிகளில் விவசாயிகள் சந்திக்கும் பெரும் பிரச்சினை என்றால், அது பூ உதிர்வு தான். காய்கறிகள் காய்ப்பதற்கு முன்பே பூ உதிர்வது மகசூலை வெகுவாக குறைத்து விடும். இன்றைய நவீன உலகில் செயற்கை உரங்கள் இப்பிரச்சினைக்குத் தீர்வாக இருந்தாலும், இயற்கையான முறையில் எப்படி பூ உதிர்தலைத் தடுக்கலாம் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

செடிகளில் பூக்களைக் காப்பாற்றுவது, காய்கறிகளைத் தக்க வைத்து மகசூலை உயர்த்தும் வழியாகும். ஆனால் நிச்சயமற்ற காலநிலை மற்றும் பூச்சித் தாக்குதலால் செடிகளின் சத்து குறைந்து, பூக்கள் உதிர்கின்றன. இப்பிரச்சினை வந்த பிறகு தடுப்பதைப் காட்டிலும், வருவதற்கு முன்பே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு விவசாயிகள் மற்றும் மாடித் தோட்டப் பிரியர்களுக்கு கைகொடுக்கிறது பெருங்காய மோர் கரைசல்.

விவசாயப் பயிர்களைக் காப்பாற்றுவதில் பொதுவாக மோர் கரைசல் பல வழிகளில் உதவுகிறது. அதேபோல் செடிகளில் பூ உதிர்வைத் தடுப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாக பெருங்காய மோர் கரைசல் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

முதலில் 1 லிட்டர் மோரை 7 முதல் 10 நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல், வெளியில் வைத்தே புளிக்க வைக்க வேண்டும். புளித்த மோருடன் 1 அல்லது 2 தேக்கரண்டி பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெருங்காயம் கட்டியாக இருந்தாலும் கூட பரவாயில்லை. இப்போது கரைசலை நன்றாக கரைத்து, பெருங்காயம் கெட்டியாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்தக் கரைசலை 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை அப்படியே ஊற வைக்க வேண்டும்.

தெளிப்பு முறை: 1 லிட்டர் பெருங்காய மோர் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கரைசலை மாதத்திற்கு ஒருமுறை தயார் செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகளிலும் பெருங்காய மோர் கரைசலை பூக்கும் தருணத்திலேயே தெளிக்க வேண்டும். இந்தக் கரைசலை முதலில் செடிகளின் வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். பிறகு ஸ்பிரே பாட்டிலைப் பயன்படுத்தி, வடிகட்டிய கரைசலை பூக்களின் மீது மெதுவாக தெளிக்க வேண்டும். எத்தனைப் பூக்கள் பூக்கிறதோ, அதை வைத்து தான் நமக்கான மகசூல் இருக்கும் என்பதால், பூக்களைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
ரோஜா செடி பூத்துக் குலுங்க இப்படி ஒரு ஐடியாவா?
Flower Drop

பெருங்காய மோர் கரைசல் என்பது மிகவும் குறைந்த செலவிலான பயிரூட்டி. பெருங்காயத்தை சாதாரண தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் பெருங்காயத்தை மோருடன் கலந்து தெளித்தால் தான் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பலன்கள்:

1. பெருங்காய மோர் கரைசலின் வாசனையானது பூச்சிகளை விரட்டும் என்பதால், செடிகளில் புழு மற்றும் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.

2. மோரில் உள்ள பாக்டீரியா செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும்.

3. வேர்ப் பகுதியில் இக்கரைசல் ஊற்றப்படுவதால், செடிகளின் வேர் பலமாகும்.

4. இதிலிருக்கும் பெருங்காயம் செடிகளில் விரைவில் பூக்கள் பூக்கவும், பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com