

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒரு இயற்கை வினோத நிகழ்வாக சிவப்பு நிற நண்டுகள் சாலைகளை ஆக்கிரமித்து பயணம் மேற்கொள்கின்றன. அதுபோன்ற சமயங்களில் அந்த சாலைகளில் அரசே போக்குவரத்தை நிறுத்தி விடுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
கிறிஸ்மஸ் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய ஆஸ்திரேலிய தீவாகும். இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத தனிப்பட்ட இனமான சிவப்பு நிற நண்டுகள் காணப்படுகின்றன. இவை இத்தீவினுடைய உயிர் வளத்தின் அடையாளமாகவும், சுற்றுலா பயணிகளின் முக்கிய ஈர்ப்பாகவும் இருக்கின்றன. இவை தீவின் காடுகளில் விழும் இலைகள் மற்றும் சிறு உயிர்களை உண்டு மண் ஊட்டச்சத்தையும், பசுமையையும் காக்கும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. விஞ்ஞானிகள் இந்த சிவப்பு நிற நண்டுகளை, ‘பசுமை சமநிலையின் காவலர்கள்’ என்று அழைக்கின்றார்கள்.
ஆண்டு முழுவதும் கிறிஸ்துமஸ் தீவுகளின் காடுகளில் சிவப்பு நண்டுகள் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் பசுமை நிறைந்த கிறிஸ்மஸ் தீவில் உள்ள சிவப்பு நிற நண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு இடம்பெயர்கின்றன. ஈரமான பருவத்தின் ஆரம்பத்தில், பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் லட்சக்கணக்கான சிவப்பு நிற நண்டுகள் அடர்ந்த காடுகளை விட்டு, கடற்கரையை நோக்கி செல்கின்றன. இதனால் சில சாலைகள் முழுவதும் சிவப்பு நிறமாகவே காணப்படுகின்றது.
இந்த சிவப்பு நிற நண்டுகள் தீவில் உள்ள காட்டுப்பகுதியில் சிறிய அளவிலான குழிகளை ஏற்படுத்தி அதை தங்கள் வாழ்விடமாக ஆக்கிக் கொள்கின்றன. இனப்பெருக்கக் காலம் வரும்போது அவை காட்டிலிருந்து வெளியேறி கடற்கரையை நோக்கிச் செல்கின்றன. காடுகளில் இருந்து சுமார் 8,10 கிலோ மீட்டர் தூரம் சென்று கடற்கரையில் சிறிய குழிகளைத் தோண்டி முட்டைகளை இடுகின்றன.
ஆண் நண்டுகள் குழிகளைத் தோண்ட, அதில் பெண் நண்டுகள் முட்டைகளை இட்டு சுமார் 2 வாரங்கள் அடைகாக்கின்றன. பிறகு அந்த முட்டைகள் கடலின் அலையில் கலந்து புதிய நண்டுகள் வெளிப்படுகின்றன. இந்த இனப்பெருக்கப் பயணம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் மழைக்காலம் தொடங்கும்பொழுது நடைபெறுகின்றது.
இவை கூட்டமாக சாலைகளைக் கடக்கும் பொழுது அத்தீவின் மக்கள் மற்றும் அதிகாரிகள் அவற்றை காக்கும் பொருட்டு சாலைகளை தற்காலிகமாக மூடுகின்றனர். அந்த வழியாக நண்டுகள் கடந்து செல்லும் வரை எந்த வாகனங்களும் அப்பகுதியில் அனுமதிக்கப்படுவதில்லை. சில இடங்களில் நண்டுகள் எளிதாக சாலையை கடப்பதற்காக நண்டு பாலங்களையும் உருவாக்கியுள்ளனர். இவற்றின் வழியாக நண்டுகள் மிகவும் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்கின்றன.