

தாவரங்களின் பயிர் உற்பத்திக்கு மகரந்தச் சேர்க்கை முக்கிய காரணமாக உள்ளது. இமயமலை பகுதியான உத்தரகண்டில் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் போன்ற முக்கியமான மகரந்தச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. இது விவசாய உற்பத்திக்கும், சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக தேனீக்களும் மனிதர்களும் பரஸ்பரம் நன்மை பயக்கும் உறவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். நாட்டில் பாரம்பரிய இந்திய தேனியான அபிஸ் செரானா இண்டிகா மற்றும் வணிக ரீதியாக அதிக தேன் தரும் அபிஸ் மெல்லிஃபெரா (ஐரோப்பியத் தேனீ) உட்பட ஆறு முக்கிய தேனீ இனங்கள் உள்ளன. தேன் உற்பத்தியை விட, தேனீக்கள் உணவுப் பாதுகாப்பின் உண்மையான நாயகர்களாக உள்ளன. உலகளவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பயிர் வகைகள் (பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள்) மகரந்தச் சேர்க்கையாளர்களால்தான் உருவாகின்றன.
உலகளாவிய உணவு விநியோகத்தில் சுமார் 35 சதவிகிதம் மகரந்தச் சேர்க்கையைச் சார்ந்துள்ளது. உதாரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆப்பிள் தோட்டங்களில் தேனீ கூட்டங்களை வாடகைக்கு எடுத்து மகரந்த சேர்க்கையை அதிகரித்தால் மகசூல் 20 முதல் 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. தேனீக்கள் தேனையும் மதிப்புமிக்க அரச ஜெல்லி மற்றும் புரோபோலிஸ் போன்ற பொருட்களையும் வழங்குகின்றன. இவை பாரம்பரிய மருத்துவத்தில் தீக்காயங்கள் முதல் சுவாச நோய்த்தொற்றுகள் வரை பல சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மகரந்தச் சேர்க்கை நெருக்கடிக்கான காரணங்கள்: இதற்கு மிக முக்கியக் காரணமாக நகரமயமாக்கல் உள்ளது. நகரமயமாக்கல் காரணமாக தேனீக்களின் வாழ்விடங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. காடுகளின் அழிவு, தேனீக்களுக்கு ஆண்டு முழுவதும் உணவு வழங்கிய பாரம்பரிய கலப்புப் பயிர் முறைகளை அழித்து விட்டு, ஒற்றைப் பயிர் சாகுபடி முறைகளைக் கொண்டு வந்தது அவற்றின் வாழ்வாதாரத்தை அழித்து உள்ளது.
ஆக்கிரமிப்பு போட்டி: ஐரோப்பிய தேனியான ஏ.மெல்லிஃபெரா அதிக தேன் உற்பத்தித் திறன் கொண்டது. இது இந்தியாவின் பாரம்பரிய ஏ.செரானா தேனீக்களுடன் உணவுக்காக சண்டையிட்டு நோய்களையும் பரப்புகிறது. பாரம்பரிய தேனிக்களே மகரந்த சேர்க்கைக்கு அதிகம் உதவி செய்கின்றன.
பூச்சிக்கொல்லி அபாயம்: பூக்கும் நேரங்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் தேனீக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் எண்ணிக்கை மேலும் குறைகிறது. இதுபோன்ற பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தேனீக்கள் வந்து அமரவும், அவற்றிற்கு உணவு கிடைக்கவும் பயன் இல்லாமல் போகின்றன. கைவிடப்பட்ட விவசாய நிலங்கள், தேனீக்களுக்குப் பயனற்றதும், பார்த்தீனியம் போன்ற நச்சுத் தன்மையுடையதுமான ஆக்கிரமிப்பு களைகளால் நிரம்பி உள்ளன. இதனால் உணவின்றி தேனீக்கள் எண்ணிக்கை அதிகளவில் பாதிக்கப்படுகிறது.
பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கை: அல்மோரா மாவட்டத்தில் கடுகு, பக்வீட் (Buckwheat) மற்றும் பிளம் ஆகிய பயிர்களில் மகரந்தச் சேர்க்கையின் தாக்கம் குறித்து சோதிக்கப்பட்டது. முதலாவது திட்டத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறாத அளவுக்கு, அந்த இடத்தில் வலைகள் அமைக்கப்பட்டு பயிர் செய்யப்பட்டது. இன்னொரு திட்டத்தில் திறந்தவெளியில் பயிர் செய்யப்பட்டது. அதில் தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை நடந்த பயிர்களில் மகசூல் வியத்தகு அளவில் அதிகரித்தது.
குறிப்பாக, பக்வீட்டில் 73 சதவிகிதம் மகசூல் அதிகரிப்பு பதிவானது. மேலும், 23 பூச்சி இனங்கள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவியுள்ளது. இதில் 74 சதவிகிதம் தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் இருந்தன. இந்த ஆய்வு, உத்தரகண்ட் பண்ணைகளில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் பன்முகத் தன்மை இமாச்சல பிரதேசத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
மீள்தன்மைக்கான வழிகள்: இந்த நெருக்கடியைச் சமாளிக்க உத்தரகண்டில் மகரந்தச் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவின் பாரம்பரிய தேனீ இனங்களை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். நிலங்களில் ஆப்பிள், பிளம், சில்வர் ஓக் போன்ற தேன் நிறைந்த தாவரங்களை வளர்க்க வேண்டும்.