
இந்தியாவில் கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் இலாபகரமான தொழிலாகும். நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் தான் கால்நடைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. ஆடு, மாடு, கோழி, வாத்து மற்றும் காடை என பல வகையான கால்நடைகள் இன்றும் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கவும், அதனை மேம்படுத்தவும் அரசு சார்பில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் கூடுதல் பலன் தரும் டாப் 4 திட்டங்களை இப்போது காண்போம்.
பெரும்பாலும் இறைச்சி மற்றும் பால் தேவைக்காகவே கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. மேலும் ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையம் பல வழிகளில் நமக்கு இலாபத்தைப் பெற்றுத் தரும். கால்நடை வளர்ப்பில் செலவு என்றால், அது தீவனச் செலவு மட்டும் தான். இதில் பராமரிப்புச் செலவுகள் குறைவாகவே இருக்கும். கால்நடைகளுக்கான பசுந்தீவனத்தை நாமே விளைவித்தால், செலவு இன்னமும் குறைந்து விடும்.
விவசாயத்தின் உப தொழிலான கால்நடை வளர்ப்பை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசால் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
1. தீவன மேம்பாட்டுத் திட்டம்:
மத்திய அரசு வழங்கும் நிதியுதவியுடன் கால்நடைப் பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத் துறையின் மூலமாக தீவனத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள விவசாயிகளின் தீவன மேம்பாட்டிற்கு ஆதரவு அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கும் விதமாக விவசாயிகளுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் தீவனக் கன்றுகள், விதைகள் மற்றும் நாற்றுகள் வழங்கப்படுகின்றன.
2. கால்நடைக் காப்பீட்டுத் திட்டம்:
நாட்டில் இருக்கும் அனைத்து கால்நடை வளர்ப்போருக்கும் கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் கைகொடுக்கும். இத்திட்டத்தில் பயன்பெற வேண்டுமென்றால், கால்நடைகள் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்கும் தருவாயில், கால்நடை உரிமையாளரின் நிதியிழப்பைச் சரிசெய்யும் வகையில் ஒரு குறிப்பிட்ட தொகை காப்பீடாக வழங்கப்படும். இத்திட்டத்தின் படி நோய்கள், விபத்துகள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளில் இறக்கும் நாட்டு மாடுகளுக்கு காப்பீடு வழங்கப்படும்.
3. தேசிய பால் பண்ணைத் திட்டம்:
கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறனை அதிகரிப்பது தான் தேசிய பால் பண்ணைத் திட்டத்தின் முக்கிய நோக்கம். உற்பத்தியை அதிகரித்து, சந்தையில் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பதப்படுத்தும் அணுகலையும், சந்தை வாய்ப்புகளையும் இத்திட்டம் வழங்குகிறது. மேலும் பால் பொருள்களின் தரம் உயர்வாக இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்தியாவில் 18 மாநிலங்களில் இந்தத் திட்டம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
4. பால் தொழில்முனைவோர் திட்டம்:
இளைஞர்களைத் தொழில்முனைவோராக்கவும், அதே நேரத்தில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தவும் கொண்டுவரப்பட்டது தான் பால் தொழில்முனைவோர் திட்டம். மேலும் சுய வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதிலும் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிதாக பால்பண்ணை அமைக்கும் பொதுப் பிரிவினருக்கு அரசு சார்பில் 25% மானியமும், எஸ்சி மற்றும் எஸ்எஸ்டி பிரிவினருக்கு 33% மானியமும் கிடைக்கும். மேலும் பண்ணை உபகரணங்கள் மற்றும் பால் கறக்கும் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படும்.