பாலூட்டி வகையைச் சேர்ந்த ட்ரீ ஷ்ரூ என்ற உயிரினம் தாவரக்குடுவை என்றழைக்கப்படும் பிட்சர் தாவரத்தையே தனது கழிவறையாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
ட்ரீ ஷ்ரூ 5.5 முதல் 9 அங்குல அளவைக் கொண்ட பார்ப்பதற்கு எலி போல இருக்கும் உயிரினமாகும். இதன் உடம்பின் நீளமும் வாலின் நீளமும் ஒரே அளவில் இருக்கும். தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் மழைப் பெய்யும் காடுகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. அதாவது கிழக்கு நேபாளம், பங்களாதேஷ், தென்கிழக்கு சீனா, இந்தோ சீனா மற்றும் மலாய் பெனின்சுலா ஆகிய இடங்களில் ட்ரீ ஷ்ரூக்கள் அதிக அளவில் வாழ்கின்றன.
ட்ரீ ஷ்ரூக்கள் வண்டுகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன. மழைக்காடுகளில் வாழும் இவை, கோடைக்காலம் முழுவதும் மரங்களிலேயே பதுங்கி வாழ்கின்றன. ஒரு ட்ரீ ஷ்ரூ வளரும் வரை அதிகமாக தனது தந்தையின் பாதுகாப்பில் மட்டுமே இருக்கும். அதன் தாய் 48 மணி நேரங்களுக்கு ஒருமுறை வந்து உணவூட்டி விட்டு சென்றுவிடும். வளர்ந்தப் பின் அதற்குத் தகுந்த இணை வரும்வரை தனியேத்தான் இருக்க விரும்பும்.
ட்ரீ ஷ்ரூக்கள் காடுகளில் வண்டுகளின் இனப்பெருக்கத்தை தடுக்க உதவுகின்றன. மேலும் விதைகளைப் பரப்பி காடுகளைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
இதன் சிறப்பான நடத்தைகளில் ஒன்று, பிட்சர் பிளான்ட் எனப்படும் ஒருவகைத் தாவரத்தை கழிவறையாகப் பயன்படுத்திக் கொள்வதாகும். ஆம், நீங்கள் கேட்பது உண்மைதான். காலை எழுந்தவுடன் முதல் வேலையாக ட்ரீ ஷ்ரூ, பிட்சர் தாவரத்தை நோக்கிச் சென்று முதலில் அதனுடைய தேனை சுவைத்துக்கொள்கிறது. பின்னர் அதன் குடுவை போன்ற அமைப்பை கழிவறையாகப் பயன்படுத்திக் கொண்டு, தனது எச்சங்களை குடுவையின் மேற்பரப்பில் விட்டுச் செல்கிறது.
இந்த பிட்சர் தாவரம் எப்போதும் மழை பெய்யும் இடங்களில் வளர்வதால், மேலே ஒட்டி இருக்கும் கழிவுகளை, மழை நீர் குடுவை போன்ற அமைப்பின் உள்ளே தள்ளி விடுகிறது. பின்னர் அந்தக் கழிவுகளை பிட்சர் தாவரங்கள் உணவாக எடுத்துக்கொண்டு செழித்து வளர்கிறது.
அதேபோல, இந்தத் தாவரங்கள் எறும்புகளுக்கும் உணவளித்து, அதன் குடுவையில் தவறி விழும் எறும்புகளை உணவாக எடுத்துக் கொள்கிறது.
மேலும், ஹெர்சச்சல் எனப்படும் ஒரு வகை பிக்சர் தாவரம், சிறிய வகை வவ்வால்கள் அதன் குடுவையின் உள்ளே வாழ அனுமதிக்கிறது. ஏனெனில், உள்ளே வாழும் வௌவால்களின் எச்சம் அந்த தாவரத்திற்கு உணவாகும் அல்லவா?.
இப்படி விலங்குகளுக்கும் தாவரத்திற்கும் இடையே ஒரு பரஸ்பர உணவுப் பரிமாற்றம் நடக்கிறது எனலாம்.