மனித உயிர் வாழ்க்கைக்கான ‘அனுமதிச் சீட்டு’ மரங்களே!

மனித உயிர் வாழ்க்கைக்கான ‘அனுமதிச் சீட்டு’ மரங்களே!
Published on

ரங்களோடு இயைந்து வாழ்வதால் மரங்கள் மனிதனுக்கு நிரம்பப் பயன்களை தருகின்றன. மனிதன் உயிர் வாழ மிகவும் தேவையானது காற்று. இக்காற்றினை தரும் மரங்கள் நாம் வெளிவிடும் கரிக்காற்றை உட்கொண்டு நமக்குத் தூய்மையான உயிர் வளியை தருகின்றன.

கரிக் காற்றைத் தாவரங்கள் கரிமப் பொருளாக மாற்றுவதால் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஒளிச்சேர்க்கையே உயிர்கள் யாவற்றிற்கும் உயிர் வளியையும், உண்ண உணவையும் அளிக்கின்றன என்றால் மிகையாகாது. மரங்கள் இல்லையெனில் கெட்ட காற்றை சுவாசிக்க வேண்டி வரும். அப்போது மூச்சு உறுப்புகள் சீரழிந்து, காசநோய், இளைப்பிருமல் ஏற்பட்டு சடுதியில் வாழ்நாளை முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். எனவே, மக்களின் ‘உயிர் வாழ்க்கைக்கான அனுமதி சீட்டு’ மரங்களே.

மரங்கள் தூசி, புகையை தடுக்கிறது: தூசிக்கு ஊக்கம் கொடுப்பது புகை. முந்திரிப் பருப்பாலை கக்கும் புகை, சிமெண்ட் ஆலை புகை, சமையலறை புகை, புகை பிடித்தலால் ஏற்படும் புகை மற்றும் போர் காலங்களில் ஏற்படும் நச்சுப் பொருட்கள் கலந்த புகையும், காற்றில் கலக்கின்றன. வாகனங்கள் கிளப்பும் புகையில் காரீயம், பாதரசம் போன்ற நச்சுப் பொருட்கள் கலந்துள்ளன.

இந்த தூசியையும், புகையையும் மரங்களால் கட்டுப்படுத்த முடியும். இலைகளில் தாங்கிக்கொள்ளும் நச்சுப்பொருட்களை உள்ளிழுத்து காற்றை தூய்மைப்படுத்தும். எனவே, வீட்டின் அருகாமையிலும், சாலையோரங்களிலும், தொழிற்சாலை பக்கத்திலும் வேம்பு, புங்கம், மலைப்பூவரசு போன்ற நிழல் தரும் மரங்களையும், மா, பலா, நெல்லி போன்ற கனி தரும் மரங்களையும் நட்டுப் பாதுகாப்பது நலமுடையதாகும்.

மழை பொழியும் மரங்கள்: நானிலம் செழிக்க நன்னீராம் மழைநீர் தேவை. மழை நீர் விழுந்தால் ஆறுகள் கரை புரண்டோடும்; நிலம் குளுமையுறும்; தாவரங்கள் வளமையுறும்; தானியங்கள் விளைச்சலுறும்; வீடுயரும்; நாடுயரும்; உலகம் உயரும். இத்தகைய மழையை பெய்விக்கும் பெரும் பொறுப்பையும், சேவையையும் மரங்களே எடுத்துக் கொள்கின்றன. மரங்கள் தரும் குளிர் காற்று மண்ணில் ஓர் இரசாயன மாற்றம் செய்வதை அறிகிறோம்.

மண்ணரிப்பைத் தடுக்கும் அரண் மரங்களே: மண்ணரிப்புக்கு மழையும், காற்றும் காரணமாய் உள்ளன. பெய்யும் மழையை இலைகள், தாங்கிக்கொண்டு பின் நிலத்திற்கு அனுப்பும். சருகுகள் மூலம் நிலத்தில் நீரை தேக்கி வைத்துக் கொண்டு மழையின் ஆர்ப்பாட்டம் முடிந்த பின் மெதுவாக வெளிச் செலுத்தும். இங்ஙனம் மண்ணரிப்பை தடுப்பதோடு எப்போதும் ஈரப்பதத்தை ஏற்படுத்தி, வெளிச் செலுத்தும் நீரினால் சிற்சில ஊருணிகளுக்கும் காரணமாய் செயல்படுகின்றன மரங்கள். அடர்த்தியான மரங்கள் காற்றின் வேகத்தை குறைப்பதனால் காற்றினால் ஏற்படும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது. மரங்கள் இருந்தால் நிலச்சரிவு ஏற்படுவதில்லை.

இதையும் படியுங்கள்:
மனிதர்களுக்கு மனநல ஆரோக்கியம் ஏன் முக்கியம் தெரியுமா?
மனித உயிர் வாழ்க்கைக்கான ‘அனுமதிச் சீட்டு’ மரங்களே!

நிழற்குடையாகும் மரங்கள்: மனிதன் வெப்பத்தினின்று தப்பித்துக் கொள்ள குளிர்சாதனக் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்வது, இல்லங்களிலும், அலுவலகங்களிலும் ஒத்துப்போகலாம். ஆனால், வெளிக் காற்றில் உள்ள வெப்பத்தை தணிக்க மரத்தால்தான் முடியும். கடுமையான வெப்பத்தினால் களைப்புற்று நாம் மரங்களின் நிழலையே நாடுகிறோம். இருதய படபடப்பு தணிந்து உடலுக்கு இதமும் பெறுகிறோம். குளிர்ச்சியான உடலுடன் சிந்தனை ஓட்டமும், கடின உழைப்பும் பெற்று சுறுசுறுப்பாக நாம் வாழ மரங்கள் வழி செய்கின்றன.

பாதுகாப்புப் படலம்: வான மண்டலத்தில் இருக்கும் ‘ஓசோன்’ வாயுப் படலம் வானின்று வருகின்ற தீங்கு விளைவிக்கும் கதிர்கள் பூமியை அடையாதவாறு காக்கின்ற அரணாக உள்ளது. மரங்கள் அழிக்கப்படுவதால் தீயக்கதிர்கள் மனிதனையும், ஏனைய உயிர்களையும் நேரடியாக தாக்குவதால் உடல்நல குறைவும், கொடிய நோயான சருமப் புற்றுநோயும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, ஓசோன் படலம் பாதிக்கப்படாமல் இருக்க நாம் அதிக மரங்கள் நடுவதில் மிக ஆர்வம் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com