ரசாயன பூச்சிக்கொல்லிக்கு குட்பை சொல்லுங்க! செடிகளைப் பாதுகாக்க ஒரே ஒரு ஸ்பூன் மஞ்சள் போதும்!

செடிகளைப் பாதுகாக்கும் மஞ்சள் மற்றும் மாடித்தோட்டத்தில் மஞ்சள் வளர்ப்பு முறைகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் | Turmeric powder for plant protection
மஞ்சள் | Turmeric powder for plant protectionAI Image
Updated on

செடிகளுக்கு பூச்சிக் கொல்லியாகவும், மாடித்தோட்டத்தில் எளிதாக மஞ்சள் (Turmeric) வளர்க்கும் முறைகளையும் இந்த பதிவில் முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் (Turmeric) என்று எடுத்துக் கொண்டால் வீட்டில் தொடங்கும் சுப காரியங்களில் இருந்து அனைத்திற்கும் பயன்படுத்திக் கொள்வோம். சுப காரியங்களுக்கு நம்மை அழைப்பவர்கள் கூட மஞ்சள் குங்குமம் எடுத்துக் கொள்ள வாருங்கள் என்றுதான் மஞ்சளை முதன்மைப்படுத்தி கூறுவார்கள். இதிலிருந்து மஞ்சளைப் பற்றிய சிறப்பு தன்மைகளை புரிந்து கொள்ளலாம். அப்படி நம் வாழ்க்கையோடு இரண்டற கலந்தது மஞ்சள். சமையல் முதல் அழகு வரை மஞ்சள் இல்லாத முறையை நாம் பின்பற்றுவது இல்லை.

இந்த தோட்டக்கலையில் மஞ்சள் இரு முக்கிய வழிகளில் பயன்படுகிறது: ஒன்று, தோட்டச் செடிகளைப் பூச்சிகள் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கும் இயற்கைப் பூஞ்சை கொல்லியாக; மற்றொன்று, வீட்டிலேயே நாம் மஞ்சள் (Turmeric) பயிரிட்டு அறுவடை செய்யும் முறையாக. இவ்விரண்டைப் பற்றியும் விரிவாகக் கீழே காண்போம்.

​1. செடிகளைப் பாதுகாக்கும் அரணாக மஞ்சள்:

மஞ்சள் | Turmeric powder
மஞ்சள் | Turmeric powder

மஞ்சளில் உள்ள 'குர்குமின்' (Curcumin) என்ற கிருமி நாசினி, செடிகளுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளுக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது.

எறும்புகள் & பூச்சிகளை விரட்ட: செடியைச் சுற்றிலும் அல்லது தொட்டியின் விளிம்பிலும் மஞ்சள் தூளைத் தூவி விட்டால் எறும்புகள், மாவுப்பூச்சிகள் (Mealybugs) மற்றும் சிறு வண்டுகள் செடிகளை அணுகாது. மற்ற

​பூஞ்சைத் தொற்று & இலைப்புள்ளி நோய்: 1 லிட்டர் தண்ணீரில் 1-2 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து இலைகளின் மேல் தெளித்து வந்தால் சாம்பல் நோய் (Powdery Mildew) மற்றும் இலைகளில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும்.

கிளை நறுக்கிய இடங்களில் (Pruning Paste): ரோஜா அல்லது பிற செடிகளின் முற்றிய கிளைகளை வெட்டிவிட்ட பின், வெட்டப்பட்ட பகுதியில் மஞ்சள் தூளைச் சிறிதளவு தண்ணீரில் குழைத்துப் பூசி வந்தால், அக் காயத்தின் வழியாக பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றிச் செடி காய்ந்து போவது (Dieback) தடுக்கப்படும்.

வேர் அழுகல் தடுப்பு: புதிய செடிகளை நடும் போது மண்ணுடன் ஒரு கைப்பிடி மஞ்சள் தூள் கலந்து நட்டால், மண்ணில் உருவாகும் கிருமிகள் மற்றும் வேர் அழுகல் நோய் (Root rot) கட்டுப்படும்.

​2. வீட்டிலேயே மஞ்சள் வளர்க்கும் எளிய முறை:

மஞ்சள் | Turmeric plant
மஞ்சள் | Turmeric plant

​வீட்டிலேயே தொட்டி அல்லது மாடித் தோட்டத்தில் இயற்கை முறையில் மஞ்சள் செடி வளர்ப்பது மிகவும் எளிதானது.

​பயிரிடும் காலம் & விதை தேர்வு:

​ சித்திரை (ஏப்ரல் - மே) அல்லது வைகாசி மாதங்கள் மஞ்சள் நடவுக்கு மிகவும் உகந்தவை. இந்த மாதங்களில் நட்டால் அறுவடை தை மாத பொங்கல் சமயத்தில் கிடைக்கும்.

விதை மஞ்சள்: முளைக் கண்கள் (Sprouts) உள்ள ஆரோக்கியமான மஞ்சள் கிழங்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மாடித்தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்: குறைஞ்ச இடத்துல கொத்து கொத்தா காய்கறிகள் வளர்க்கலாம் வாருங்கள்!
மஞ்சள் | Turmeric powder for plant protection

​மண் கலவை & :தொட்டி:

குறைந்தது 12 முதல் 15 இன்ச் ஆழமும், அடியில் நல்ல வடிகால் வசதியும் கொண்ட தொட்டிகள் அல்லது க்ரோ பேக் (Grow bags) வகைகளை எடுத்துக்கொண்டு அதில் .40% செம்மண், 30% தேங்காய் நார்க்கழிவு (Coco peat), 30% தொழு உரம் அல்லது மண்புழு உரம் கலந்த மண் கலவை போட வேண்டும் .

அந்த ​ மண் கலவையில் 2 முதல் 3 இன்ச் ஆழத்தில் முளைக் கண்கள் மேல்நோக்கி இருக்குமாறு கிழங்கை நட்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.தினமும் 5 முதல் 6 மணி நேரம் நல்ல வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டும்.

​ மண் எப்போதும் லேசான ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்; அதிக தண்ணீர் தேங்கினால் கிழங்கு அழுகிவிடும் என்பதால் இதில் கவனம் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பல்லிகள் தலைதெறிக்க ஓடணுமா? உடனே இந்த 7 செடிகளை உங்க வீட்ல வளருங்க!
மஞ்சள் | Turmeric powder for plant protection

அறுவடை:

​நட்ட 8 முதல் 9 மாதங்களில் மஞ்சள் செடியின் இலைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறி, தானாகக் காயத் தொடங்கும்.

​அதுவே அறுவடைக்கான சரியான பருவம். செடியை வேரோடு மெதுவாகத் தோண்டி எடுத்து, புதிய பசுமை மாறா மஞ்சளை அறுவடை செய்யலாம்!​

குறிப்பு:

கடைகளில் வாங்கும் இரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாக, வாரத்திற்கு ஒருமுறை மஞ்சள் தூள் தெளிப்பானைப் பயன்படுத்துவது நமது வீட்டுத் தோட்டக் காய்கறிகளைப் பாதுகாப்பான முறையில் உட்கொள்ள வழிவகுக்கும். ஆதலால் வீட்டில் கிடைக்கும் இடத்தில் தொட்டியிலாவது மஞ்சளை நட்டு வீட்டு பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம். சுத்தமான இந்த மஞ்சளை அழகு பொருட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் வீட்டுத் தோட்டச் செடிகளைப் பூச்சிகளிடம் இருந்து பாதுகாத்து, எந்தவித நச்சுத்தன்மையுமின்றித் தூய்மையான நாட்டு மஞ்சளை உங்கள் கையாலேயே அறுவடை செய்து குடும்பத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com