கொடிக்காய் தாவரங்களை வளர்ப்பவர்கள் அதற்குக் கூடுதலாக கவனம் செலுத்தி பராமரிப்பு செய்ய வேண்டும். பிஞ்சுகள் பிடித்தாலும் அது உதிர்ந்து விடுவது ஊட்டச்சத்து குறைபாட்டை குறிக்கிறது. மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டங்களில் கொடிகள் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உரம் இது.
கொடிக்காய்களுக்கு அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம் சத்து தேவைப்படுகிறது. இந்த சத்துக்களை சரியான விகிதத்தில் கொடுக்கும்பொழுது பிஞ்சுகள் உதிராமல் இருக்கும். கொடிகளில் காய்க்கக்கூடிய பிஞ்சுகள் உதிராமல் இருப்பதற்கு பொட்டாசியம் சத்துள்ள உரம் கண்டிப்பாக தேவை. வீட்டுக் கொடிகளில் பூக்கும் ஒவ்வொரு மலரும் உதிராமல் நன்கு காய்க்க துவங்குவதற்கு தேவையான உரம் என்னவென்றால் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ள தேங்காய் மற்றும் நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளவும். தேங்காய் அழுகியதாக இருந்தாலும் பரவாயில்லை. வீணாகப்போகும் தேங்காயில் இருக்கும் சத்துக்கள் எண்ணற்றவை.
அரை மூடி தேங்காய்கு மூன்று பெரிய நெல்லி கனிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் இருக்கும் விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக சதைப்பற்றை நறுக்கி கொள்ளவும். தேங்காயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரண்டையும் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொண்டு அரைத்த விழுதை ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி மூன்று நாட்கள் வரை ஊற வைக்கவும். எந்த ஒரு உரத்தையும் மூன்று நாட்கள் அப்படியே விட்டு அதில் நுண்ணுயிரிகள் பெருகும்போது செடிகளில் ஊற்றினால் மண்ணிற்கு வளம் சேரும்.
காய்கள் வேகமாகவும், ஆரோக்கியமாகவும், வளர கார்பன் சத்து தேவை. இதற்கு ஒரு கத்தரிக்காய் எடுத்துக் கொண்டு அதை நன்கு நெருப்பில் காட்டி சுட்டு எடுக்கவும். அதன் தோல் பகுதியில் கார்பன் சத்து நிறைந்து இருக்கும். இந்தத் தோல் பகுதியை மட்டும் தனியாக எடுத்து அரை லிட்டர் தண்ணீருடன் கலந்து கொள்ளவும். இதையும் மூன்று நாட்கள் அப்படியே ஊற வைத்துக்கொண்டு மூன்று நாட்களுக்கு பிறகு இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து அரை லிட்டர் தண்ணீர் கூடுதலாக சேர்த்துக் கொண்டு பின்னர் இதை சிறிது கூட திப்பிகள் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும். வடிகட்ட கடைகளில் கொடுக்கும் துணி பையைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்கு வடிகட்டிய பின்பு இந்தத் தண்ணீரை ஒரு கப் அளவிற்கு ஒவ்வொரு கொடிகளுக்கும் அல்லது செடிகளுக்கும் ஊற்றி வர வேண்டும். கொடி காய்களில் முதலில் எப்போதும் ஆண் பூக்கள் பூக்கும். அதன் பிறகு பெண் பூக்கள் பூத்து அது காயாக மாறும். இதை ஊற்றியப் பிறகு கொடிகளில் உள்ள ஒரு பூ கூட உதிராமல் காயாக மாறுவதற்கு இந்த உரம் பயனுள்ளதாக இருக்கும்.
முதலில் செடிகளுக்குத் தேவையான அளவிற்கு சாதாரண தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். தண்ணீர் முழுவதும் மண் கலவை ஈர்த்துக்கொண்டு தேவையற்ற தண்ணீரை தொட்டியில் உள்ள துளை வழியாக வெளியேற்றி விடும். அதன் பிறகு இந்த உரத்தை கொடுக்க வேண்டும். அப்போதுதான் உரத்தில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் மண் கலவையிலும், கொடியின் வேருக்கும் கிடைக்கும். ஆண் பூக்கள் பூத்தப் பிறகு இந்த உரத்தை சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் போன்றவற்றிற்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம். இந்த முறையை பின்பற்றினால் உங்கள் வீட்டு கொடிக்காய்கள் கொத்து கொத்தாகக் காய்க்கும்.