வெயில் காலம், மழைக்காலம் என எந்த கிளைமேட்டாக இருந்தாலும் துணி துவைக்காமல் இருக்க முடியாது. வெயில் காலம் என்றால் துவைத்த துணிகள் விரைவாகக் காய்ந்து விடும். ஆனால், மழைக்காலத்தில் துணிகளைக் காய வைப்பது என்பது ஒரு சவாலான விஷயமாகவே இருக்கும். காரணம், காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். சூரிய ஒளியும் அவ்வளவாக இருக்காது.
துணிகளை ஃபேனுக்கு அடியில் காய வைத்தாலும் முற்றிலுமாக காய இரண்டு அல்லது மூன்று நாட்களாகலாம். இம்மாதிரியான சூழ்நிலையில், துணிகளைக் காயவைக்கும் அறையில் டிஹைமிடிஃபையர் (Dehumidifier) பயன்படுத்தலாம். இது காற்றில் உள்ள ஈரப்பதத்தைப் போக்கி துணிகள் காய்வதற்கு உதவியாக இருக்கும்.
துணிகளைக் காய வைப்பதற்காக வீடு முழுவதும் கயிறு கட்டி உலர்த்த முடியாது. அதன் ஈரப்பதம் காரணமாக வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு சளி தொந்தரவு ஏற்படலாம். எனவே, துணிகளை காயவைக்க கடைகளில் கிடைக்கும் ஸ்டாண்டுகளை வாங்கிப் பயன்படுத்தலாம். துணிகளை அதிக நெருக்கமாகப் போடாமல் சிறிது இடைவெளி விட்டு உலர்த்த சீக்கிரம் காய்ந்து விடும்.
துணிகளில் வரும் ஈர வாசனையைத் தவிர்க்க: மெஷினில் துவைப்பது என்றால் டிடர்ஜென்டுடன் சிறிது வினிகர் கலந்து துவைக்க, துணிகளில் ஈர வாசனை வராது. கைகளால் துவைப்பதாக இருந்தால் துணிகளை ஊறவைக்கும்பொழுது சோப்புத் தூளுடன் சிறிது வினிகரையும் கலந்து துவைக்க, மழைக்காலங்களில் துணிகளில் ஏற்படும் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
மழைக்காலங்களில் அதிக கனமான ஜீன்ஸ் பேண்ட், பெட்ஷீட் போன்ற துணிகளை துவைப்பதைத் தவிர்த்து விடவும். இவை காய்வதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, அவசியமான துணிகளை மட்டும் துவைத்தால் போதும்.
துணிகளைத் துவைத்ததும் சிறிது நேரம் தண்ணீர் வடிவதற்கு கொடியில் போட்டு வடிய விட்டு பின்னால் முடிந்தவரை தண்ணீரை நன்றாகப் பிழிந்துவிட்டு காயப் போடலாம். இது துணி காயும் நேரத்தைக் குறைக்கும். வாஷிங் மெஷினில் துவைப்பதாக இருந்தால் மீண்டும் டிரையர் ஆப்ஷனில் போட்டு எடுக்க சிறிதும் தண்ணீர் இல்லாமல் எடுத்து விடும். பிறகு ஃபேனுக்கு அடியில் காய வைக்கலாம்.
துணியின் சில்லிப்பு போக: ‘துவைத்த துணிகள் காய்ந்துவிட்டாலும், அவற்றைத் தொட்டால் சில்லென்று இருந்தால் பிள்ளைகளுக்கு எப்படி அந்த யூனிபார்மை போட்டு விடுவது?’ என்ற கவலை வேண்டாம். ஹேர் டிரையரை வைத்து துணியிலிருந்து 5 இன்ச் இடைவெளியில் வைத்து துணிகள் மீது காட்டி காய வைக்க துணியில் உள்ள சில்லிப்பு போய் வெதுவெதுப்பாகிவிடும். அப்புறமென்ன குழந்தைகளுக்குப் போட்டு விட வேண்டியதுதான். மற்றொரு வழி, துணிகளை அயன் செய்வது. இதனால் துணிகளில் உள்ள சில்லிப்பு போவதுடன், சுருக்கங்களும் காணாமல் போய்விடும்.