துபாயில் இன்று தொடங்கும் (COP28) ஐநா காலநிலை மாற்ற மாநாட்டின் சிறப்புகள்!

UN Climate Change Conference 2023.
UN Climate Change Conference 2023.

ன்று துபாயில் தொடங்கவுள்ள 2023ம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில், காலநிலை மாற்றத்திற்கான நிதியுதவி மற்றும் பூமியிலிருந்து கிடைக்கும் எரிபொருட்களை கட்டுப்படுத்துதல் போன்றவை முதன்மையான கருத்துக்களாக முன்வைக்கப்பட்டு பேசப்பட உள்ளன.

COP என்றால் என்ன? 

COP என்பது 1992ம் ஆண்டு நிறுவப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் முதன்மை முடிவெடுக்கும் அமைப்பாகும். இதில் ஐநாவில் உள்ள 197 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள்.

துபாயில் நடைபெறும் இந்த மாநாடு COP28 என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள், அரசாங்க பிரதிநிதிகள் ஒன்று கூட உள்ளனர். இன்று தொடங்கும் இந்த உச்சி மாநாடு, வரும் டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கார்பன் உமிழ்வுகள் மற்றும் புதைப்படிவ எரிபொருட்களை கட்டுப்படுத்துவது போன்றவை முக்கிய விவாதத்திற்குரிய ஒன்றாகப் பார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வளர்ந்து வரும் நாடுகள், வளர்ந்த நாடுகளிடமிருந்து அதிக விஷயங்களை எதிர்பார்ப்பதால், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப நாடுகளுக்கு உதவ சர்வதேச நிதி உதவி சார்ந்த விஷயங்களும் இதில் விவாதிக்கப்படும்.

COP28 ஏன் முக்கியமானது?

இந்த ஆண்டு நடைபெறும் COP28 மாநாடு இயற்கை பேரழிவு, வெப்ப அலைகள், கடுமையான காட்டு தீ மற்றும் பூமியின் வெப்பமான பகுதிகளின் பின்னணியில் நடைபெற உள்ளது. இவை அனைத்திற்கும் காரணமான விஷயங்களைப் பற்றி இதில் அதிகம் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். மேம்படுத்தப்பட்ட கருவிகள், தொழில்நுட்பம் மற்றும் நிதி மூலமாக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, இந்த நிகழ்வு வாய்ப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நகரத் தொடங்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!
UN Climate Change Conference 2023.

COP28 பற்றிய சர்ச்சைகள்:

பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் இந்த ஆண்டு நடக்கும் COP28ன் ஜனாதிபதி தேர்வு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அல்-ஜாபர் உலகின் காலநிலைப் போக்கை மாற்றும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமை தாங்கும் நிறுவனம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இப்படி இருக்கையில் அவர் எப்படி புதைப்படிவ எரிபொருட்கள் உமிழ்வை கட்டுப்படுத்துவார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இந்த மாநாட்டில் 140க்கும் மேற்பட்ட உலக நாட்டுத் தலைவர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள் என சுமார் 70 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து பிரதமர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இதில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com