திமிங்கல சுறாக்களின் தனித்தன்மையும் சிறப்பியல்புகளும்!

(ஆகஸ்ட் 30, சர்வதேச திமிங்கல சுறாக்கள் தினம்)
திமிங்கல சுறா
திமிங்கல சுறாhttps://ta.wikipedia.org
Published on

திமிங்கல சுறா (Whale Shark) என்பது பூமியில் வாழும் மிகப்பெரிய சுறா இனமாகும். அவை 14 மீட்டர் நீளம் வரை வளரும். சராசரியாக 12 டன் எடை இருக்கும். அவற்றின் சிறப்பியல்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

தனித்துவமான வடிவம்: திமிங்கல சுறாக்கள் அனைத்தும் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளன. ஒரு மனிதனின் கைரேகையைப் போலவே ஒவ்வொரு திமிங்கல சுறாவின் தோல் அமைப்பும் முற்றிலும் தனித்துவமானது என்பது மிகவும் வியப்பிற்குரிய செய்தி. அவைதான் திமிங்கல சுறா மீன் காட்சி பகுப்பாய்வுகளை இயக்கும் திறனை ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்குகிறது. தோல் அமைப்பை வைத்து அவர்கள் சுலபமாக அவற்றை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது.

தோற்ற அமைப்பு: திமிங்கல சுறாக்கள் உலகின் மிகப்பெரிய மீன் இனங்கள். திமிங்கல சுறாக்கள் ஒரு பரந்த, தட்டையான தலையும், ஒரு பெரிய வாயும் மற்றும் முன் மூலைகளில் இரண்டு சிறிய கண்களும் கொண்டவை. மற்ற சுறாக்களைப் போலல்லாமல், திமிங்கல சுறாவின் வாய், தலையின் அடிப்பகுதியில் இல்லாமல் தலையின் முன்புறத்தில் அமைந்துள்ளன.

உணவு முறை: அளவில் பெரியதாக இருந்தாலும் இவை வடிகட்டி ஊட்டிகள். அதாவது சிறிய மீன் மற்றும் சிறிய உயிரினங்களை முதலில் உண்கின்றன. இவை வாயைத் திறந்துகொண்டே நீந்துகின்றன. தண்ணீரை வெளியேற்றும்போது சிறிய உணவு துகள்களைப் பிடிக்க அவற்றின் கில் ரேக்கர்களை பயன்படுத்துகின்றன. இவற்றின் வாய் ஐந்து அடி அகலம் வரை இருக்கும் இதில் 300 வரிசைகள் வரை சிறிய பற்கள் உள்ளன. மத்தி, நெத்திலி, கானாங்கெளுத்தி, ஸ்க்விட் மற்றும் சிறிய டுனா மற்றும் அல்பாகோர் போன்ற சிறிய, பெரிய மீன்கள் மற்றும் மொல்லஸ்க்குகளையும் சாப்பிடுகின்றன.

மென்மையான ராட்சதர்கள்: திமிங்கல சுறாக்கள் அவற்றின் அடக்கமான மற்றும் ஆக்கிரமிப்பு இல்லாத இயல்புகளுக்காக அறியப்படுகின்றன. அவை சிறந்த டைவர்ஸ். பொதுவாக, இவை தனியாக இருக்கும். சில சமயங்களில் உணவுகள் நிறைந்த பகுதியில் பெரிய கூட்டமாகக் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
அல்சரை குணப்படுத்தும் பரங்கிக்காய்!
திமிங்கல சுறா

வாழ்விடம்: இவை வெப்ப மண்டல மற்றும் சூடான மிதமான கடல்களில் வசிக்கின்றன. சில சமயங்களில் உணவு ஏராளமாக கிடைக்கும் கடற்கரை ஓரங்களுக்கு அருகிலும் இருக்கும். இவை அதிகம் இடம் பெயர்பவை. உணவு மற்றும் பொருத்தமான இனப்பெருக்கம் செய்ய நீண்ட தூரம் பயணிக்கின்றன. தன் உடலுக்குள் கருவுற்ற முட்டைகளை வைத்து பாதுகாக்கின்றன. ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான குட்டிகள் அவற்றில் இருக்கும்.

ஆயுட்காலம்: திமிங்கல சுறாக்கள் நீண்ட ஆயுள் கொண்டவை. சுமார் 70 முதல் 100 ஆண்டுகள் வரை அல்லது அதற்கு மேலாக வாழும்.

நீச்சல் வேகம்: இவை ஒப்பீட்டளவில் மெதுவாக நகர்கின்றன. மணிக்கு மூன்று மைல் வேகத்தில் நீந்துகின்றன.

திமிங்கல சுறாக்களுக்கு ஏற்படும் அபாயங்கள்: மீன் பிடித்தல், வாழ்விட இழப்பு மற்றும் படகுகளுடன் மோதுதல் போன்ற அச்சுறுத்தல்கள் காரணமாக இவை அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் ஒன்றாக சேர்ந்துள்ளன. இந்த அற்புதமான கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இவற்றை பாதுகாப்பது அவசியம். பிளாஸ்டிக் கழிவுகள் இவற்றின் உடலுக்குள் நுழைந்து செரிமான பாதையில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. இது நிகழும்போது இவை பட்டினியால் இறக்க நேரிடுகின்றன.

மனிதர்கள் தங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, வேட்டையாடுவதையும் தவிர்த்து விட்டால் இந்த அற்புதமான ஜீவன்கள் உலகில் நீடித்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com