Papaya Value Addition
Papaya Value Addition

மதிப்புக் கூட்டுதல்: பப்பாளி பழத்தில் லாபம் பார்க்க சூப்பர் டிப்ஸ்!

Published on

பப்பாளி நல்ல வருவாய் தரக்கூடிய ஒரு பழம். இதனைப் பழமாக அப்படியே விற்றால் விவசாயிக்கு இலாபம் கிடைத்தாலும், அது குறைவாகவே இருக்கும். ஆனால் பப்பாளியை மதிப்புக் கூட்டி விற்க முயற்சித்தால் நல்ல இலாபத்தைப் பெற முடியும். பப்பாளியை எப்படி மதிப்புக் கூட்டி வருமானம் ஈட்டுவது என்பதை இப்போது பார்ப்போம்.

விவசாயிகள் அயராது உழைத்தும் விளைபொருள்களுக்கான நியாயமான விலை கிடைப்பதில்லை. இதனால் பல விவசாயிகள் கவலைப்பட்டாலும், விவசாயத்தை விட்டதில்லை. இருப்பினும், விவசாயிகள் மதிப்புக் கூட்டுதலைத் தெரிந்து அதன்படி சந்தையில் விற்பனை செய்தால் நிச்சயமாக நல்ல இலாபத்தை ஈட்ட முடியும். ஒரு பொருளை அப்படியே விற்பதற்கும், அதனை மதிப்புக் கூட்டி விற்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால் இதில் நேரத்தை செலவிடுவதோடு, தேவையான தெளிவு இருக்க வேண்டியதும் அவசியம்.

ஆண்டு முழுவதும் மகசூல் தரக்கூடிய பழமான பப்பாளியை முன்பெல்லாம் வீட்டுத் தோட்டத்தில் தான் அதிகமாக பார்ப்போம். ஆனால் இப்போது வியாபார நோக்கத்திற்காக பப்பாளி பழப் பண்ணையைத் தொடங்கும் அளவிற்கு இதன் மதிப்பு அதிகரித்து விட்டது. இலாபத்தை அள்ளிக் கொடுப்பதில் வாழைக்கு அடுத்த இடத்தில் பப்பாளி உள்ளது. மேலும் இதனை மதிப்புக் கூட்டி பப்பாளி டூட்டி புரூட்டி மற்றும் பப்பாளி ஊறுகாய் செய்வதன் மூலம் நல்ல இலாபத்தை ஈட்டலாம்.

பப்பாளி டூட்டி புரூட்டி:

தேவையான பொருள்கள்:

பப்பாளி காய் - 200கிராம்

சர்க்கரை - 140கிராம்

கால்சியம் குளோரைடு - 2கிராம்

தண்ணீர் - 60மிலி

செய்முறை:

நன்கு முதிர்ச்சியடைந்த பப்பாளி காய்களை நன்றாக கழுவி, விதை மற்றும் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதனை நீராவியில் 3 நிமிடங்களுக்கு வேக வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, கால்சியம் குளோரைடு கரைசலில் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் இதனை சர்க்கரைக் கரைசலில் ஒன்றரை மணி நேரத்திற்கு ஊற வைத்து, நிழலில் உலர்த்த வேண்டும். இதற்கு நிறமூட்டுவதற்கு நிறப்பொடிளைச் சேர்த்து, பின் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்ட வேண்டும். இதனை மீண்டும் நிழலில் உலர்த்தினால் பப்பாளி டூட்டி புரூட்டி தயாராகி விடும். இதனை பாக்கெட் செய்து விற்றால் நல்ல இலாபம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
அதிக மகசூல் பெற இந்த 4 வகையான மண்களின் தன்மையை தெரிந்து கொள்வோமா?
Papaya Value Addition

பப்பாளி ஊறுகாய்:

துருவிய பப்பாளி காய் - 1கிலோ

மஞ்சள் தூள் - 5கிராம்

வெந்தயத் தூள் - 20கிராம்

மிளகாய் தூள் - 20கிராம்

பெருங்காயத் தூள் - 5கிராம்

கடுகு - 10கிராம்

சீரகத் தூள் - 30கிராம்

வினிகர் - 50மிலி

நல்லெண்ணெய் - 500மிலி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அது சூடானதும் கடுகைப் போட்டு தாளித்து பின், துருவிய பப்பாளி காயை போட்டு நன்றாக வதக்கவும். பப்பாளி வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில், ஏற்கனவே வறுத்து வைத்துள்ள சீரகத் தூள், பெருங்காயத் தூள் மற்றும் வெந்தயத் தூளைச் சேர்த்து கிளறி விடவும். கடைசியாக வினிகரை சேர்த்துக் கிளறி இறக்கி விடலாம். சூடு ஆறியதும் காற்று புகாதவாறு கண்ணாடி குப்பியில் அடைத்து வைத்தால் பப்பாளி ஊறுகாய் ரெடி. ஊறுகாயை அதிகம் பேர் பயன்படுத்தி வருவதால், இதற்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.

பப்பாளி விவசாயம் செய்யும் விவசாயிகள் சிறிதளவு நேரம் ஒதுக்கி மேற்கண்ட முறையில் பப்பாளியை மதிப்புக் கூட்டினால், நல்ல இலாபத்தைப் பெற முடியும். விவசாயத்தில் பல மணி நேரத்தை ஒதுக்கும் விவசாயிகள், மதிப்புக் கூட்டுதலில் சில மணி நேரத்தை ஒதுக்க முன்வர வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com