
கடல் ஓநாய்கள் கனடாவின் பசிபிக் கடற்கரையில் உள்ள மழைக்காடுகளில் வாழும் ஒரு தனித்துவமான ஓநாய் இனமாகும். வான்கூவர் கடற்கரை கடல் ஓநாய், வான்கூவர் தீவு ஓநாய், கடலோர ஓநாய் அல்லது கடல் ஓநாய் (Canis lupus crassodon) என்றும் அழைக்கப்படுகிறது, இது வடமேற்கு ஓநாய்களின் ஒரு கிளையினமாகும். இது பசிபிக் வடமேற்கு கடற்கரையில் மட்டுமே காணப்படுகிறது. இவை வலுவான நீச்சல் வீரர்களாக இருப்பதால், சாலிஷ் கடலில் உள்ள பல தீவுகளிலும் வாழ்கின்றன.
நிலப்பரப்பில் காடுகளில் காணப்படும் காட்டு ஓநாய்களும், கடலோரத்தில் காணப்படும் கடல் ஓநாய்களும் ஒரே மாதிரியாக காட்சியளித்தால்கூட கடல் ஓநாய்கள் மரபணு ரீதியாக வேறுபட்டவை.
பொதுவாக, காட்டு ஓநாய்கள் சிறு விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும். ஆனால், கடல் ஓநாய்கள் நீண்ட தொலைவுக்கு தண்ணீரில் நீந்தும் திறன் கொண்டவை. இவை கடலில் தீவுகளுக்கு இடையில் நீந்தி மீன்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடுகின்றன. கடலோர ஓநாய்கள் நீர்நாய்களைப் போல நீந்தும் மற்றும் மழைக்காடுகளில் வாழும் கரடிகளைப் போல மீன் பிடிக்கவும் செய்யும்.
இரையை தந்திரமாக வேட்டையாடுவதில் திறன் வாய்ந்தவை. உயிரினங்களுக்கு எந்த சந்தேகமும் வராத அளவுக்கு திருட்டுத்தனமாக நகரும். அவற்றின் முதுகு மற்றும் உடல் மட்டுமே நீரில் மூழ்கி இருக்கும். அவற்றின் காதுகள், கண்கள் மற்றும் மூக்கு நீரின் மேற்பரப்பில் சிறிதளவு வெளியே தெரியும். இரையை நெருங்கியவுடன் ஒரே பாய்ச்சலில் பிடித்துவிடும்.
கடலில் சில நேரங்களில் மீன்கள் கிடைக்காதபோது இவை கடல் பகுதியை ஒட்டிய நிலப்பரப்புக்கு வந்து கருப்பு வால் மான் மற்றும் கடமான் இனங்களை வேட்டையாடி உண்கின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். கடலோர ஓநாய்கள் நீர்நாய்கள், சீல்கள் மற்றும் அவற்றின் குட்டிகள் போன்ற கடல் பாலூட்டிகளையும், மான் போன்ற நிலத்தில் வாழும் பாலூட்டிகளையும் தீவிரமாக வேட்டையாடும். பருவங்கள் மற்றும் உணவு ஆதாரங்களின் பற்றாக்குறை மாறும்போது ஓநாய்களின் உணவு மாறுபடும்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த கடல் ஓநாய்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த கடல் ஓநாய்கள் உள்ளூர் பழங்குடி மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வான்கூவர் தீவு ஓநாய்கள் 1.2 முதல் 1.5 மீட்டர் (4 முதல் 5 அடி) வரை நீளமுள்ளவை. மேலும் இவை 29 முதல் 40 கிலோ வரை எடையுள்ளவை. மற்ற ஓநாய்களைப் போலவே, பாலினங்களுக்கிடையில் அளவு வேறுபாடு உள்ளது. ஆண் இனம் பெண்களை விட பெரியவை. அவற்றின் நிறம் சிவப்பு-பழுப்பு, சாம்பல், பழுப்பு-வெள்ளை மற்றும் முற்றிலும் வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படுகின்றன.