மனிதர்கள் பலவிதம். கலகலப்பாக பழகக் கூடியவர்கள், அமைதியான ஆசாமிகள், எதையும் டேக் இட் ஈஸி பாலிசியாக வைத்திருக்கும் ஜாலி மனதுக்காரர்கள், அழுத்தமானவர்கள் என்று பல வகை உண்டு. அதில் ஓநாய் வகை ஆளுமைத் தன்மை கொண்ட மனிதர்களும் உண்டு. அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. தனிமை விரும்பிகள்: இவர்கள் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள். தனிமை இவர்களுக்கு சந்தோஷத்தையும் அமைதியையும் ஒருவிதமான சௌகரியமான மனநிலையையும் தரும். இவர்களுக்கு நண்பர்கள் வட்டம் மிகக் குறைவாகவே இருக்கும். அப்படி இருந்தபோதிலும் தனியாக இருப்பதைத்தான் விரும்புவார்கள். தன்னுடைய நேரத்தை தனக்குப் பிடித்த மாதிரி செலவு செய்வதில்தான் இவர்களுக்கு ஆர்வம் அதிகம்.
2. கூட்டத்தின் பின் போக விரும்ப மாட்டார்கள்: இவர்களிடம் மாஸ் மெண்டலிட்டி எனப்படும் கூட்டத்தினரின் மனோநிலை இருக்காது. பொதுவாக, கூட்டமாக ஒரு இடத்தில் மக்கள் குவிந்திருந்தால் அங்கே செல்ல விரும்பவே மாட்டார்கள்.
3. சுய ஊக்கம் மிகுந்தவர்கள்: இவர்களுக்கு பிறர் ஊக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. தன்னைத்தானே ஊக்கம் ஊட்டிக் கொள்வதில் வல்லவர்கள். தனக்கான இலக்குகள், அதை அடையும் முறை இதைப்பற்றி தெளிந்த அறிவு இவர்களுக்கு இருக்கும்.
4. தன் பிரச்னையை தானே சமாளிப்பதில் வல்லவர்கள்: தன்னுடைய வாழ்வில் ஏதாவது சிக்கல்கள் சிரமங்கள் வந்தால் பிறருடைய உதவியை நாடாமல், தானே அதை சமாளித்து வெற்றி அடைவார்கள்.
5. தனிமை விரும்பிகள் என்றாலும் மனிதர்களை வெறுப்பவர்கள் அல்ல: இவர்களுக்கு தேர்ந்தெடுத்த குறைந்த எண்ணிக்கையிலான நண்பர்களும் உறவு கூட்டமும் மட்டுமே இருக்கும். அவர்களுடனே இவர்களால் சந்தோஷமாக வாழ முடியும். அவர்களுடனான நட்பும் உறவும் ஆழமாகவும் அர்த்தமுள்ளதாகவும் நம்பிக்கைத் தன்மை உடையதாகவும் இருக்கும்.
6. வித்தியாசமாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்: பிறரைப் போல தான் இல்லையே என்று வருத்தப்பட மாட்டார்கள். அதுதான் தன்னுடைய பலம் என்று நினைப்பார்கள். வித்தியாசமாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.
7. சுய விழிப்புணர்வு அதிகம் உடையவர்கள்: தன்னைப் பற்றிய தெளிவான அறிவும் புரிதலும் இவர்களுக்கு இருக்கும். தனக்கு உண்மையுடன் நடந்து கொள்வார்கள். தன் பலம் மற்றும் பலவீனங்களை பற்றி நன்கு அறிந்தவர்கள். தன்னுடைய விருப்பு, வெறுப்புகள் பற்றியும் தெரிந்தவர்கள். பிறரை திருப்திபடுத்த வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்.
8. பிறர் பேசுவதை கேட்பதில் வல்லவர்கள்: பிறர் பேசும்போது மிகுந்த கவனத்துடன் கேட்பார்கள். வெறுமனே அவர்கள் பேசும் வார்த்தைகளை மட்டும் கவனிக்காமல் பேசுபவரின் உணர்வுகளையும் உள்ளத்தையும் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். அதனால் இவர்களை நண்பராகக் கொண்டவர்கள் இவர்களை விட்டுப் பிரிய மாட்டார்கள். ஆனால், இவர்களுடைய உறவும் நட்பும் பலமாக இருக்கும்.