
மனிதர்களுக்கு மட்டும்தானா ஆம்புலன்ஸ் சேவை? ஆடு மாடுகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. ஏன் பறவைகளுக்கும் கூடத்தான் ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. கால்நடைகளை வளர்ப்பவர்கள் இந்த ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்கு '1962' என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
அத்துடன் தெளிவான முகவரி, அவர்களின் பெயர், கால்நடைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை போன்றவற்றை குறித்து முழுமையான தகவல்களை தெரிவித்தால் போதும். அதற்கு ஏற்ப உரிய ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.
ஆடு மாடுகள் கன்று போடுவதில் ஏற்படும் பிரச்னைகள், விஷச் செடிகளை சாப்பிட்டதால் ஏற்படும் ஆபத்து, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டியதால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் கால்நடைகளின் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர் மற்றும் ஓட்டுனரும் பணியில் இருப்பார்கள். இந்த வாகனத்தில் குளிர்சாதன வசதி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், ஜெனரேட்டர், மாடுகளை படுத்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ எடுத்துச் செல்வதற்கு வசதியாக ஹைட்ராலிக் லிப்ட், அவசரகால சிகிச்சைகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள், மருந்துகள் என அனைத்தும் இருக்கும்.
பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மேல் சிகிச்சை தேவை என்றால் கால்நடையை அதே வாகனத்தில் கொண்டு சென்று அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பறவைகளுக்கான ஆம்புலன்ஸ்:
மின்கம்பத்தில் பட்டு காயமடையும் பறவைகள், பட்டம் பறக்க பயன்படும் நூல்களில் சிக்கி காயம் அடையும் பறவைகள், கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டு அவதிப்படும் பறவைகள் என கவனிப்பாரற்று பல பறவைகள் பறக்க முடியாமல் மெல்ல மெல்ல உயிரை இழக்கின்றன.
அவற்றிற்கு உதவவேண்டும் என்ற எண்ணத்துடன் பைக் மூலம் பறவைகளுக்கு உதவும் Bird Man பிரின்ஸ் மேரா (Prince Mera) சண்டிகரின் கால்நடை துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் 2011 ஆம் ஆண்டு முதல் பறவைகளுக்காக ஆம்புலன்ஸ் ஒன்றையும் இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் சைக்கிளையே ஆம்புலன்ஸாக பயன்படுத்திய இவர் தற்போது ஒரு இ பைக் (e-bike) மூலம் பறவைகளை காப்பாற்றி வருகிறார்.
அதேபோல் டெல்லியைச் சேர்ந்த 2 சகோதரர்கள் பறவைகளுக்காக தனியாக ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகின்றனர். அமித் மற்றும் அபிஷேக் என்ற இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக பறவைகளுக்காக தங்களுடைய சொந்த பணத்தில் இருசக்கர வாகனம் ஒன்றை பறவைகளின் ஆம்புலன்ஸாக மாற்றி பறவைகளுக்கு முதலுதவி செய்து வருகின்றனர்.
இரண்டு பேரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இன்று நிறைய பேர் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். இவர்கள் கழுகு, ஆந்தை, புறா, மயில் போன்ற பறவைகளையும் காப்பாற்றி வருகின்றனர்.