

உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும் 'நடக்கும் மரம்' (Walking Palm) உண்மையில் தன் இடங்களை மாற்றிவிட்டுப் நடக்கிறதா? அல்லது அத்தகைய பிரம்மையை உருவாக்கும் அதன் வேர்களின் பின்னால் ஏதேனும் சுவாரஸ்யமான அறிவியல் மர்மம் மறைந்துள்ளதா? இந்தக் கேள்விக்கான மிரள வைக்கும் உண்மைகளை அறிய தொடர்ந்து படியுங்கள்!
இயற்கையின் வரமான மரங்கள் பூமியின் நுரையீரல்கள் ஆகும். அவை மனிதர்களுக்கு தேவையான பிராணவாயுவை (oxygen) வழங்கி கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சுகின்றன. உணவு, மழை, நிழல் மற்றும் மருந்துப் பொருட்கள் தருவதோடு மண் அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீரையும் பாதுகாக்கின்றன. புவி வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுவது மிகவும் அவசியமாகும்.. மரங்கள் பூமியின் உயிர் நாடி. மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கும் மரங்கள் இன்றியமையாதவை. "மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" என்பது வெறும் வாசகம் மட்டும் அல்ல... மனிதகுலத்தின் எதிர் காலத்திற்கான அடித்தளம்..
சரி... மரங்கள் நடப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
மனிதர்களைப் போல கால்களை எடுத்து வைத்து ஒரு மரம் மெதுவாக நகர்ந்து செல்வதை நினைத்துப் பாருங்கள். இது ஒரு கற்பனை கதையாக தோன்றலாம்.
ஆனால் மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் அடர்ந்த மழைக்காடுகளில் காணப்படும் ஒரு விசித்திரமான பனை மரம் 'நடக்கும் மரம்' என்று உலகையே வியக்க வைத்துள்ளது.. உண்மையில் அந்த மரம் நடக்கிறதா? அல்லது அதன் வித்தியாசமான வேர்கள் நமக்கு அப்படி தோற்றம் அளிக்கின்றனவா?
இந்த மரத்தின் அடையாளம்
இதன் அறிவியல் பெயர் Socrates exorrhiza . இதன் தண்டு வழக்கமான மரங்களைப் போல நேரடியாக மண்ணிலிருந்து எழுவதில்லை. நீண்ட தூண் போன்ற பல வேர்கள் தரையில் பதிந்து மரத்தை தாங்கி நிற்கின்றன. இந்த வேர்கள் மரத்திற்கு கால்கள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
வித்தியாசமான வேர்கள்
இந்த வேர்கள் stilt roots என்று அழைக்கப்படுகின்றன. மழைக்காடுகளில் மண் ஈரமாகவும் சில நேரங்களில் நிலையற்றதாகவும் இருக்கலாம். அத்தகைய சூழலில் இந்த வேர்கள் மரத்திற்கு கூடுதல் ஆதரவை வழங்கக் கூடும்.
நடக்கும் மரம் என்ற நம்பிக்கை
புதிய வேர்கள் ஒரு பக்கத்தில் வளர்ந்து பழைய வேர்கள் மறுபக்கத்தில் அழிந்து விடுவதால் மரம் மெதுவாக நகர்கிறது என்ற நம்பிக்கை உருவானது. இந்த கதை பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவியது.
அறிவியல் என்ன சொல்கிறது?
ஆனால் ஆய்வாளர்கள் இந்த மரம் உண்மையில் நடந்து இடம் மாறுகிறது என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறுகின்றனர். அதன் வேர்களின் அமைப்பே அதன் விசித்திர தோற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்பது தான்.
இயற்கையின் அதிசயம்.
இயற்கை சில நேரங்களில் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வடிவங்களை உருவாக்குகிறது. மரம் நடக்கா விட்டாலும் அதன் வேர்களின் தனித்துவமான அமைப்பு நிச்சயமாக வியப்பூட்டக் கூடியது.
மழைக்காட்டின் சூழல்.
Walking palm காணப்படும் அமேசான் மற்றும் மத்திய அமெரிக்க மழைக்காடுகள் மிகவும் அடர்த்தியானவை. அங்கு உயரமான மரங்களின் இலைகள் சூரிய ஒளியை மறைத்து விடுகின்றன. எனவே ஒளியைப் பெறுவதற்காக தாவரங்கள் பல்வேறு விதங்களில் தங்களை மாற்றிக் கொள்கின்றன. இந்த பனையின் உயரமான தூண் போன்ற வேர்கள் அடர்ந்த காடுகளில் மற்ற தாவரங்களுடன் போட்டியிட உதவக் கூடும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மரத்தின் வாழ்க்கை
இந்த பனை மரத்தின் வேர்கள் மண்ணுக்கு மேலே உயர்ந்து நிற்பதால் அதன் தண்டு தரையில் இருந்து மேலே தொடங்குவது போல தோன்றுகிறது. இது மழைக்காடுகளில் ஏற்படும் வெள்ளம் அல்லது மண் அரிப்பு போன்றவற்றிலிருந்து மரத்திற்கு ஓரளவு பாதுகாப்பை வழங்கக் கூடும்.
இயற்கையின் தழுவல்
பாலைவனத்தில் கள்ளிச்செடி தண்ணீரைச் சேமிப்பது போலவும் சதுப்பு நிலங்களில் சில மரங்கள் வேர்களைப் போல வளர்ப்பது போலவும் walking palm ன் வேர்களும் அதன் வாழிடத்திற்கு ஏற்ற இயற்கையான மாற்றமாக இருக்கலாம்.
walking palm மரம் உண்மையில் நடக்கிறதா என்பது விவாதமாக இருக்கலாம். இன்னும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அதன் வித்தியாசமான வேர்கள் இயற்கையின் அற்புதமான படைப்பாற்றலை நமக்கு உணர்த்துகின்றன. சுவாரஸ்யமான அறிவியல் உண்மை இருக்கிறது என மனிதர்களை ஒரு கணம் நின்று இயற்கையை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்து விட்டது இந்த walking palm மரம் என்பதில் சந்தேகமில்லை..
இயற்கையின் விசித்திரப் படைப்புகளின் பின்னிருக்கும் அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்வதன் மூலம், நமது கற்பனைத் திறனை விரிவுபடுத்தி இயற்கை உலகை புதிய கோணத்தில் அணுகும் தெளிவைப் பெறலாம்.