'வயநாடு வருத்தமுடைத்து!' மேற்கு மலைத் தொடரே காணாமல் போய்விடும் பேராபத்து... எச்சரிக்கை விடும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்!

Wayanad Landslide
Wayanad Landslide
Published on

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவுப் பேரழிவு, அனைவரையும் வருத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் 2019ல் இதே பகுதியில் புத்துமலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை உண்டாகியது.

"மேற்கு மலைத் தொடர், அதன் இயற்கைத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது. சில வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு மலைத்தொடர் இருந்ததா என்று வியக்கும் அளவுக்கு மலைச்சரிவு ஏற்பட்டு மொத்தமாக இந்தத் தொடரே காணாமல் போய்விடும் பேராபத்து இருக்கிறது. மாநில மற்றும் மத்திய அரசுகள் விரைந்து செயல்பட்டால்தான் இந்தச் சரிவு அழிவைத் தடுக்க முடியும்" என்று சுற்றுச் சூழல் ஆர்வலரான மாதவ் காட்கில் அப்போதே எச்சரித்திருந்தார். 

வழக்கம்போல இந்த எச்சரிக்கை எள்ளி நகையாடப்பட்டது. மலையாவது, காணாமல் போவதாவது, சுத்த ஹம்பக் என்றெல்லாம் கேலி செய்து அவர் மீது குற்றமும் சாட்டினார்கள் அரசியல்வாதிகள். 

ஆனால் அது உண்மையாகிறதோ என்ற அச்சத்தை சமீபத்திய வயநாடு மலைச் (நிலச்) சரிவு உருவாக்கியிருக்கிறது. 

சரி, மேற்கு மலைத் தொடர் எத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டது, பார்க்கலாமா?

மூன்றுபுறமும் நீரால் சூழப்பட்ட தீபகற்ப இந்தியாவின் மேற்குக் கடற்கரை ஓரத்தில் மேற்குத் தொடர் மலைகள் எல்லை அரண்போலத் திகழ்கின்றன. 

மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்கள் வழியாக வடக்கிலிருந்து தெற்காக 1600 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருக்கிறது இத்தொடர். இது பாரதத்தின் தென் முனையான கன்னியாகுமரியில் முடிவடைகிறது.

இதையும் படியுங்கள்:
கிடுகிடுக்கும் நிலச்சரிவுகள்... ஏற்படும் பேரழிவுகள்... காரணங்கள் என்ன?
Wayanad Landslide

150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு கோணட்வானா என்ற கண்டம் சிதறுண்டபோது இந்த மலைத்தொடர் உருவானதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

மகாராஷ்டிர மாநில எல்லை அருகே தப்தி நதிக்குத் தெற்கே ஆரம்பிக்கும் இந்த மலைத் தொடர், அம்மாநிலத்தில் ஸஹயாத்ரி என்றும், கர்நாடகத்தில் பிலிகிரி ரங்கணா பெட்டா என்றும், தமிழ்நாட்டில் நீலகிரி என்றும், கேரளத்தில் சஹாய பர்வதம் என்றும் அழைக்கப்படுகிறது.

சற்றும் இடைவெளி இன்றி நீளும் இந்தத் தொடர், ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மழை நீரைச் சுமந்து செல்லும் மேகங்களைத் தடுத்து அங்கேயே மழையாகப் பொழிய வைக்கிறது. தென்னிந்தியாவின் வற்றாத ஜீவநதிகள் அனைத்துக்கும் உற்பத்தி ஸ்தானமாக இந்தத் தொடரே அமைகிறது. 

கோதாவரி, கிருஷ்ணா, காவேரி மற்றும் அவற்றின் உபநதிகளான துங்கபத்ரா, ஹேமாவதி, கபினி ஆகியவையும் இம்மலைத் தொடர் அளிக்கும் அற்புத பிரசாதம். இந்த நதிகள் கிழக்கு நோக்கிப் பாய்ந்து இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.

இதே தொடரிலிருந்து உருவாகும் மாண்டோவி, ஜுவாரி போன்ற நதிகள் பாய்ந்து சென்று அரபிக் கடலில் கலக்கின்றன. இந்த மலைத் தொடரில் பல அணைகளும், நீர்மின் நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. 

மழைக்காலங்களில் பெருமளவில் உயரேயிருந்து பெரிய நீர்வீழ்ச்சிகளாக நீர் வரத்துப் பெருகி, பிறகு நதிகளில் சேர்கிறது. தெற்கு ஆசியாவிலேயே மிக உயரத்திலிருந்து வீழும் இயற்கை நீர்வீழ்ச்சியாக ஜோக் கருதப்படுகிறது. இதைப் போலவே குன்சிக்கல், சிவசமுத்திரம் ஆகிய நீர்வீழ்ச்சிகளும் குறிப்பிடத்தக்கவை.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளே! மண்ணின் மலட்டுத்தன்மையை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Wayanad Landslide

இம்மலைத் தொடரில் விலங்கு மற்றும் பறவைகளுக்கான சரணாலயங்கள் பல உள்ளன. இவற்றில் மலபார் புனுகுப் பூனை, சிங்கவால் குரங்கு, யானை, புலி, மான், காட்டுப் பன்றி போன்ற மிருகங்களை சந்திக்கலாம். பல அபூர்வ தாவர வகைகளும் மலையெங்கும் பரவியுள்ளன. சுற்றுலாவாசிகளின் உள்ளங் கவரும் லோனாவாலா, கண்டாலா, மஹாபலேஷ்வர், குத்ரேமுக், குடகு, ஊட்டி, மூணாறு போன்ற பல தலங்கள் இத்தொடரில் பரவியுள்ளன. காபி, தேயிலைத் தோட்டங்களும் மக்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகின்றன. 

இயற்கை நமக்குத் தந்த கொடை மேற்கு மலைத் தொடர். இதனை நாம் அலட்சியப்படுத்துவதால், அது அப்படியே பகுதி பகுதியாகச் சரிந்து, தன் வருத்தத்தைக் காட்டிக் கொள்கிறது. 

என்ன செய்ய, நூற்றுக்கணக்கான மனித உயிர்கள், உடைமைகள், பொது சொத்துகள் எல்லாம் பலிகொடுத்தும், இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கும் படிப்பினையை வளர்த்துக் கொள்ள இயலாத அறியாமையில்தான் நாம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com