
நல்ல விவசாயிகள் மற்றும் காடுகளில் வசிக்கும் மக்களிடத்தில் ஒரு நிலத்தை காண்பித்தால் அந்த மண்ணை கண்ணால் பார்த்தே இது மிகவும் வளமுடையது அல்லது மிதமான வளமுடையது என்று சரியாக கணித்துச் சொல்வார்கள். அதை அவர்கள் எப்படி கணிக்கிறார்கள், அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
காடுகளில் உள்ள அடர்ந்த மரங்கள், முட்புதர்கள் மற்றும் இதர தாவரங்கள் அவற்றோடு இணைந்து வாழும் உயிரினங்கள் ஆகியவற்றையே உயிர்க்கூறுகள் என்கிறார்கள். அந்த உயிர்க்கூறுகளே உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், சிதைப்போர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.
சாதாரண காடுகள் மற்றும் வெப்ப மண்டல மழைக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகளில் காணப்படும் பல்வகை இன பெரிய மரங்கள் உற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இம்மரங்களுடன் புதர்களும், புற்களும், கொடிகளை உடைய செடிகளும் சேர்ந்து வளர்கின்றன.
அதிக எண்ணிக்கையுடைய சோரியா, ரொபஸ்டா, பயூட்டி பிராண்டசா, டெக்னோனா, கிராண்டிஸ், டிப்டேரோகார்பஸ் ஆகிய மர வகைகள் இக்காடுகளில் முக்கிய உற்பத்தியாளர்களாகும். வெப்பமுள்ள காடுகளில் குயிர்கஸ் போன்ற அகல இலைகளை உடைய வகைகள் அதிகம் வளர்கின்றன. ஆபீஸ், பைகி, சிட்ரஸ், பைனஸ் போன்ற மரங்கள் ஊசியிலைக் காடுகளில் அதிகம் வளர்கின்றன.
காடுகளில் உள்ள விலங்குகள் நுகர்வோர்கள் என்று அழைக்கப்படுகின்றன. காடுகளின் தன்மைக்கு ஏற்ப அவற்றை ஒட்டி வாழும் விலங்கினங்களும் பல்வேறு வகையாகக் காணப்படுகின்றன. மரங்களின் இலைகளில் வாழும் எறும்புகள், ஈக்கள், வண்டுகள், பூச்சிகள், சிலந்திகள் ஆகிய சிறிய சிறிய உயிரினங்கள், கீரிப்பிள்ளை போன்ற தாவர உண்ணிகளாகிய தொடக்கநிலை நுகர்வோர்களும் பாம்புகள், பறவைகள், பல்லிகள், நரிகள் போன்ற புலால் உண்ணிகளாகிய இரண்டாம் நிலை நுகர்வோர்களும், சிங்கம், புலி போன்ற உச்சநிலை புலால் உண்ணிகள் ஆகிய நுகர்வோர்களும் இத்தகைய காடுகளில் வாழ்கின்றன.
இக்காடுகளில் ஆஸ்பெர்ஜில்லஸ், ஆல்டர்நேரியா, பியூசரியம் போன்ற பூஞ்சக் காளான் வகைகள் உள்ளன. பாசில்லஸ், பிசிட்டோமோனாஸ், கிளாஸ்டிரிடியம் போன்ற பாக்டீரியா இனங்களும் உள்ளன. ஆக்சன்மைசிட்டிஸ் போன்ற நுண்ணிய உயிரினங்கள் வாழ்கின்றன. இவை காட்டில் உள்ள மரங்களில் இருந்து மண்ணில் விழும் இலை தழைகள், இறந்த உடல்களின் சிதிலங்கள் ஆகியவற்றை சிதைக்கும் பணியைச் செய்கின்றன. எனவே, இவை சிதைப்போர்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு சிதைப்போர்களால் சிதைக்கப்பட்ட சத்துக்கள் மண்ணுடன் சேர்வதால் மண் மிகவும் வளமுடையதாகிறது.
ஆதலால் அனுபவ அறிவு மிக்கவர்கள் காடு அதனை சார்ந்த இடங்களில் உள்ள நிலங்களை பார்வையிடும் போது அந்த மண்ணின் வளமான தன்மையை பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து கூறி விடுகிறார்கள்.