சாலையில் அடிபட்டு இறக்கும் விலங்கினங்களைக் காக்கும் வழிகள்!

செப்டம்பர் 25, தேசிய சாலை கொலை தினம்
National Road Kill day
National Road Kill dayhttps://www.daysoftheyear.com
Published on

சாலைகளைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு காயமடைந்து அல்லது கொல்லப்படும் விலங்குகள் ஏராளம். சிறிய பாலூட்டிகளான முயல்கள், அணில்கள், பாம்புகள், பல்லிகள், ஓணான்கள், தவளைகள், தேரைகள் போன்ற ஊர்வன உயிரினங்கள், சிறிய பாடல் பறவைகள் முதல் வான்கோழிகள் மற்றும் கழுகுகள் போன்ற பெரிய பறவைகள், நாய்கள், பூனைகள், மான்கள், நரிகள், கால்நடைகள் போன்ற விலங்குகள் சாலையில் அடிபட்டு காயம் அல்லது மரணத்தை எதிர்கொள்கின்றன. இவற்றைக் காக்கும் வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சாலை கொலை தினம் ஏற்படுத்தப்பட்டதன் காரணங்கள்: வன விலங்குகளுக்கு மற்றும் தெருவில் திரியும் விலங்குகளுக்கு சாலைகளால் ஏற்படும் துயரமான தாக்கம் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு குழுக்களால் அமெரிக்காவில் 2020ல் தேசிய சாலைக் கொலை தினம் நிறுவப்பட்டது. மேலும், வாகனங்களால் பூச்சி இனங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன என்று கண்டறியப்பட்டது. வவ்வால்கள், ஆந்தைகள், சிறிய பூச்சி இனங்கள், வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ஈர்க்கப்பட்டு அடிபட்டு இறக்க நேரிடுகின்றன. இவற்றை பாதுகாப்பதற்கான ஒரு கூட்டு முயற்சியாக சாலை கொலை தினத்தை அனுசரிக்கிறார்கள்.

சாலைகளில் விலங்கு கொலைகள் நடைபெறுவதற்கான காரணங்கள்: வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே செல்லும் விலங்குகளை கவனிக்காமல் இருக்கலாம். குறிப்பாக, இரவு நேரங்களில் அதிக வேகத்தில் செல்லும்போது விலங்குகள் அடிபடுகின்றன. சாலை வடிவமைப்புகள் விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அமைக்கப்படுவதால் அடிக்கடி அவற்றிற்கு தீங்கு நேர்கின்றன. உணவு பற்றாக்குறை, வாழ்விடம் துண்டாடப்படுதல், உணவுக்காக இடம் பெயர்தல் போன்ற காரணங்களால் சில விலங்குகள் சாலைகளை அதிகமாகக் கடக்க வாய்ப்பு உள்ளது.

தீர்வுகள்: இரவில் வாகனம் ஓட்டும்போது, குறிப்பாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வேகத்தை குறைத்துக் கொண்டு செல்ல வேண்டும். சுற்றிலும் விலங்குகளின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும்.

விலங்குகளின் தடங்கள் சிதறல் அல்லது பறவை தீவனங்கள் போன்ற அறிகுறிகளை கவனிக்க வேண்டும். காடுகள் வயல்வெளிகள் அல்லது ஈர நிலங்கள் போன்ற அறியப்பட்ட விலங்குகளின் வாழ்விடங்களைக் கொண்ட பகுதிகளில் வேகத்தை குறைக்க வேண்டும். இரவு நேரத்தில் விலங்குகள் அதிக சுறுசுறுப்பாக இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த கவனம் தேவை.

இரவில் வாகனங்களின் ஹெட்லைட்டை திறமையாகப் பயன்படுத்த வேண்டும். அதிக அளவு வெளிச்சத்தை உமிழாமல் குறைந்த அளவு வெளிச்சக் கற்றைகள் மட்டுமே விலங்குகளை அடையாளம் காண உதவும்.

இதையும் படியுங்கள்:
நாராயணீயம் காவியம் தோன்றிய வரலாறு தெரியுமா?
National Road Kill day

வனப் பகுதிகளுக்குச் செல்லும்போது விளக்குகளை அணைத்து விட வேண்டும். திடீரென்று பிரேக் போடுவது, அதிக வேகம், திடீர் திருப்பங்கள் போன்ற செயல்கள் விலங்கினங்களை திடுக்கிடச் செய்து சாலையின் குறுக்கே வர வைத்து விடும்.

அப்படியே விலங்குகள் வாகனங்களில் அடிபட நேர்ந்தால், அவற்றை அப்படியே விட்டு விட்டு செல்லாமல் உரிய பாதுகாப்பு வனவிலங்கு அமைப்புகளுக்கு அதைப் பற்றி புகார் சொல்லவும்.

விலங்குகளின் செயல்பாடுகள் அதிகமாக உள்ள பகுதிகளில் வாகனம் ஓட்டாமல் மாற்று வழியைப் பயன்படுத்த வேண்டும்.

வன விலங்குகளையும் பிற விலங்குகளையும் பாதுகாப்பது  நமது கடமை. அஜாக்கிரதையால் அவற்றை கொல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com