

கடல் உலகம் எப்போதுமே பல ஆச்சரியங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு மாபெரும் மர்மதேசம். அதில் வாழும் பிரம்மாண்டமான உயிரினமான திமிங்கலங்கள் பாலூட்டி வகையை சேர்ந்தவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். நிலத்தில் வாழும் விலங்குகள் தங்கள் குட்டிகளுக்கு மிக எளிதாக பால் கொடுத்துவிடும்.
ஆனால் பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடலுக்கு அடியில், தண்ணீர் கொஞ்சம் கூட உள்ளே செல்லாமல் திமிங்கலங்கள் எப்படி மூச்சுத் திணறாமல் பால் கொடுக்கின்றன என்பது பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான அறிவியல் ரகசியம். அந்த பிரம்மாண்டமான தாய்மையின் தனித்துவத்தை பற்றி இப்போது பார்க்கலாம்.
மடி மற்றும் காம்புகளின் அமைப்பு!
சாதாரண பசு மாடுகளுக்கோ அல்லது நாய்களுக்கோ இருப்பதைபோல திமிங்கலங்களுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் மடி அமைப்புகள் கிடையாது. தண்ணீரை கிழித்துக்கொண்டு வேகமாக நீந்துவதற்கு வசதியாக, அவற்றின் பால் காம்புகள் உடலுக்குள்ளேயே இரண்டு சிறிய பிளவுகளில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும். குட்டி திமிங்கலத்திற்கு பசி எடுக்கும்போது, அது தனது தாயின் அடிப்பகுதிக்கு சென்று அந்த பிளவுகளை தனது மூக்கால் லேசாக முட்டி சிக்னல் கொடுக்கும்.
பீய்ச்சி அடிக்கப்படும் தாய்ப்பால்!
சிக்னல் கிடைத்தவுடன் தாயின் உடலுக்குள் மறைந்திருக்கும் அந்த காம்புகள் லேசாக வெளியே வரும். மனிதர்கள், மற்ற விலங்குகளை போல குட்டி திமிங்கலங்களால் வாயை வைத்து பாலை உறிஞ்சி குடிக்க முடியாது. அப்படி உறிஞ்சினால் பாலோடு சேர்ந்து அதிகப்படியான கடல் நீரும் வயிற்றுக்குள் சென்றுவிடும்.
அதனால், குட்டி தனது வாயை காம்பின் அருகில் கொண்டு சென்றவுடன், தாய் திமிங்கலம் தனது பிரத்யேக தசைகளின் மூலம் பாலை ஒரு பம்ப் போல அதிக அழுத்தத்தில் குட்டியின் வாய்க்குள் நேரடியாக பீய்ச்சி அடிக்கும். இது கண் இமைக்கும் நேரத்தில் ரொம்பவும் துல்லியமாக நடந்து முடியும்.
பேஸ்ட்போல இருக்கும் பால்!
இதில் இன்னொரு மிகப்பெரிய ஆச்சரியமும் இருக்கிறது. நாம் குடிக்கும் பசும்பால்போல திமிங்கலத்தின் பால் தண்ணீராக இருக்காது. அது கிட்டத்தட்ட நாம் பல் துலக்க பயன்படுத்தும் டூத்பேஸ்ட் அல்லது வெண்ணெய்போல ரொம்பவே கெட்டியான பதத்தில் இருக்கும்.
இதில் 30-50 சதவீதம் வரை அதீத கொழுப்பு சத்து நிறைந்துள்ளதால், இது கடல் தண்ணீரில் கொஞ்சமும் கரையாமல் அப்படியே முழுமையாக குட்டியின் தொண்டைக்குள் சென்றுவிடும். இந்த அதிகப்படியான கொழுப்புதான், குட்டிகள் அந்த கடும் குளிரை தாங்கும் வகையிலான தடிமனான தோலை மிக விரைவாக வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
தாய்ப்பால் கொடுப்பது, நிலத்தில் வாழும் விலங்குகளுக்கு எவ்வளவு சாதாரணமாக முடிகிறதோ, அதே அளவிலான ஒரு சிறப்பான தொழில்நுட்பத்தை திமிங்கலங்களும் கடலுக்கு அடியில் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் கையாள்கின்றன.