

நாம் வசிக்கும் பூமி 71 சதவிகிதம் நீரால் சூழப்பட்டது. இதில் பெரும்பகுதி நீரை பெருங்கடல்கள் வழங்குகின்றன. அந்த வகையில் உலகின் அதிக உப்புத் தன்மை கொண்டதாகக் கருதப்படும் சவக்கடல் குறித்து இப்பதிவில் காண்போம்.
மேற்கு ஆசியாவின் ஜோர்டான் பிளவு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள, அதிக உப்பு தன்மை கொண்டதாகக் கருதப்படும் சவக்கடல் (Dead Sea) தோராயமாக 34 சதவிகித உப்பு செறிவு அதிகமாக இருப்பதால் இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. சாதாரண கடல் நீரை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு உப்பு சவக்கடலில் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கடலில் வடிகால் இல்லாததால், பாயும் நீர் ஒருபோதும் வெளியேறாமல் இருந்து, ஆயிரக்கணக்கான ஆண்டு கனிம படிவுகளுக்கு வழிவகுக்கிறது.
சவக்கடல் கிழக்கே ஜோர்டானுக்கும், மேற்கே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 430 மீட்டர் கீழே உள்ளது. நீண்ட வரலாற்றைக் கொண்ட சவக்கடல் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் மாற்றங்களால் உருவானது. இக்கடலினுடைய இருப்பிடம், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான புவியியல் அமைப்பு ஆகியவை இயற்கை அதிசயமாக இருப்பதோடு, முக்கிய சுற்றுலா தளமாகவும் இது காட்சி தருகிறது.
அதிக வெப்பநிலை கொண்ட பாலைவனப் பகுதியில் சாக்கடல் அமைந்துள்ளதன் காரணமாக ஆண்டு முழுவதும் தீவிரமாக ஆவியாதல் நிகழ்கிறது. சோடியம் குளோரைடு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நீர் ஆவியாகும்போது தண்ணீரில் இருக்கும்.
ஜோர்டான் நதி ஒரு குறிப்பிட்ட அளவு புதிய நீரை மட்டுமே வழங்குவதால் படிப்படியாக உப்புத்தன்மை அதிகரித்து காலப்போக்கில் அதிகமாக உப்புகள் குவிகின்றன. இத்தகைய கடுமையான சூழ்நிலைகளில் மீன், தாவரங்கள் மற்றும் பாசிகள் உட்பட பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்கள் வாழ முடியாது.
சவக்கடல் உப்புக்கடல், சோதோம் கடல், நாறுகின்ற கடல், பேய்க் கடல் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இக்கடல் நீரின் அடர்த்தியை விட, அதிக அடர்த்தியை கொண்டுள்ளதால் மனிதர்கள் உட்பட யாராக இருந்தாலும் நீரில் மூழ்காமல் மிதக்க முடியும். நாம் வாழும் பூமி பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது என்பதற்கு இந்த சவக்கடலும் ஒரு சான்றாக உள்ளது.