காடுகள் அழிக்கப்படுவதற்கும் கால்பந்து மைதானங்களுக்கும் என்ன சம்பந்தம்?

காடுகள் அழிக்கப்படுவது...
காடுகள் அழிக்கப்படுவது...

காடுகளை மரங்களின் இருப்பிடமாகவும் உயிரினங்களின் வாழ்விடமாகவும் புவியுடைய நுரையீரலாகவும் பார்த்திருக்கிறோம். காடுகளுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் இடையிலான தொடர்பு உங்களுக்குத் தெரியுமா?

காலநிலை ஆராய்ச்சியாளர்கள் காடுகளை ‘Carbon Sink’ என்று புகழ்கிறார்கள். 2001 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில், உலக அளவில் 7.6 பில்லியன் டன் கார்பனை காடுகள் உறிஞ்சியிருக்கின்றன என்று ஒரு கணக்கு சொல்கிறது. காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளில், ‘இயற்கையை அடிப்படையாகக்கொண்ட தீர்வுகள்’ என்ற ஒரு வகைமை உண்டு. அதாவது, இயற்கையாக இருப்பதை மாற்றாமல், அழிக்காமல், அப்படியே வைத்துக்கொண்டு தீர்வுகாணும் முறையை இப்படிச் சொல்கிறார்கள். காடுகளைப் பாதுகாப்பது, காடழிப்பைத் தடுப்பது ஆகியவற்றை முறையாகச் செய்தாலே காலநிலை மாற்றத்தின் பாதிப்பை பெருமளவு குறைக்கலாம் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

காடு அழிப்பு இப்போது கூடவா நடக்கிறது? என்று கேட்கிறீர்களா? சராசரியாக ஒரு ஆண்டுக்கு பத்து மில்லியன் ஹெக்டேர் அளவிலான காடுகள் அழிக்கப்படுகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். சுருக்கமாகச் சொன்னால், ஒரு நிமிடத்துக்கு 27 கால்பந்து மைதானங்களுக்குச் சமமான பரப்பளவில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதை நிச்சயம் தடுக்கவேண்டும்.

காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க அரசுகளும் அதிகாரத்தில் இருப்பவர்களும் பெரிய அளவில் முடிவுகளை எடுக்கவேண்டும். அதுவே முதல் படி, முக்கியமான படி. அதற்காகத் தொடர்ந்து குரல் எழுப்புவோம். இது தவிர, நம்மாலான முயற்சிகளையும் செய்யலாமே. காடழிப்பைத் தடுக்கத் தனிநபர்கள் என்ன செய்யலாம்?

* காகிதங்களின் பயன்பாட்டை முடிந்த அளவுக்குக் குறைக்கலாம். அவ்வாறு செய்யமுடியாவிட்டால் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களைப் பயன்படுத்தலாம்.

காடுகள் அழிக்கப்படுவது...
காடுகள் அழிக்கப்படுவது...

* உங்களது பகுதியில் நன்றாக வளரக்கூடிய மரங்கள் என்ன என்று தேடிப்பார்த்து, அந்த மரத்தின் கன்றுகளை நட்டு வளருங்கள்.

* காடுகளின் அழிப்பிலிருந்து உருவாகும் பொருட்களைக் கூடியவரையில் வாங்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

* கூடியவரையில் மறுசுழற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.

* உங்களது பகுதியில் முந்தைய காலகட்டத்தில் காடுகள் இருந்தனவா என்று கவனித்துப் பாருங்கள். அவை ஏன் அழிந்தன, அவற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்று யோசியுங்கள். அதை நடைமுறைப்படுத்த முயற்சி எடுங்கள்.

* உங்களது பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காடு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்துகொள்ளுங்கள்.

* காடுகளை இழந்தபின்பு அவற்றை மீட்டுருவாக்கம் செய்வதைவிட, காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதுதான் முக்கியமானது. வருமுன் காப்பதே சிறந்தது, இல்லையா?

இதையும் படியுங்கள்:
மற்றவர் பார்வைக்கு வசீகரமாக தெரிய செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
காடுகள் அழிக்கப்படுவது...

* காட்டுப்பகுதிகளுக்கு அருகிலோ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கோ சுற்றுலா செல்லும்போது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். அது பல்லாயிரக் கணக்கான உயிரிகளின் வாழிடம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

* காட்டுத்தீ நிகழ்வுகளை முன்பே தடுப்பது, காட்டுத்தீயை விரைவாக அணைப்பது போன்றவற்றின்மூலம் காடுகளைப் பாதுகாக்கலாம்.

* காடுகளின் முக்கியத்துவம் பற்றி உங்களுடைய குழந்தைகளிடம் பேசுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com