நீங்கள் நன்றாக கவனித்து பார்த்திருந்தால் தெரியும். சில நபர்களை சுற்றி எப்போதுமே கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும். இதற்கான காரணம் என்னவென்று யோசித்ததுண்டா? எப்படி ஒரு சிலர் மட்டும் காந்தம் போல மக்கள் கூட்டத்தை தன் பக்கம் கவர்ந்திழுக்கிறார்கள்? அதன் ரகசியம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1. எப்போதும் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகுவது என்பது மிகவும் அவசியமான குணமாகும். மற்றவர்கள் செய்த நல்ல விஷயங்களை அங்கிகரிப்பதும், அவர்களை பாராட்டுவதும் நல்ல செயலாகும். மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது அதை பொறுமையாக கேட்பது, நாம் மற்றவர்களை அங்கிகரிக்கிறோம், மதிக்கிறோம் என்பதை அவர்கள் உணரும் போது நம்மீதும் அவர்களுக்கு தானாகவே மரியாதை தோன்றும்.
2. புன்னகைக்கு அதிகமான பாசிட்டிவ் எனர்ஜி உள்ளது. யார் என்னவென்று தெரிய தேவையில்லை, ஒருவரை பார்த்து நாம் புன்னகைக்கும் போது அவர்களும் தானாகவே நம்மை பார்த்து புன்னகைப்பார்கள். இது நம்மை சுற்றி ஒரு நல்ல சூழலை உருவாக்கும்.
3. யாரையேனும் முதன் முறையாக பார்க்க செல்லும் போது நன்றாக உடை உடுத்துவது, நட்பாக வரவேற்பது, தைரியமான உரையாடலை தொடங்குவது போன்று ஒருவரிடம் நம்மை பற்றி முதலில் உருவாக்கும் பிம்பம் மிக முக்கியமாகும். ஏனெனில் இரண்டாவது வாய்ப்பு எப்போதும் அமையும் என்று சொல்ல முடியாது. அதனால் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்வது அவசியமாகும்.
4. நம்மை நாம் மதிப்பது, நமக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது போன்று நம்மை நாம் எப்படி நடத்துகிறோமோ அதை பொருத்தே அடுத்தவர்களும் நம்மை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம் மீது நாமே வைக்கும் தன்னம்பிக்கை, நம்மை நாமே அங்கிகரிப்பது என்பது மிக முக்கியமாகும்.
5. மற்றவர்களை மதிக்கும் குணம் கண்டிப்பாக மிக முக்கியமான ஒன்றாகும். எல்லோருக்கும் தன் வாழ்க்கையில் சொல்வதற்கென்று ஒரு கதையுண்டு. அதை கேட்பதும், அடுத்தவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளும் குணம் மற்றவர்களுக்கு நம் மீது மரியாதையை உருவாக்கும்.
6. நம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து நபர்களுமே பல இன்ப, துன்பங்களை கடந்து வந்திருப்பார்கள். அதனால் யாரையும் இவர்கள் இப்படித்தான் என்பது போன்று ஒருவரை பற்றிய முடிவை எடுக்காமல், அவர்களுக்கும் நமக்கும் பொதுவாக என்னன்ன விஷயங்கள் இருக்கிறது போன்றவற்றை கண்டுப்பிடித்து சேர்ந்து முன்னேறுவது நன்மையை தரும்.
7. நாம் பேசும் வார்த்தைகள் எப்போதும் பாசிட்டிவாக இருக்க வேண்டும். அடுத்தவர்களை பாராட்டுவது, நன்றியை தெரிவிப்பது, எந்த ஒரு பிரச்னை வந்தாலும் அதற்கான தீர்வை தேட வேண்டுமே தவிர பிரச்னையை நினைத்து வருத்தப்பட்டு கொண்டேயிருக்க கூடாது. இப்படிபட்ட பாசிட்டிவ் குணங்களை வளர்த்து கொண்டால், மக்கள் கூட்டம் நம்மை சுற்றி எந்நேரமும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.