‘பகல் நேரம் சேமித்தல்’ என்றால் என்ன?

Daylight saving
Daylight saving

பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகளில், வெயில் காலத்திலும், குளிர் காலத்திலும் பகல் நேரத்திற்கு அவ்வளவாக வித்தியாசம் இருக்காது. உதாரணத்திற்கு வெப்ப மண்டல நாடான இந்தியாவில் கடுமையான வெயில் காலத்தில் பகல் நேரம் 12 மணி நேரம் இருக்கும். கடுமையான குளிர் காலத்தில் பகல் நேரம் 10 மணி நேரம்தான் இருக்கும். ஆனால், ஐரோப்பிய நாடுகள், கிரேட் பிரிட்டன், மற்றும் வட அமெரிக்காவில் வெயில் காலத்தில் பகல் நேரம் அதிகமாகவும், குளிர் காலத்தில் பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்.

அமெரிக்காவின் சில பகுதிகளில் வெயில் காலங்களில் காலை 4.30 மணிக்கு உதிக்கும் சூரியன், இரவு 7.30 மணிக்கு மறையும். இவ்வாறு பகல் அதிகமாக இருக்கும் வெயில் காலங்களில், மனிதன் சீக்கிரமே எழுந்து வேலைக்குச் சென்றால், அவன் வெயிலில் தங்கும் நேரம் அதிகரித்து, அதனால் எரிபொருள் செலவு குறையும் என்று நம்பினர். ஆகவே, வெயில் காலங்களில் கடிகாரத்தின் நிலையான நேரத்தை ஒரு மணி நேரம் முன் வைத்து, பகல் வேளையில் ஒரு மணி நேரம் நீட்டிக்கின்றனர். குளிர் காலத்தில் கடிகாரத்தை, ஒரு மணி நேரம் பின் வைத்து, நிலையான நேரத்திற்குத் திரும்புகின்றனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, ’பகல் நேரம் சேமித்தல்’ ஆரம்பிக்கும். அதன்படி 2023ம் வருடம், மார்ச் 12ம் தேதி, அதிகாலை 2 மணிக்கு இந்த வருட ’பகல் நேரம் சேமித்தல்’ ஆரம்பித்தது. அதாவது, கடிகாரம் 01:59:59 வந்தவுடன், அடுத்த நொடிக்கு 02:00:00 என்று செல்லாமல், 03:00:00 மணிக்கு மாறியது. ’பகல் நேரம் சேமித்தல்’ நவம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது. அதாவது, கடிகாரம் 01:59:59 வந்தவுடன், அடுத்த நொடியில் 02:00:00 என்று மாறாமல், 01:00:00 என்று பின்னோக்கிச் செல்லும்.

பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில், ’பகல் நேரம் சேமித்தல்’ மார்ச் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து, அக்டோபர் கடைசி ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. இந்த ’பகல் நேரம் சேமித்தல்’ பற்றி முதலில் பரிந்துரைத்தவர் பெஞ்சமின் ஃப்ராங்க்லின். இவர் 1784ம் வருடம் பாரிஸ் நகரத்தில் அமெரிக்காவின் தூதுவராகப் பணி புரிந்தவர். இவர் தாம் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், ‘பாரிஸ் நகர மக்கள் தங்களுடைய வேலை நேரத்தை, சூரிய உதயத்தை அனுசரித்து மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்ற யோசனையை முன் வைத்தார். அவ்வாறு செய்வதால் மெழுகுவர்த்திக்காகச் செய்யும் செலவு மிச்சப்படுத்தப்படும் என்றார். இதற்காக ஃப்ராங்க்லின் உருவாக்கிய பழமொழி, ‘சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் எழுவது, ஒரு மனிதனை ஆரோக்கியமாகவும், செல்வந்தனாகவும், ஞானமுள்ளவனாகவும் ஆக்குகிறது.’

ஆனால், இதனை முதன் முதலில் செயல்படுத்தியது கனடா. 1908ம் வருடம், ஜூலை மாதம் 1ம் தேதி ஒன்டாரியோவில் செயல்படுத்தினர். 1916ம் வருடம், முதல் உலகப் போரின்போது, ஜெர்மனி தன்னுடைய நட்பு நாடுகளான ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரியுடன் நிலக்கரி பயன்பாட்டை குறைக்க, ’பகல் நேரம் சேமித்தல்’ கொண்டு வந்தனர். அமெரிக்காவிலும் 1918ம் வருடம் ஆரம்பித்து சில காலங்கள் பழக்கத்தில் இருந்தது. மறுபடியும் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்த நடைமுறை வந்தது. தற்சமயம், ’பகல் நேரம் சேமித்தல்’ சுமார் 70 நாடுகளில் பழக்கத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகின் அடுத்த பேரழிவு எப்போது?
Daylight saving

இது தேவை, தேவையில்லை என்ற சர்ச்சைகள் வல்லுநர்களிடையே இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. நிலக்கரி, மெழுகுவர்த்தி தேவையிருந்த காலத்தில், எரிபொருள் சேமிப்பு கணிசமாக இருந்ததாகவும், இந்த மின்சார யுகத்தில், சில மணி நேரங்கள் கடிகாரம் முன்னோக்கிச் செல்வதால், சேமிப்பு குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றும் சொல்கின்றனர். நேரத்தை கூட்டிக் குறைத்துச் செய்வது, மக்கள் உடல் நலத்தை பாதிப்பதாகவும் கருத்து நிலவுகிறது.

நம்முடைய உடலுக்குள் இருக்கும் ‘சர்காடியன் இசைவு’ நம்மை இரவு, பகல் உணரச் செய்கிறது. இதனால்தான் நேரத்திற்குத் தூக்கம், காலையில் விழிப்பு ஏற்படுகிறது. ‘சர்காடியன் இசைவு’ செயல்பாட்டை, செயற்கை முறையில் நேரத்தை கூட்டிக் குறைப்பது தடுக்கிறது என்பது நிபுணர்கள் கருத்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com