
'பாம்பு என்றால் படையும் நடுங்கும்' இது பழமொழி. ஊர்வன இனத்தைச் சேர்ந்த பாம்பு வளைந்து, நெளிந்து செல்வதை பார்த்தாலே பயம் தொற்றிக் கொள்ளும். சில சமயம் நாம் வேலிகளிலோ அல்லது அடர்ந்த புதர்களிலோ பாம்பு சட்டை இருப்பதை பார்த்திருப்போம். அந்த வகையில் பாம்பு சட்டை இருப்பதற்கான காரணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சாலை ஓரங்களின் வேலி ஓரங்களில் சுமார் 6 அடி நீளமான பாம்புச் சட்டைகள் கிடப்பதை நாம் பார்த்திருப்போம். பல நேரங்களில் பாம்புகள் போன்ற ஊர்வனவற்றில் இவ்விதமான சட்டை உரித்தல் என்பது பொதுவான ஒரு நிகழ்வாக இருக்கிறது. பாம்பு சிறியனவாக இருக்கும் போது அடிக்கடியும் பெரியதாக வளர்ந்த நிலையில் மாதம் இரண்டொரு முறையோ இச்செயல் நடைபெறுகிறது.
சட்டை உரித்தல் என்பது அவற்றின் இன சேர்க்கைக்கு முன்னரோ அல்லது குட்டி ஈனுவதற்கு பின்னரோ நடைபெறும் செயலாகும். அத்தகைய நேரங்களில் பெரும்பாலும் இரை எதுவும் எடுப்பதில்லை.
பாம்புகள் வளரும்போது அவற்றில் தோல் விரிவடையும். ஆனாலும் அதற்கேற்ப அதன் மேல்புற தோலின் மெல்லிய படலம் விரிவடைவதில்லை. ஆகையால் தோலுடன் உள்ள பிடிமானத்தை மேல்புற மெல்லிய படலம் இழக்கின்றது. அப்போது பாம்பின் கண்களுக்கு மேல் இருக்கும் இந்த மெல்லிய தோல் படலம் ஒளி கசியும் நிலையை (Translucent) அடைவதால் அந்த சமயத்தில் பாம்பினால் சரிவர பார்க்க முடியாமல் போகிறது.
அப்போது பாம்புகள் தனது தலையை கடினமான மரப்பட்டைஅல்லது கற்கள் மீது உரசி தேய்த்து அந்த மேல்புற படலத்தை நீக்குகின்றன. அதன் பிறகு செடி, கொடிகள் இடையே அங்கும் இங்கும் சுழன்று தன் உடலின் மேல் புறத்தில் உள்ள மெல்லிய படலம் முழுவதும் நீக்குகின்றன. இதுவே பாம்பு சட்டை உரித்தல் (Ecdysis) என்னும் நிகழ்வாகும்.
இவ்வாறு பாம்பு தனது சட்டை உரிப்பதால் பாம்பின் மீதுள்ள ஒட்டுண்ணிகள் நிறைந்த மேற்புற படலம் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டு பாம்பு அதன் இயற்கையான நிறத்தில் பளபளப்பான நிறத்தில் வழுவழுப்பாகவும் காட்சி அளிக்கும்.
உரிக்கப்பட்ட பாம்பு சட்டையில் உள்ள அடையாளங்களை பார்த்து அது எவ்வகையான பாம்பு என்பதே அடையாளம் கண்டு பிடிக்க முடியும் .மேலும் அதற்கு அருகில்தான் அதனுடைய வசிப்பிடம் இருக்கிறது என்பதையும் நிச்சயித்து கொள்ளலாம்.மிக குறைந்த காலத்தில் பாம்பு சட்டை உரித்தால், சீக்கிரம் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதைக் காண முடியும்.
வீட்டைச் சுற்றி பாம்புத்தோல் இருப்பதை கண்டால் பாம்பு நடமாட்டம் இருப்பதை உணர்ந்து ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும். பாம்பை கண்டதும் அடிக்காமல் தீயணைப்புத் துறையினரை அழைத்து பிடிக்க வேண்டும்.