
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பதற்குகேற்ப மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்கு நம் உடலிற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
காலையில் இஞ்சி, கடும் பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் இவற்றை உணவில் சேர்த்து கொண்டு உண்பதால் நோய்கள் நெருங்காது என நம் முன்னோர்கள் அடிக்கடி குறிப்பிடுவது உண்டு. குறிப்பாக, கபத்தை உடலில் இருந்து நீக்க கூடிய தன்மை சுக்கிற்கு அதிகமாக உள்ளது. கபம் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் இது அருமருந்தாக திகழ்கிறது. அதோடு, நுரையீரலில் ஏற்படக்கூடிய எல்லா வகையான தொற்று நோயை சரி செய்வதற்கும் சிறந்தது இதுவே.
மேலும், உடலில் தேவையில்லாத கொழுப்பை முழுமையாக கரைக்க கூடிய சக்தி சுக்கிற்கு மட்டுமே உண்டு. அதுமட்டுமின்றி, ரத்தத்தை சுத்தம் செய்து, வாந்தி, தலைசுற்றல் போன்றவற்றை நீக்கி இதயத்தை பலப்படுத்துகிறது. சுக்கை உணவில் பயன்படுத்தும் போது, இஞ்சியைப் போலவே அதன் தோலை உரித்து பயன்படுத்த வேண்டும்.
சுக்கு வைத்து என்ன செய்யலாம்?
காய்ச்சல், சளி, தலைவலி, கோவம் வரும் சமயங்களில் சுக்கு காபி அருந்துவதால் நிச்சயம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சுக்கு காபி தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
சுக்கு – 1 மேசைக் கரண்டி
மல்லி (தனியா) – 1 மேசைக் கரண்டி
மிளகு – ½ மேசைக் கரண்டி
தண்ணீர் – 2 கப்
தேன் அல்லது நாட்டு சக்கரை – தேவையான அளவு
தயாரிக்கும் முறை:
முதலில் சுக்கு, மல்லி, மிளகு ஆகிய மூன்றையும் சற்று வறுக்கவும். (மிதமான சூட்டில் வறுக்க வேண்டும், வாசனை வரும் வரை)
வறுத்த பிறகு, அவற்றை நன்றாக பொடியாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் இந்த பொடியை சேர்த்து நன்றாக 5–10 நிமிடம் கொதிக்க விடவும்.
வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றவும்.
தேவைப்பட்டால் நாட்டு சக்கரை அல்லது தேனை சேர்த்து கலந்து பருகலாம்.
இயற்கை பாரம்பரிய மருத்துவத்தில் சுக்கு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கபம், சளி, தொற்று நோய், செரிமான கோளாறு என பலவிதமான உடல் பிரச்னைகளுக்கு சுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதிலும் சுக்கைக் கொண்டு தயாரிக்கப்படும் சுக்கு காபி உடலை புத்துணர்வுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
இன்றைய வேகமான வாழ்க்கைமுறை, நம் உடல்நலனுக்கு தேவையான கவனத்தை குறைக்கிறது. மருந்துகள் இல்லாத இயற்கை வாழ்க்கையே சிறந்தது என்பதை நினைவில் வைத்து வாழ்வோம்.