
உலகில் அதிக எண்ணிக்கையில் ஆறுகள் உள்ள நாடாக ரஷ்யா உள்ளது. இயற்கையாகவே உலகின் மிகப்பெரிய ஆறு வலையமைப்பை இந்த நாடு பெற்றுள்ளது, இந்த நாட்டில் 1,00,000 க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்ந்து வளம் செழிக்க வைக்கிறது. கனடா, சீனா போன்ற நாடுகளிலும் பெரிய ஆறுகள் உள்ள போதிலும், மொத்த எண்ணிக்கையில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது.
ரஷ்யாவின் முக்கிய ஆறுகள்
1. வோல்கா நதி (Volga): ஐரோப்பாவில் நீளமான மிகப் பெரிய நதியாக வோல்கா நதி உள்ளது. ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது மத்திய ரஷ்யாவின் வழியாக ஓடி விவசாயம், தொழில்கள் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கு உதவுகிறது. வோல்கோகிராட், கசான், நிஸ்னி நோவ்கோரோட் போன்ற நகரங்கள் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளதால் செழிப்புடன் இருக்கின்றன. இந்த நதியில் பல நீர் மின்சார நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. லேனா நதி (Lena): சைபீரியா முழுவதும் பாய்ந்து ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கிறது. உலகின் மிக நீளமான ஆறுகளில் லேனாவும் ஒன்றாக உள்ளது. இந்த நதியின் பெரிய படுகை சைபீரிய பிராந்தியத்தில் ஒரு முக்கியமான இயற்கை பாதையாகச் செயல்படுவதோடு, காடுகள் வளர்ச்சிக்கும் மீன்வளம் பெருகுவதற்கும் காரணமாக உள்ளது.
3. ஓப் நதி (Ob): ஓப் நதி மற்றும் அதன் துணை நதி இர்டீஷ் சேர்ந்து, ரஷ்யாவின் மிகப்பெரிய இயற்கை ஆற்றல் அமைப்புகளை உருவாக்குகின்றன. இந்த நதிகள் நீர் மின்சாரம் உற்பத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழி போக்குவரத்து தேவைகளுக்கு உதவுகின்றன. தொலைதூர சைபீரியப் பகுதியை பெரிய வர்த்தக வலையமைப்புகளுடன் இணைப்பதில் ஒப் நதி முக்கிய பங்காற்றுகிறது.
4. யெனீசி ஆறு (Yenisei): பூமியின் மிகவும் சக்திவாய்ந்த நதி அமைப்புகளில் ஒன்றான யெனீசி, மங்கோலியாவிலில் தோன்றி சைபீரிய பகுதிகளில் பாய்ந்து அவற்றை செழிப்பாக்கி விட்டு காரா கடலில் சங்கமம் ஆகிறது. சைபீரிய காடுககளின் வளர்ச்சிக்கு தேவையான நீரை வழங்குகிறது. இந்த நதிப்படுகை தனித்துவமான வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களுக்கு தாயகமாக உள்ளது. பல நீர்மின் நிலையங்கள் உற்பத்திக்கும் ஆதரவாக உள்ளது.
5. அமுர் நதி (Amur): அமுர் நதி ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பாய்ந்து ஒரு இயற்கை எல்லையை உருவாக்கியுள்ளது. இது கப்பல் போக்குவரத்துக்கு, பல்லுயிர் பெருக்கம், மீன் வளம் ஆகியவற்றிற்கு முக்கியமானதாக உள்ளது. இதன் வளம் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளின் உணவு தேவைக்கு ஆதாரமாக இருக்கிறது. இது இந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது.
ரஷ்யாவில் மட்டும் இத்தனை ஆறுகள் பாய்வது ஏன்?
ரஷ்யாவின் தனித்துவமான புவியியல் அமைப்பு தான், உலகிலேயே மிகப்பெரிய ஏராளமான ஆறுகளை பாய அனுமதிக்கிறது. அதன் மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், உருகும் பனி மற்றும் பனிப்பாறைகள் ஆகியவை இணைந்து ஆறுகள் உருவாவதற்கு ஏற்ற சூழல்களை உருவாக்குகின்றன. பனிப்பாறைகள் உருகி, இயற்கை நீருற்றுக்களுடன் இணைந்து பெருகி ஆறுகள் உருவாக காரணமாக உள்ளது. இந்த ஆறுகள் ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாய்ந்து அந்த நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
ஆறுகள் நீர்வழிப் போக்குவரத்து, நீர் மின்சார நிலையங்கள், பாசனம் ஆகியவற்றிற்கு உதவுகின்றன. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. தண்ணீரில் கிடைக்கும் மீன்கள், நண்டு, நத்தை போன்ற உயிர்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாகின்றன. நதி சுற்றுச்சுழல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல் ரஷ்யாவின் கலாச்சார அடையாளமாகவும் பாரம்பரிய இயற்கை சின்னமாகவும் இருக்கிறது. நாட்டின் நகரங்களை நதிகள் இணைக்கின்றன. தொழில்களை ஆதரித்து பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகின்றன.