
இந்தியாவின் பால் பொருட்களுக்காக மாடு வளர்ப்பது பாரம்பரிய தொழிலாக பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பல்வேறு காலகட்டத்திலும் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகளவு பால் உற்பத்தி செய்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் தற்போதைய பால் உற்பத்தி 239 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில் பால் உற்பத்தியை 300 MMT ஆக அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிப்பது, பாலின் தரத்தினை உயர்த்துவது, பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்வது, சர்வதேச நாடுகளில் இந்தியாவின் பால் சார்ந்த உணவுப் பொருட்களுக்கு சந்தைகளை உருவாக்குவது போன்ற படிநிலைகளை செயல்படுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பால்வளத்துறை பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ராஷ்டிரிய கோகுல் மிஷன் நோக்கத்தின் படி
இந்தியாவின் பூர்வீக கால்நடை இனங்களான கிர், சாஹிவால், சிவப்பு சிந்தி மற்றும் ரதி போன்ற பசு வகைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்,
கால்நடை இனங்களின் தரத்தை மேம்படுத்த உயர் மரபணு கொண்ட காளைகளைப் கருவுறுதலுக்கு பயன்படுத்துதல்,
இனப்பெருக்கத்திற்காக செயற்கை கருவூட்டல் முறையை பயன்படுத்துதல்,
இது சார்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,
நவீன பால் பதப்படுத்தும் தொழில் நுட்பங்களை பரிந்துரைத்தல்,
குளிர்பதன சேமிப்பு வசதிகளை ஊக்குவித்தல்,
அரசாங்க ஆதரவின் மூலம் பால் பண்ணையை அதிக லாபகரமான தொழிலாக மாற்றுதல்...
ஆகிய செயல்பாடுகளை கொண்டுள்ளது.
ஆயினும் இந்திய பால் உற்பத்தி துறையில் பல சவால்களும் உள்ளன.
இந்தியாவின் சராசரி பசுவின் பால் கறவை திறன் சர்வதேசத் தரத்துடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு.
நாட்டு மாடுகளின் பாலின் சத்துக்கள் அதிகம் என்றாலும் கிடைக்கும் அளவு குறைவு, கலப்பின மாடுகள் கறவை திறன் அதிகம் என்றாலும் சத்துக்கள் குறைவு.
கால்நடை களை பராமரிக்க மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இல்லை. இதனால், நோய்வாய் படும் மாடுகளை காப்பாற்றுவது கடினமாக உள்ளது.
போதுமான அளவில் பால் சேமிப்பு , பதப்படுத்தும் உபகரணங்கள் இல்லாமை.
2030 ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் மெட்ரிக் டன் என்ற இலக்கை அடைய இந்த சவால்களை சரி செய்ய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் பால் உற்பத்தியில் இந்தியா 63.5% வளர்ச்சியை பெற்றுள்ளது. 2012 இல் 132.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி தற்போது 239 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது .அது போல அப்போது இந்தியர்களின் தினசரி பால் உட்கொள்ளும் சராசரியும் 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. தெருவிற்கு தெரு தேநீர் கடைகள் அதிகரித்ததன் காரணமாக கூட இது நிகழ்ந்து இருக்கலாம் அல்லது பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கூட அதிகரித்து இருக்கலாம்.
இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாறியுள்ளது. உலகின் பால் உற்பத்தியில் இந்தியா 24% க்கும் அதிகமாக பங்களிக்கிறது. இந்தியாவில் தனிநபர் பால் நுகர்வு ஒரு நாளைக்கு 471 கிராம் ஆகும். இது உலக சராசரியை விட அதிகம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாலின் பங்கு 4.5% ஆக உள்ளது. இது பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்கை வழங்கிக் கொண்டிருக்கிறது. பால் உற்பத்தி மூலம் நாட்டில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் 75% பெண்கள் பயனடைகின்றனர்.