தக்காளியுடன் எந்தப் பயிரை ஊடுபயிராக விளைவிப்பது நல்லது!

Intercrops
Intercrops

விவசாயிகள் பலரும் அத்தியாவசிய காய்கறியான தக்காளியை அதிகமாகப் பயிரிடுகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக தக்காளியில் ஊடுபயிராக எந்தெந்தப் பயிர்களை விளைவிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

விவசாயத்தில் வருமானத்தைப் பெருக்க தற்போது பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. அதில் மதிப்புக் கூட்டுதல் முதன்மையானதாக கருதப்பட்டாலும், அனைத்து விவசாயிகளும் இதனைச் செய்வதற்கு முன்வருவதில்லை. ஏனெனில் பலருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. இருப்பினும் இதற்கு மாற்றாக ஊடுபயிர் யுக்தியைப் பயன்படுத்தினால், நிச்சயமாக விவசாயிகளால் வருமானத்தைப் பெருக்க முடியும்.

ஊடுபயிர்:

ஒரு பயிரை விளைவிக்கும் போது அதற்கு நடுவில் அல்லது இடையில் மற்றொரு பயிரை விளைவிப்பது தான் ஊடுபயிர். ஊடுபயிருக்காக நாம் தனியாக தண்ணீர்ப் பாய்ச்சவோ, உரம் தெளிக்கவோ தேவையில்லை. முன்னணிப் பயிருக்கு நாம் செய்யும் வேலைகள் தானாகவே ஊடுபயிருக்கும் சென்று விடும். இரண்டு அல்லது மூன்று பயிர்களை ஒரு நேரத்தில், ஒரே இடத்தில் விளைவிப்பதன் மூலம், ஒரு பயிரின் விலை குறைந்தாலும் மற்றொரு பயிரின் விலை நமக்கு நட்டத்தை ஏற்படுத்தாமல் தடுத்து விடும். தக்காளி விளைவிக்கும் போது அதற்கேற்ற ஊடுபயிர்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோமா!

முள்ளங்கி:

முள்ளங்கியின் வேர்கள் சிறியதாக இருக்கும் என்பதால், தக்காளியை இவை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. தக்காளி செடியின் அடிப்பகுதியில் முள்ளங்கியை விதைப்பது நன்று.

சூரியகாந்தி:

பறவைகள் மற்றும் தேனீக்களை தன்வசம் ஈர்க்கும் சூரியகாந்தி மிகச்சிறந்த ஊடுபயிராகும். சூரியகாந்தியைத் தேடி வரும் தேனீக்களும் பறவைகளும், தக்காளியைப் பாதிக்கும் பூச்சிகளை உண்ணுவது மட்டுமின்றி, தக்காளிப் பூக்களில் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவுகிறது.

பீர்க்கங்காய்:

தக்காளியுடன் சேர்த்து ஊடுபயிராக பீர்க்கங்காயை விதைப்பது, தமிழகத்தில் வழக்கமான ஒன்று. குறுகிய காலப் பயிரான பீர்க்கங்காய் 45 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும் என்பதால், இதனைப் பராமரிப்பதும் எளிதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டத்தின் சிறப்பம்சங்கள்!
Intercrops

துளசி:

நறுமணம் கொண்ட மூலிகையான துளசியை தக்காளியில் ஊடுபயிராகப் பயன்படுத்துவதன் மூலம், ஈ, பூச்சி, மற்றும் கொம்பு புழுக்களை விரட்டலாம். தக்காளியின் சுவையையும் இது மேம்படுத்துகிறது. இருப்பினும் துளசி புதராகவும், பெரியதாகவும் வளரும் என்பதால் அது தக்காளியின் காற்றோட்டத்தை பாதிக்கும். ஆகவே, அவ்வப்போது துளசியை கவாத்து செய்வது நல்லது.

பூண்டு, வெங்காயம்:

பூண்டு மற்றும் வெங்காயத்தின் வாசனையானது தக்காளியை விடவும் அதிகமாக இருப்பதால், பூச்சித் தாக்குதலில் இருந்து தக்காளியைப் பாதுகாக்க முடியும். இதனால் தக்காளியில் அதிக மகசூல் கிடைக்கும். அதோடு, பூண்டு மற்றும் வெங்காய அறுவடையிலும் வருமானம் பெறலாம்.

ஊடுபயிரின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று பயிர்களை விளைவிப்பதன் மூலம், விவசாயிகள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். தக்காளி விலை வீழ்ச்சியை சந்திக்கும் நேரங்களில், சாலைகளில் தக்காளியைக் கொட்டி விவசாயிகள் வேதனை அடைவதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். இம்மாதிரியான சூழலில் ஊடுபயரில் கிடைக்கும் குறிப்பிட்ட வருமானம் நட்டத்தை ஈடு செய்ய உதவி புரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com