Paddy_Pulses
Paddy_Pulses

நெற்பயிர் வரப்புகளில் எந்தப் பயறு வகைகளை விதைத்தால் லாபம் கிடைக்கும்?

Published on

நெல் பயிரிடும் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற வரப்போரங்களில் பயறு வகைகளை விதைக்க முயற்சிக்கலாம். இதற்காக நீங்கள் தனியே நேரத்தை செலவிட வேண்டியதில்லை. அவ்வகையில் எந்தப் பயறு வகைகள் இதற்கு சரியாக இருக்கும் மற்றும் இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

விவசாயிகள் எப்போதும் ஒரே பயிரை மட்டும் நம்பியிருப்பதால்தான், பலருக்கும் இலாபம் என்பதே இல்லாமல் போகின்றது. ஒரே சமயத்தில் பல பயிர்களை விதைப்பதன் மூலம், ஒரு பயிரின் விலை குறைந்தால் கூட மற்றொரு பயிரின் விலை நமக்கு நட்டத்தை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். ஆகையால் ஒருங்கிணைந்த பண்ணைய நடைமுறையைக் கையாள்வது மிகச் சிறப்பாக இருக்கும். இருப்பினும் சிலர் குறைந்த அளவு நிலம் வைத்திருப்பதால், அனைத்து விவசாயிகளுக்கும் இது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே வரப்போரங்களில் சில பயிர்களை வளர்க்க முயற்சிக்கலாம்.

பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிரையே முதன்மைப் பயிராக விளைவித்து வருகின்றனர். நெற்பயிரின் வரப்போரங்களிலும் நாம் சில பயறு வகைகளை குறைந்த அளவில் விதைக்கும் போது, அது பல நன்மைகளை அளிக்கிறது. இதன்படி, விவசாயிகள் தட்டைப் பயறு மற்றும் உளுந்து ஆகியவற்றை பயிரிட்டு வரலாம். இது, நமக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகுப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கிறது. மேலும், இயற்கை இரை விழுங்கிகளான பெருமாள் பூச்சி, ஊசிதட்டான் மற்றும் சிலந்திகளின் எண்ணிக்கையும் அதிகளவில் பெருகும்.

வரப்போரங்களில் விளையும் பயிர்களின் மூலம் நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரிப்பதால், நெற்பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைவது மட்டுமின்றி, மண் வளமும் சீராக மேம்படும். பயறு வகைகளின் வேர்மூடிச்சுகள் காற்றில் இருக்கும் தழைச்சத்துகளை கிரகித்து, நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர உதவி புரிகின்றன. மேலும், இப்பயிர்கள் வரப்புகளில் உள்ள ஈரத்தைத் தக்க வைத்துக் கொள்வதால் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். வரப்போரப் பயிர்களின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பது உறுதி. மேலும், இதன்மூலம் களைகள் வளர்வதும் தடுக்கப்பட்டு, மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கமும் அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆடிப் பட்டத்திற்கு ஏற்ற 4 நெல் ரகங்கள் எவை தெரியுமா?
Paddy_Pulses

பயறு விதைப்பு:

ஒரு ஏக்கர் நிலத்தில் பயறு வகைகளை விதைக்க விதை நேர்த்தி செய்யப்பட்ட தரமான விதைகள் 1 முதல் 2 கிலோ வரை போதுமானது. வரப்பில் 1 அடி இடைவேளி விட்டு 1 அடி ஆழத்தில் விதைகளை விதைத்துக் கொண்டே செல்லலாம்.

பயறு வகைகளில் இருக்கும் அசுவினி பூச்சிகளை சாப்பிட அதிகளவில் பொறி வண்டுகள் வயலுக்குப் படையெடுக்கும். இந்த வண்டுகள் நெற்பயிரில் தண்டு துளைப்பான் மற்றும் இலைச்சுருட்டுப் புழு ஆகியவற்றின் முட்டைகளை உண்டு, நெற்பயிரில் ஏற்படும் சேதாரத்தைக் குறைக்கின்றன. இதனால், வழக்கத்தை விடவும் மகசூல் அதிகமாக கிடைக்கும். மேலும், பயறு வகைகளின் இலை தழைகளை கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.

ஒரே நேரத்தில் இரண்டு வருமானம் வருவதுடன், செலவையும் குறைத்து, மண் வளத்தையும் பாதுகாக்கும் வரப்போரப் பயறு வகைகளை விதைக்க விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com