நம் பூமியின் பல பகுதிகளிலும் பாம்புகள் வசித்து வருகின்றன. ஊர்வன இனத்தைச் சேர்ந்தவை இவை. பல வகையான பாம்புகள் மனிதர்களை பயமுறுத்தவும், திகிலடையவும் செய்கின்றன. பாம்பிடமுள்ள இரண்டு வித புதிரான குணங்கள் அனைவரையும் அச்சம் கொள்ள வைக்கின்றன.
பாம்பு தன்னிடம் சிக்கும் தவளை, எலி, கோழிக் குஞ்சு போன்றவைகளைத் தன் உணவாக எடுத்துக் கொள்ளும். அவற்றை முழுசாக அப்படியே விழுங்குவதும், குறிப்பிட்ட இடைவெளிகளில் தன் தோலை முழுவதுமாக உரித்து விட்டு புத்தம் புதுத் தோலை உருவாக்கிக் கொள்வதும் நம்ப முடியாத உண்மைகள்.
ஊர்வன இனத்தில் உள்ள, பல்லி, ஆமை மற்றும் மரப்பல்லி போன்ற பிராணிகளும் தோலை உரிக்கக் கூடியவைதான். ஆனால் அவை சிறு துண்டுகளாகவோ, செதில்களாகவோ உதிரச் செய்கின்றன. பாம்பு மட்டுமே முழுத் தோலையும் மொத்தமாக உரித்தெறிகிறது.
எக்டைஸிஸ் (Ecdysis) எனப்படும் ஒரு வழி முறையில் பாம்பு தன் தோலை உரிக்கிறது. இம்முறை பாம்பின் வயது மற்றும் அதன் வகைக்கேற்ப வேறுபடும். இந்நிகழ்வு மாதம் ஒருமுறை நிகழலாம். இளம் பாம்பு, வளர்ந்த பாம்பை விட அதிக முறை தோலை உரிக்கிறது.
மனிதர்களின் தோல் தொடர்ந்து வளரவும் புதுப்பித்துக் கொள்ளவும் செய்யும். ஆனால் பாம்பு வளரும்போது அதன் தோல் விரிவடைவதில்லை. அதன் காரணமாக பழைய தோலுக்கு அடியில் புதிதாய் ஒரு தோல் வளர ஆரம்பிக்கிறது. சரியான நேரத்தில், பழைய தோலை உரித்து நீக்கிவிட்டு புதுத்தோலுடன் பாம்பு காட்சி தர ஆரம்பிக்கிறது.
தோலுரிப்பதற்கான முக்கிய காரணம் அதன் வளர்ச்சிதான் என்றாலும் வேறொரு காரணமும் கூறப்படுகிறது. பழைய தோலின் மீது பாக்டீரியாக்களும் ஒட்டுண்ணிகளும் (parasites) வசித்து வரவும், சிறு காயங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இவற்றிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமும் பளபளப்பும் பெற்று உருமாறி வருவதும் மற்றொரு காரணம் எனலாம்.
பாம்பின் கண்களின் நிறம் ஊதாவாக மாறுவது, அதன் தினசரி செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுவது போன்றவை அது தன் தோலை உரிப்பதற்கான நேரம் வந்துவிட்டதைக் காட்டும் அறிகுறிகளாகும். அதன் பின் பாறாங்கல், மரம் அல்லது அது போன்ற கடினமான சுற்றுப்புற இடங்கள் மீது பாம்பு அழுத்தமாகத் தன் மூஞ்சியை உரசிக் கொள்ளும். இச்செயல் மூலம் அப்பகுதியின் சருமம் உடலை விட்டுப் பிரிய ஆரம்பிக்கும். அதற்குப் பின் பாம்பு பழைய தோலிலிருந்து முழுவதுமாக விடுபட்டு பளபளப்பும் புத்துருவமும் கொண்டு வெளிவந்துவிடும்.