
இன்றைய நவீன உலகில் பல வீடுகளின் சமையலறைகளில் முக்கிய இடம் பிடித்துவிட்டது ஏர் ஃப்ரையர். எண்ணெய் இல்லாமல் பொரித்த உணவுகளை சமைக்கக்கூடிய இதன் தன்மை, மக்கள் மத்தியில் இதற்கான வரவேற்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆனால், ஏர் ஃப்ரையரில் சமைக்கும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதா? என்பதே முக்கியமான கேள்வி. அதனை பற்றி இங்கே தெரிந்துக் கொள்வோம்.
பொரித்த உணவுகள் மிகவும் ருசியாக இருப்பதன் காரணம் என்ன?
பொரித்த உணவுகள் பெரும்பாலும் மிகவும் ருசியாக இருக்கும். இதற்கு காரணம் ‘மெயிலார்ட் ரியாக்ஷன் ’ எனப்படும் வேதியியல் மாற்றம் ஆகும். மாவுச் சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் அதிக சூட்டில் சமைக்கப்படும் போது, உணவின் வெளிப்பகுதியில் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் தான் பொரித்த உணவுகளில் அற்புதமான வாசனை, நிறம் மற்றும் சுவை உருவாகிறது.
ஆனால், இதே வேதியியல் மாற்றங்கள் நீண்ட காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கும், உடலுக்கு தேவையற்ற கொழுப்புகள் சேர்வதற்கும் வழிவகுக்கும். மேலும், பொரித்த உணவுகளில் கலோரி அளவு மிகவும் அதிகமாக இருக்கும். இதை அடிக்கடி சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஏர் ஃப்ரையர் எப்படி வேறுபடுகிறது?
இந்த சிக்கல்களுக்கு மாற்றாக, எண்ணெய் இல்லாமல் சமைக்கும் வசதியை தரும் கருவியாக ஏர் ஃப்ரையர் உருவாக்கப்பட்டது. இது வெப்பமான காற்றை வெளிப்படுத்தி உணவை தயாரிக்கிறது.
ஆனால், இதுவும் முழுமையான தீர்வல்ல. எண்ணெயில் பொரித்ததும், ஏர் ஃப்ரையரில் சமைத்ததும் இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. இரண்டிலும் 'மெயிலார்டு ரியாக்சன்' மற்றும் 'அக்ரிலாமைடு' போன்ற எதிர்மறை வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன.
ஏர் ஃப்ரையர் உணவின் நன்மைகளும் குறைகளும்
ஏர் ஃப்ரையரில் சமைக்கும் போது, எண்ணெயில் பொரித்ததைவிட 30% முதல் 50% வரை கலோரிகள் குறைகின்றன. எனவே, உடல் எடை குறைக்க விரும்பும் சிலருக்கு இது உதவியாக இருக்கலாம்.
அதே சமயத்தில், எண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் உணவுகள் வயிறு நிறைவுக்கு விரைவில் போதுமான உணர்வை தரும். ஆனால், ஏர் ஃப்ரையரில் சமைக்கும் உணவில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால், பசிக்குத் தேவையான நிறைவு கிடைக்காமல் போகும். இதனால், நம்மால் அதிகமான உணவை சாப்பிடக்கூடிய நிலையும் ஏற்படும். அப்போது, கலோரி அளவு மீண்டும் அதிகரிக்கும் அபாயமும் உண்டு.
எதைத் தேர்வு செய்ய வேண்டும்?
ஏர் ஃப்ரையர் என்பது ஒரு ஆரோக்கியமான மாற்று தீர்வாக இருப்பினும், அதை அடிக்கடி பயன்படுத்துவது சிறந்தது அல்ல. குறிப்பாக, குழந்தைகளுக்கு அதில் சமைத்த உணவுகளை அடிக்கடி தருவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் இல்லாத உணவுகள் ஒரு அளவிற்கு நன்மை தரலாம். ஆனால், உணவுக்கான அளவையும், பசிக்கான உணர்வையும் கவனித்துக்கொண்டு, சமநிலையுடன் உண்பது முக்கியம்.
அதனால், ஏர் ஃப்ரையரை முற்றிலும் நம்பி உணவுகளை சமைப்பதைவிட, உணவுப் பழக்கவழக்கங்களை உருவாக்குவதே உடல் நலத்திற்கும் மன நிம்மதிக்கும் சிறந்தது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.