குயில்கள் ஏன் கூடு கட்டுவதில்லை?

Cuckoos
Cuckoos
Published on

ஒருவர் பாடும் போது அவரின் குரல் வளம் சிறப்பாக இருந்தால், 'குயில் போல பாடுகிறார்!' என்று கூறுவது உண்டு.  உண்மையிலேயே குயிலின் ஓசை மிகவும் இனிமையான ஒன்றுதான். ஆனால் இத்தகைய இனிமையான ஓசையை கொண்டிருக்கும் பறவைகளால் தங்களுடைய அடிப்படை தேவைகளில் ஒன்றான கூடுகளை கட்டிக் கொள்ள முடிவதில்லை. அதற்கு என்ன காரணம் என்பதைப்  பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குயில் மிகவும் இனிமையான ஓசையை எழுப்பும் ஒரு பறவை இனமாகும். ஆனால் இந்த இனிமையான ஓசையை எழுப்புவது நாம் நினைப்பது போன்று பெண் குயில்கள் அல்ல. உண்மையிலேயே பெண் குயிலை விட ஆண் குயில்களே மிகவும் இனிமையாக கூவும் இயல்புடையவை.

ஆண் குயில்கள் கிட்டத்தட்ட 15 விதமாக ஒலி எழுப்பும் தன்மை உடையவை. ஆண் குயில்கள் பெண் குயில்களை ஈர்ப்பதற்காகவே இத்தகைய ஒலியை எழுப்புகின்றன. அதிலும் குறிப்பாக ஆண் குயில்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரம் வரை தொடர்ச்சியாக ஒலி எழுப்பும் தன்மை உடையவை ஆகும்.

ஆண் குயில் எழுப்பும்  இசையால் கவரப்படும் பெண் குயில்கள் ஆண் பறவையோடு இணை சேர்கின்றன. அதன்பிறகு பெண் குயில்கள் முட்டையிடத் தொடங்கும். முட்டையிடத் தொடங்கும் காலமானது மற்ற பறவைகளைப் போல் அல்லாமல் கிட்டத்தட்ட 4  மாத காலங்கள் நீடிக்கிறது. பெண் குயிலானது ஒரு முட்டையை இடுவதற்கும் மற்றொரு முட்டையை இடுவதற்குமான கால இடைவெளி மிகவும் அதிகம். 

இதையும் படியுங்கள்:
இரவில் அதிகமாக போன் பயன்படுத்தறீங்களா? அச்சச்சோ போச்சு!
Cuckoos

அதனால் பெண் குயிலுக்கு முட்டையிட்டு அடைகாப்பது என்பது  இயலாத காரியம். அதைத் தாண்டி அதன் உடல் அமைப்பிலேயே குயில்களுக்கு கூடு கட்டும் தன்மை இல்லை என்றும் சொல்லலாம். எனவே முட்டையிட்டு அதனை அடைகாப்பதற்கான சூழல் இல்லாததால், தான் இடும் முட்டைகளை ஏதேனும் ஒரு காகத்தின் கூட்டில் குயில்கள் இடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் குயில்களின் முட்டையும் காகத்தின் முட்டையும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருக்கும்.

குயில்களின் இனப்பெருக்க காலமும் காகங்களின் இனப்பெருக்க காலமும் கிட்டத்தட்ட சமமான காலத்திலேயே நிகழும். எனவே குயில்கள் முட்டையிடும் பருவம் தொடங்கியதும் ஆண் குயில்கள் காக்கையின் கூடுகளைத் தேடி அலையும். அவ்வாறு காக்கையின் கூடுகளைத் தேடி கண்டுபிடித்த பின்பு அடைகாத்துக் கொண்டிருக்கும் காகத்தை ஆண் குயிலானது சீண்டி கூட்டில் இருந்து வெளியேற்றும். கோபம் கொண்ட பெண் காகம் ஆண் குயிலை துரத்தும் போது  பெண் குயிலானது காக்கையின் கூட்டில் சென்று முட்டைகளை இட்டுவிட்டு வந்துவிடும். இதேபோன்று ஒரே காகத்தின் கூட்டில் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு குயில்கள் கூட தங்களது முட்டைகளை இட்டு விடும்.

குயில்களின் முட்டையானது கிட்டத்தட்ட 27 நாட்களில் பொரிக்கத் தொடங்கி முட்டை உடைந்து குஞ்சுகள் வெளியேறத் தொடங்கும். அப்பொழுது வெளிவரும் குஞ்சுகளை காகம் இரையூட்டி பாதுகாத்து வரும். மெதுவாக இறக்கைகள் முளைக்கும் போது குஞ்சுகளில் வேறுபாடு தெரிய ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக ஆண் குயில்கள் கிட்டத்தட்ட கருப்பு நிறத்தில் காக்கைகளைப் போன்றே இருக்கும். ஆனால் பெண் குயிலின் வண்ணமோ பழுப்பு நிறத்தில் புள்ளி புள்ளியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கேரள மாநிலம் கண்கவர் கண்ணூரில் பார்த்து ரசிக்க வேண்டிய 6 இடங்கள்!
Cuckoos

எனவே அது தனது குஞ்சு இல்லை என்பதை காகம் எளிதில் அடையாளம் கண்டு அதனை தனது கூட்டில் இருந்து கீழே தள்ளிவிடும். கீழே விழும் பெண்குஞ்சு குயில்  தட்டுத்தடுமாறி உயிர் போராட்டத்தில் சிக்கி தன்னை தற்காத்துக் கொள்வதே அதற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். காக்கையின் கூட்டில் உள்ள ஆண்குஞ்சு குயிலானது கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை காக்கைகளைப் போன்றே குரல் எழுப்பும். அது வளர்ந்து கூட்டை விட்டு பறந்து வெளியே செல்லும்போதுதான் மீண்டும் குயில்களைப் போல கூவத்தொடங்கும்.

காடுகளில் மரங்களின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதில் குயில்களுக்கு மிகுந்த பங்கு உண்டு. பொதுவாக பறவைகள் சாப்பிடும் போது விதைகளை சாப்பிடுவதில்லை. பெரும்பாலான பறவைகள் விதைளை துப்பிவிட்டு  பழங்களை மட்டுமே சாப்பிடுகின்றன. ஆனால் குயில்கள் மட்டுமே விதைகளை விழுங்கி  அதனை தன்னுடைய எச்சத்தில்  வெளியேற்றுகிறது. இதன் மூலமாக குயில்கள் வெளியேற்றும் எச்சத்தில் இருக்கும் விதைகள் மண்ணில் விழுந்து சரியான சூழலை பெறும்போது அவை முளைத்து மரமாக வளரத் தொடங்குகிறது.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டங்களில் குயில்கள் கூவும் சத்தத்தை  அதிகமாக கேட்க முடியும். குயில்கள் அத்தி, ஆல் போன்ற பழங்களை சாப்பிடுவதோடு சிறு சிறு பூச்சிகளையும் புழுக்களையும் கூட உணவாக  உட்கொள்கின்றன. பெரும்பாலும் நாம் பார்ப்பது எல்லாம் கருமை நிறத்தில் இருக்கும் ஆண்குயில்களே. பல்வேறு விதமாக ஓசை எழுப்பும் இத்தகைய இசை அரசர்களின் குரலை இனிமேல் கேட்கும் போது அதை நன்கு கவனித்து அதன் இசையின் வேறுபாட்டையும் கவனித்து மகிழுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com