மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?

Jungle Jalebi
Jungle Jalebi
Published on

மீபத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கொடுக்காபுளி பாக்கெட் விற்பதைக் கண்டதும் அதிர்ச்சி பிளஸ் ஆச்சரியம் உண்டானது. ஒரு பாக்கெட் 40 ரூபாய் என்றிருந்தது. இதை காசு கொடுத்து வாங்குவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. கொடுக்காப்புளி மரம், சீனி புளியங்கா மரம், கோணக்காய் மரம் என இதற்குப் பல பெயர்கள் உண்டு. இந்தியில் இதை ஜங்கிள் ஜிலேபி என்று அழைப்பார்கள். நாங்கள் சிறுவர்களாக இருக்கும்பொழுது எங்கள் வீட்டு வேலியோரம் பெரிய கொடுக்காப்புளி மரம் உண்டு. அதன் முட்களுக்கும் கீழே விழும் குப்பைகளுக்கும் பயந்து வேலி ஓரம் இருந்தது.

மதிய வேளையில் ஆடு மேய்ப்பவர்கள் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி, (அப்போதெல்லாம் காலிங் பெல் கிடையாது) ‘கொஞ்சம் கிளையை உடைச்சுக்கவா?’ என்று கேட்பார்கள். அம்மாவும் ‘தாராளமாக ஒடச்சுக்கோ குப்பையாவது கொஞ்சம் குறையும்’ என்பார்கள். அதில் காய்க்கும் காய்களை நாங்கள் தொரட்டி கொண்டு பறித்து சாப்பிடுவோம். துவர்ப்பு, இனிப்பு கலந்த சுவையில் அருமையாக அது இருக்கும்.

ஓரளவுக்கு பழுத்த நன்கு சிவந்த பழங்களை அணில்களும், பறவைகளும் தின்றுவிடும். நமக்கு எஞ்சுவது கொஞ்சம்தான் என்றாலும் அதை தொண்டை அடைக்க சாப்பிட்டது இன்றும் நினைவில் உள்ளது. இன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த மரங்களை எங்கே நடுவது? வீடுகளும் நெருக்கமாக அருகருகில் அமைந்து விடுவதால் இந்த மரத்திற்கு இடமில்லாமல் போய்விட்டது.

இதையும் படியுங்கள்:
கணையப் புற்றுநோயின் அறிகுறிகளும் காரணங்களும்!
Jungle Jalebi

இருக்கும் ஒன்றிரண்டு தனி வீடுகளில் வசிப்பவர்களிடம் இருந்தும், ‘வண்டி நிறுத்த இடம் போதவில்லை, குப்பை விழுகிறது யார் பெருக்குவது? முள் குச்சிகள் விழுந்து காலைப் பதம் பார்க்கிறது’ என்று விதவிதமான காரணங்கள் அடுக்கப்படுகின்றன. நமக்குத்தான் சுற்றுச்சூழலை பற்றிய சிந்தனை சிறிதும் எழுவதில்லையே! எல்லா மரங்களையும் அழித்து உலகை வெப்பம் மிகுந்த பகுதியாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்பொழுதெல்லாம் மரங்களைப் பற்றி மனிதர்கள் அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. அந்த மரத்தின் நிழல், அதில் வாழ்ந்த பறவைகள், பழங்களைத் தேடி வரும் அணில் போன்ற சிறு விலங்கினங்கள் இப்படி அனைத்தையும் நினைத்துப் பாராமல் சுயநலமாக வாழப் பழகிவிட்ட நாம் இன்னும் சிறிது காலங்களில் முதுகில் ஆக்ஸிஜன் பைகளை சுமந்து கொண்டு செல்லத்தான் போகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com