
நாகரீகம் வளர வளர மனிதர்களை தவிர மற்ற விலங்குகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து போயுள்ளன. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஆப்பிரிக்கா முழுவதும் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு சரிந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் முன்னேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்ததுதான் யானைகள் வாழிடம் இல்லாமல் அழிந்துபோக முக்கிய காரணமாக உள்ளது.
1960களின் பிற்பகுதியில் ஆப்பிரிக்காவில் யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது, யானைகளை கணக்கெடுப்பது என்பது மிகவும் ஆபத்தான வேலையாகும். இந்த சவாலான பணியை அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
ஆப்பிரிக்காவில் அடிக்கடி நடக்கும் உள்நாட்டுப்போர், இனக்குழு சண்டைகளினால் பல நாடுகளில் அவ்வப்போது யானைகளின் கணக்கெடுப்பு பாதிக்கப்படுகிறது அல்லது நிறுத்தப்படுகிறது. தொலைதூரப் வனப்பகுதிகளுக்குச் செல்வதற்கு தளவாடம், நிதி தேவைப்படுவதால், அவ்வப்போது கணக்கெடுக்கும் பணியில் தொய்வும் ஏற்படுகிறது. இதனால், ஆப்பிரிக்கா முழுவதும் யானைகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் உறுதியாக இருக்காது.
ஆனால், பொதுவான எண்ணிக்கையின் சராசரி பெரும்பாலும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் மற்றும் அதன் ஆப்பிரிக்க யானை நிபுணர்கள் குழுவால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தரவுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு புதிய ஆய்வு 1325 கணக்கெடுப்பு தரவுகளிலிருந்து, கடந்த 50 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் யானைகளின் எண்ணிக்கை எவ்வாறு குறைந்தது என்பதை காட்டுகிறது. ஆப்பிரிக்காவில், காட்டு யானை, சவன்னா யானை என்ற இரண்டு வகையான யானைகள் உள்ளன. 1964 மற்றும் 2016 க்கு இடையில் ஆப்பிரிக்க யானைகள் கடுமையான எண்ணிக்கையில் அழிந்துள்ளன.
ஆப்பிரிக்க சவன்னா யானைகளின் சராசரி எண்ணிக்கை விகிதம் 70% குறைந்துள்ளது. காட்டு யானைகளின் எண்ணிக்கை 90% மேலாகக் குறைந்துள்ளது. இது ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது.
ஐரோப்பியர்களின் காலணி ஆதிக்கம் காரணமாக வனங்கள் மற்றும் வனஉயிர்கள் அழிக்கப்பட்டதில் இருந்து, யானைகளின் பேரழிவுக் காலம் தொடங்கியது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆப்பிரிக்கா முழுவதும் அதிகரித்த வேட்டையாடலின் அளவு, மனித மக்கள்தொகையின் இரட்டிப்பான வளர்ச்சி விகிதம், அதனால் ஏற்பட்ட நிலப்பரப்பு மாற்றங்கள் ஆகியவற்றால் யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதில் சவன்னா யானை இனங்கள் அழிந்துவரும் இனமாகவும், காட்டு யானை இனங்கள் மிகவும் அழிந்துவரும் இனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் மட்டும் யானைகளின் எண்ணிக்கை சரிவில் இல்லாமல் இருந்தது. குறிப்பாக போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான சவன்னா யானைகளைக் கொண்டுள்ளது.
துணை சஹாரா பகுதியில் உள்ள அனைத்து சவன்னா யானைகளின் எண்ணிக்கையும் அழிவை காட்டின. சாட், நைஜீரியா, கேமரூன் மற்றும் மாலி நாடுகளில் சவானா யானைகள் அழிந்து போயுள்ளன. ஒரு காலத்தில் பெரும்பாலான யானைகள் வசித்து வந்த கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் வேட்டையாடப் படுவதால் கடுமையான அழிவுகளை யானைகள் சந்தித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரும். இதனால் ஆப்பிரிக்க காடுகள் பெருமளவு அழிக்கப்படலாம். யானைகள் புதிய வனத்தினை உருவாக்கவும், இயற்கை சமநிலையை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பவை, யானைகளின் அழிவு, எதிர்காலத்தில் புதிய பாலை நிலங்களை உருவாக்கலாம்.
அதனால், யானைகளை பாதுகாப்பது மிக அவசியம். பெருகி வரும் மக்கள் தொகையை வனங்களை அழிக்காமல் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க தேர்ந்தெடுக்க வேண்டும், வேட்டைக்காரார்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் , இடைநிலை மண்டலத்தில் போதுமான கண்காணிப்பை பிராந்திய அரசுகள் செயல்படுத்த வேண்டும்.