
விவசாயத்தில் மகசூலை அதிகரிக்க பல யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. மகசூல் அதிகரித்தால் மட்டுமே விவசாயிகளால் லாபத்தைப் பார்க்க முடியும். மண்ணின் தரம் மற்றும் உரங்கள் என பல்வேறு காரணிகள் மகசூலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தாலும், அடிப்படையில் விதையின் தரமும் முக்கியம். விதைகள் நல்ல முளைப்புத் திறனைக் கொண்டிருந்தால் மட்டுமே மகசூலைப் பெருக்க முடியும். தரமற்ற விதைகளை விதைத்து விட்டு, என்னதான் யுக்திகளைக் பயன்படுத்தினாலும் மகசூலில் முன்னேற்றம் இருக்காது. அவ்வகையில் தரமான விதைகள் எவ்வளவு ஈரப்பதத்தில் இருக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
விவசாயத் துறையில் மகசூலைப் பொறுத்து தான் வருமானம் இருக்கும். இப்படியான சூழலில் விவசாயத்தில் இருக்கும் வளைவு நெளிவுகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயலாற்ற வேண்டியது அவசியம். விதை, மண், தண்ணீர் மற்றும் உரம் என அனைத்துமே மகசூலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் தரமான விதைகள் கிடைக்கின்றனவா என்றால் கேள்விக்குறி தான். நாட்டு விதைகள் அழிந்து வரும் நிலையில், சந்தையில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அதிகளவில் விற்பனையாகின்றன.
நாட்டு விதைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதே நேரம் விதைகளின் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும். விதைகளின் தரமானது, அதன் ஈரப்பத அளவைப் பொறுத்தே அமைகிறது. விதையின் ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, அதன் தரமானது பாதிக்கப்படும். விதைகளின் தரம் குறைந்தால், மகசூல் குறைந்து வருவாயில் இழப்பு ஏற்படும். இதனைத் தவிர்க்க விதைகளின் ஈரப்பத அளவை சரியாக பராமரித்தல் வேண்டும்.
ஒவ்வொரு விதமான பயிர்களுக்கும், தனித்தனியாக ஈரப்பத அளவை இந்திய வேளாண் துறை நிர்ணயித்துள்ளது. நெல் விதைகள் 13% ஈரப்பதத்துடனும், கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் ராகி உள்ளிட்டவற்றின் விதைகள் 12% ஈரப்பதத்துடனும் இருத்தல் வேண்டும். எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயறு வகை விதைகள் 9% ஈரப்பதத்துடன் இருத்தல் வேண்டும்.
சரியான ஈரப்பதத்துடன் விதைகளை சேமித்து வைக்கும் போது, பூஞ்சாண் மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்க வேண்டும். நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகள், பிற ரக கலப்பு இல்லாமலும், சரியான ஈரப்பதத்திலும் இருக்க வேண்டியது அவசியம். விதைகளின் ஈரப்பதத்தை அறிய அருகிலுள்ள விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகலாம். ஒரு விதை மாதிரியைப் பரிசோதனை செய்ய ரூ.30 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
விதைகளை கடைகளில் வாங்குவதைக் காட்டிலும், விவசாயிகளே தயாரிக்க முன்வர வேண்டும். அறுவடை காலத்தில் விதைக்காக சிறிது பயிர்களை ஒதுக்கலாம். பயிர்கள் முற்றிய நிலையில் விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். அடுத்த சாகுபடிக்கு இப்போதே விதைகளை உருவாக்கி விட்டால், விதைக்கான செலவைக் குறைக்க முடியும். விதைகளை உருவாக்கிய பிறகு அதனைப் பாதுகாப்பாக சேமிக்கவும் வேண்டும்.
அன்றைய காலத்தில் மாட்டுச் சாணத்தில் விதைகளை பாதுகாத்து வந்தனர். இப்படிச் செய்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு விதைகள் தரமாக இருக்கும். குறைந்த அளவிலான விதைகளை சேமிக்க இம்முறை பயன்படும். அதிகளவிலான விதைகளை சேமிக்கும் போது வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்படலாம்.