நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது நீண்ட நாட்களாகவே நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் இருக்கும். நெடுஞ்சாலைகளின் நடுவே ஒரு தடுப்பு சுவர் ஒன்று இருக்கும் , இது இருபுறமும் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பிற்காக நடுவே அது கட்டப்பட்டுள்ளது என்பதை அறிவோம். அதன் நடுவில் உள்ள தொட்டி போன்ற அந்த தடுப்பு சுவர்களில் மண் கொட்டி, அதில் அரளிச் செடிகளை நட்டு வளர்ப்பதை பார்த்திருப்போம். எதற்காக எல்லா நெடுஞ்சாலைகளிலும் அரளிச்செடிகளை மட்டுமே வளர்க்கின்றனர் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்திருக்கும்.
தொடக்க காலங்களில் சாலைகளின் இரு புறமும் புளிய மரங்களை நட்டு வைப்பது நடைமுறையாக இருந்தது. அந்த காலத்தில் பலர் அதை வேடிக்கையாக கூறுவார்கள் " பிரேக் பிடிக்காத லாரிகளுக்காக சாலைகளின் இருபுறமும் புளிய மரங்களை நட்டு வைத்துள்ளனர்" என்று. ஆனால் , அதன் உண்மையான காரணம் மரங்கள் நிழல் தரும் என்பது தான். இந்த நடைமுறை அசோகர் காலத்தில் இருந்தே உள்ளது.
தற்போது நெடுஞ்சாலைகளின் நடுவில் வளர்க்கப்படும் அரளிச் செடிகளின் நோக்கம்? என்ன என்பதை அறிந்து கொள்வோம். பெரும்பாலும் அரளிச்செடிகளை பார்க்கும் பலரும் , அது அழகிற்காக நடப்பட்டுள்ளது என்று தவறாக நினைக்கிறார்கள் , காரணம் அரளிச் செடிகளின் இலைகள் அழகான வடிவம் கொண்டது , மேலும் அதன் சிவப்பு நிற பூக்கள் அனைவரையும் கவரக்கூடியது. அறிவியல் ரீதியாக இதை பார்ப்போம்.
1. வாகனங்களின் ஒளிச்சிதறலைத் தடுத்தல் (Anti-Glare)
இரவு நேரங்களில் எதிர்ப்புறங்களில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் , ஓட்டுனரின் கண்களை கூசச் செய்யும். இதனால் ஓட்டுனருக்கு கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நடுவில் உள்ள தடுப்பு சுவரில் வளரும் அரளிச்செடிகள் அடர்த்தியாக இருப்பதால் அவை ஒளி சிதறல்களை தடுத்து விபத்துகளை குறைக்கின்றன.
2. வறட்சியைத் தாங்கும் திறன்
இந்த செடிகள் வறட்சியை தாங்கும் திறன் கொண்டவை , இவற்றிற்கு தினசரி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ச்சியான பராமரிப்பு எதுவும் தேவைப்படாததால் , இந்த செடிகளை வளர்க்க பொருளாதாரம் செலவிடப்படாது. மேலும் இவை சாலையின் மாசையும் புகையையும் தாண்டி வளரக்கூடியவை.
3. கால்நடைகளிடமிருந்து பாதுகாப்பு
மற்ற செடிகளை வளர்த்தால் கால்நடைகள் எளிதில் மேய்ந்து விடும். பெரும்பாலும் அரளிச் செடிகளை ஆடு, மாடு போன்றவை மேய்வதில்லை. கால்நடை வளர்ப்போர் விஷம் கொண்ட அரளிச்செடிகள் இருப்பதால் நெடுஞ்சாலை பக்கம் கால்நடைகளை போக விட மாட்டார்கள்.
4. சுற்றுச்சூழல் நன்மைகள்
அரளிச் செடிகள் வாகனங்கள் எழுப்பும் அதிகப்படியான சத்தத்தை உறிஞ்சி, ஒலி மாசைக் குறைக்கின்றன. காற்றில் உள்ள
கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் தூசுகளை உறிஞ்சி , அதற்குப் பதில் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
இது எப்போது தொடங்கப்பட்டது?
அரளிச் செடிகளை நெடுஞ்சாலைகளில் வளர்க்கும் திட்டத்தை முதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றி வந்தன. இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பசுமையை பராமரிக்கும் திட்டங்கள் நெடுங்காலமாக இருந்தாலும் , 1990 களில் தான் அரளிச் செடிகளை நடும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
நடைமுறையில் உள்ள நாடுகள்:
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ,தேசிய நெடுஞ்சாலைகளில் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களில் அரளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. அமெரிக்காவில் கலிபோர்னியா போன்ற வெப்பமான மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ளது. இது தவிர சீனா , சவுதி அரேபியா , ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.
எச்சரிக்கை:
அரளிச்செடிகள் நெடுஞ்சாலைகளின் நண்பனாக இருந்தாலும் , அதனால், சில பயன்கள் இருந்தாலும் , அது அதிக விஷமுள்ள ஒரு தாவரம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் இலைகளையும் , பூக்களையும் , விதைகளையும் மனிதர்களோ அல்லது விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.