பூ பூக்கும்; ஆனால் காய் காய்க்காத அதிசய மரம் உள்ள சிவன் கோயில்!

Kodumudi Mummoorthy Temple
Kodumudi Mummoorthy Temple
Published on

மிழ்நாட்டிலேயே மும்மூர்த்திகளைக் கொண்ட ஒரே கோயில் என்ற பெருமையைப் பெற்றது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் ஆலயம். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடுமுடி என்னும் பகுதியில் இது அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோர் ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கின்றனர்.

திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருக்கிறார் என்று சொல்லப்படுவது போலவே, இங்கு மலையின் முடியாக சிவன் இருக்கிறார் என்று கருதப்படுவதாலேயே இது ‘கொடுமுடி’ என்ற பெயரைப் பெற்றதாம். இங்கு காட்சி தரும் சிவன் மகுடேஸ்வரராகவும், அம்பிகை வடிவுடைய நாயகியாகவும் காட்சி தருகின்றனர். இத்தலத்தின் லிங்கம் மிகவும் சிறியது. அகத்திய மாமுனிவர் இந்த லிங்கத்தை தழுவியதால் உண்டான கைவிரல்களை இன்றும் தரிசிக்கலாம்.

இக்கோயில் காவிரி ஆற்றின் மேற்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னிதிகளும், மூன்று வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் மூன்று மடங்கான ஆசிர்வாத பலன்கள் கிடைக்கும். பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். மகுடேஸ்வரரான சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவும் இந்தத் தலத்திற்கு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
குங்குமப் பூ பற்றி அறிய வேண்டிய அரிய தகவல்கள்!
Kodumudi Mummoorthy Temple

இக்கோயிலில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழைமை வாய்ந்த வன்னி மரம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால், காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மறு பக்கம் முள் இருக்காது. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெட்டுப்போகாது. மூன்று முகம் கொண்ட பிரம்ம தேவன் இந்த வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். மேலும், இந்த வன்னி மர இலையை பழநி பங்குனி உத்திரம் திருவிழாவிற்கு தீர்த்தக் காவடி எடுக்கும் பக்தர்கள் காவிரி நீரில் போட்டுதான் காவடி சுமந்து இன்றும் பாத யாத்திரை செல்கிறார்கள்.

இக்கோயிலில் வேப்ப மரமும், அரச மரமும் இணைந்திருக்கும் இடத்தில் முழுமுதற் கடவுள் விநாயகர் அமர்ந்துள்ளார். இந்த விநாயகரை காவிரி நீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடை விலகும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் அப்பேறு வாய்க்கப்பெறும் என்று நம்பப்படுகிறது.

வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோயில் அமைந்துள்ளது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பிப் பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடிய பின் கோயிலுக்குச் செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
பிரபஞ்சத்தை வெல்லும் சக்தி தரும் மௌன விரதம்!
Kodumudi Mummoorthy Temple

இங்கு மூலவர் வீரநாராயணப் பெருமாளை பார்த்தபடி கருடாழ்வார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாள் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் 12 ஆழ்வார்கள், பரமபதநாதர், ராமானுஜர், நாகர், வேங்கடாசலபதி, ஆஞ்சனேயர் ஆகியோரும் உள்ளனர். இக்கோயிலின் ஆஞ்சனேயர் சற்று வித்தியாசமாக கோர பல்லோடு காட்சியளிக்கிறார். இங்கு மஹாலக்ஷ்மி தாயாருக்கு தனிச் சன்னதியும் உள்ளது. இந்த கோயிலின் மேற்கூரையில் ராசி சக்கரங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com