

கொசுக்கள் பூச்சியினத்தை சேர்ந்தவை ஆகும். இவை, டைனோசர் காலத்திலிருந்தே இருந்திருக்கின்றன. ஆக, இவை 210 மில்லியன் ஆண்டுகள் பழைமையானவை. கி.மு.300 ஆண்டுகளுக்கு முன்பே கொசுக்களினால் நோய் பரவும் என்பதற்கான ஆதாரங்களும், குறிப்புகளும் கிடைத்துள்ளன. ஆனால், அந்தக் காலத்தில் இருந்த கொசுக்களுக்கும் இப்போதுள்ள கொசுக்களுக்கும் பரிணாம மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கொசு இனங்களில் சுமார் 3,500 சிற்றினங்கள் இருக்கின்றன. சில நாட்டில் நோயை பரப்புவனவாகவும், சில காட்டில் நடமாடுபவர்களிடமும், அங்குள்ள விலங்குகளிடம் நோயைப் பரப்புவனவாகவும் உள்ளன.
கொசுக்கள் ஆப்பிரிக்காவில் உருவாகி, உலகமெங்கும் பரவியதாகக் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் தென் அமெரிக்க மக்கள்தான் கொசுக்களால் பரவும் நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆண் கொசுக்கள் சைவம். இவை தாவரச் சாற்றை மட்டுமே பருகும். பெண் கொசுக்கள்தான் அசைவம். மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் ரத்தத்தை உறிஞ்சும் பழக்கத்தை பழகி விட்டன. தங்களது முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசுக்கள் ரத்தம் குடிக்கின்றன.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) வெளியிட்ட தகவலின்படி, உலகில் மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினங்களின் பட்டியலில் 'கொசு' முதலிடத்தில் உள்ளது. சிங்கம், புலி போன்ற விலங்குகளை விடவும், ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் முதல் 10 லட்சம் மனிதர்களின் உயிரிழப்புக்குக் கொசுக்களே காரணமாகின்றன. இவை பரப்பும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களே இந்த இறப்புகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
2024ம் ஆண்டு பிரேசில் கடுமையான டெங்கு பரவலை எதிர்கொண்டது. உலகில் பதிவான 80 சதவிகித டெங்கு தொற்று பிரேசிலில் பதிவானதாகும். இதனை எதிர்த்து போராடத் திட்டமிட்ட பிரேசில், கொசுக்களை முற்றிலும் அழிப்பதற்கு பதிலாக அதன் உயிரியலை மாற்ற திட்டமிட்டது.
இதற்காக ‘வோல்பாச்சியா’ என்ற முறையை கையில் எடுத்துள்ளனர். இந்த முறையில் தொழிற்சாலையில் வளர்க்கப்படும் கொசுக்கள் வோல்பாச்சியா என்ற பாக்டீரியாவுடன் உருவாக்கப்படுகிறது. இதனால் கொசுக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த பாக்டீரியா, கொசுவின் உடலில் டெங்கு வைரஸ் உருவாகுவதை தடுக்கும். இந்த வோல்பாச்சியா கொசு மனிதர்களை கடிக்கும்போது, அவற்றால் டெங்குவை மனிதர்களுக்கு பரப்ப முடியாது.
இந்த கொசுக்களை திறந்தவெளியில் பரவவிடும்போது, அது இயற்கையான மற்ற கொசுக்களுடன் இணைந்து, வோல்பாச்சியா பாக்டீரியாவை அடுத்த சந்ததிக்கு கடத்துகிறது. இதன் மூலம், டெங்குவை பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை நாளடைவில் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே இந்தோனேசியா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் வோல்பாச்சியா முறை வெற்றிகரமாக செயல்பட்டு, 70 சதவிகித டெங்கு நோயாளிகளை குறைக்க உதவியது.
இதன் காரணமாக பிரேசிலின் சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள காம்பினாஸ் என்ற நகரத்தில், 1300 சதுர மீட்டர் பரப்பளவில் கொசுக்கள் உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. உலக கொசு திட்டத்தின் (WMP) கீழ் இயங்கும் இந்த தொழிற்சாலையில், ஒவ்வொரு வாரமும் 190 மில்லியன் ஏடிஸ் எகிப்தி கொசுக்களை உற்பத்தி செய்ய முடியும்.
இதற்கு வழிகாட்டியது தாய்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் ஆய்வில் 'புரோட்ட ஸோன் ' எனும் வைரஸ் கிருமிகளை ஒட்டுண்ணியுடன் பெண் கொசுக்கள் உடலில் புகுத்தி கருவில் இருக்கும் பெண் கொசுக்கள் முட்டைகளை அழித்து, அடுத்த தலைமுறைக் கொசுக்களை பிறக்காமலேயே தடுத்திடும் முயற்சியில் முதல் முறையாக வெற்றி பெற்றதுதான்.
ரஷ்யாவில் பெரெஸ்னிகி (Berezniki) என்ற நகரில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் ‘கொசு திருவிழா’ (Mosquito Festival) என்பது ஒரு வேடிக்கையான, கேலிக்குரிய விழாவாகும். அங்கு பெண்கள் கொசுக்கடியால் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று கணக்கிடப்படுகிறது, மேலும் கொசுக்களைப் பிடிப்பது போன்ற போட்டிகளும் உண்டு. இந்தத் திருவிழாவில் யாரை அதிகம் கொசுக்கள் கடிக்கிறதோ அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இது வேடிக்கைக்காக நடத்தப்படும் ஒரு விழா, கொசுக்கடியின் தீவிரத்தை உணர்த்தும் ஒரு வினோதமான கொண்டாட்டம்.