

அமேசான் காடுகள் என்றாலே மர்மங்களின் பெட்டகம் தான். அங்குள்ள ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு நதியும் ஏதோ ஒரு ரகசியத்தைச் சுமந்து கொண்டிருக்கிறது. நாம் டிஸ்கவரி சேனல்களில் பார்க்கும் அனகோண்டா பாம்புகளைப் பற்றித் தமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், இயற்கை மீண்டும் ஒருமுறை மனித அறிவியலைத் திகைக்க வைத்துள்ளது.
ஹாலிவுட் பிரபலம் வில் ஸ்மித் கலந்து கொண்ட ஒரு படப்பிடிப்புத் தளத்தில், எதிர்பாராத விதமாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. அது, அமேசானின் ஆழமான நதிகளில் மறைந்திருந்த ஒரு புதிய வகை ராட்சத அனகோண்டா பாம்பு.
National Geographic சேனலுக்காக 'போல் டு போல்' (Pole to Pole) என்ற ஆவணப்படத்தை எடுக்கப் புகழ்பெற்ற நடிகர் வில் ஸ்மித் அமேசான் காட்டிற்குச் சென்றிருந்தார். அவருடன் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரையன் ஃபிரை தலைமையிலான ஆய்வுக் குழுவும் சென்றது.
இது வெறும் படப்பிடிப்பாக மட்டும் இல்லாமல், ஒருத் தீவிரத் தேடுதல் வேட்டையாகவும் மாறியது. அங்கிருக்கும் 'வாவோரணி' (Waorani) என்ற பழங்குடியின மக்களின் உதவியோடு சுமார் பத்து நாட்கள் நதி மற்றும் சதுப்பு நிலங்களில் ஆய்வு நடத்தினர்.
புதிய இனம்!
இத்தனை நாட்களாக உலகம் முழுவதும் ஒரே ஒரு வகை 'பச்சை அனகோண்டா' இனம் மட்டும்தான் இருப்பதாக உயிரியல் வல்லுநர்கள் நம்பி வந்தனர். ஆனால், இந்த நம்பிக்கையை உடைத்தெறிந்தது இந்த ஆய்வு. மரபணு ரீதியாக வேறுபட்ட மற்றுமொரு அனகோண்டா இனம் இருப்பதை இவர்கள் உறுதி செய்துள்ளனர். இதற்கு Northern Green Anaconda என்று பெயரிட்டுள்ளனர். இது அமேசானின் வடக்குப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
மலைக்க வைக்கும் பருமன்!
ஆய்வாளர்கள் கையில் சிக்கிய ஒரு பாம்பின் நீளம் கிட்டத்தட்ட 21 அடியை நெருங்கியது. ஆனால், இது ஆரம்பம் தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பாம்புகள் 24 அடிக்கும் அதிகமான நீளத்தில் வளரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பேருந்தை விட நீளமானது. இந்த வகை பாம்புகள் முற்றிலும் நீருக்கு அடியில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளன. காட்டில் உள்ள மற்ற எந்த விலங்கையும் விட இவை வலிமையானவை மற்றும் ஆபத்தானவை.
பழங்குடியினரின் நம்பிக்கை!
அமேசான் பழங்குடியின மக்கள் பல தலைமுறைகளாக, "காட்டின் ஆழத்தில் மிகப்பெரிய பாம்புகள் உள்ளன" என்று கூறி வந்தனர். அதை நவீன உலகம் வெறும் கட்டுக்கதை என்று ஒதுக்கித் தள்ளியது. ஆனால், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு அவர்களின் பாரம்பரிய அறிவை மெய்ப்பித்துள்ளது. 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த இரண்டு அனகோண்டா இனங்களும் தனித்தனியாகப் பிரிந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட பயணம், இன்று உயிரியல் வரலாற்றில் ஒரு முக்கியப் பக்கத்தை எழுதியுள்ளது. 24 அடி நீளமுள்ள ஒரு உயிரினம், இத்தனை நூற்றாண்டுகளாக மனிதர்களின் கண்களில் படாமல் மறைந்திருந்தது என்பது அமேசான் காடுகளின் அடர்த்தியையும், பாதுகாப்பின் அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது.