

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனிக்கட்சி துவங்குவது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை துவக்கிவிட்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பா.ஜ. முயற்சித்தது. ஆனால் கட்சியிலோ, கூட்டணியிலோ பன்னீர்செல்வத்தை சேர்ப்பதற்கு தயாராக இல்லை என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நேற்று பன்னீர்செல்வம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது அடுத்த கட்ட நடவடிக்கையாக தனிக்கட்சி அமைப்பது பற்றியும், யாருடன் கூட்டணி அமைப்பது போன்ற விஷயங்களைப் பற்றியும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியானது. அத்துடன் இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்திடம் தேர்தல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பன்னீர்செல்வம் அவர்கள், "தை பிறந்தால் வழி பிறக்கும், பொறுமையாக இருங்கள்" என்று பதில் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை துவங்கிவிட்டன. அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க இணைந்துள்ளது. ஆனால் கட்சியிலோ, கூட்டணியிலோ பன்னீர்செல்வத்தை சேர்க்க மாட்டோம் என்று பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளதால், பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் தனி கட்சி அமைப்பது பற்றி ஆலோசித்து வருகிறார்.